Blog Stats

  • 128,337 hits
மே 17, 2024

childhealthtoday-குழந்தைநலம்

குழந்தை நலம்;குடும்ப பலம்

போட்டித்தேர்வுகளும் மாயும் குருத்துகளும்

1 min read
ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு முடிவு வரும் போது அனைவருக்கும் வயிற்றில் பயம் கவ்வும் .கனவுகளை மட்டும் சுமந்து கொண்டு பல ஆண்டுகளாக போட்டித்தேர்வுகளுக்கு  தயாரான மாணவ மாணவியர் கூட்டம்.மதிப்பெண்களை போதுமான அளவு எடுக்க இயலாமல் உளைச்சலுக்கு ஆளாகி மன அழுத்தத்தினால் உயிரை மாய்த்துக் கொள்ளும் இளம் குருத்துகள் எத்தனை இந்த வருடம் என்பது தான் அந்த பயம் .

ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு முடிவு வரும் போது அனைவருக்கும் வயிற்றில் பயம் கவ்வும் .கனவுகளை மட்டும் சுமந்து கொண்டு பல ஆண்டுகளாக போட்டித்தேர்வுகளுக்கு  தயாரான மாணவ மாணவியர் கூட்டம்.மதிப்பெண்களை போதுமான அளவு எடுக்க இயலாமல் உளைச்சலுக்கு ஆளாகி மன அழுத்தத்தினால் உயிரை மாய்த்துக் கொள்ளும் இளம் குருத்துகள் எத்தனை இந்த வருடம் என்பது தான் அந்த பயம் .

ஒவ்வொரு குழந்தையும்  பெற்றோர்களுக்கு மிகச்சிறந்த படிப்பாளி .அவன் வகுப்பில் முதல். பள்ளிக்கூடத்தில் அவன் அதிக மதிப்பெண் எடுப்பவன். ஒரு ஊரில் இருக்கும் அனைத்து பள்ளிக்கூடங்களையும் கணக்கிட்டாலே அவனுடைய இடம் எங்கே என்பது புரிந்துவிடும்.அதையும் மீறி மாவட்ட அளவில் மாநில அளவில் இந்திய அளவில் மாணவர்களுக்கு பொதுவாக நுழைவுத் தேர்வுஎழுதும் போது எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காமல் போவது என்பது தெரிந்த விஷயம் தான் .

சிறு வயதில் இருந்தே ஒன்றை படிக்க நாம் சொல்லிக் கொடுத்தோம் அல்லது அவர்களே  ஆசைப்பட்டார்கள். இதைப் படிக்க வேண்டும் இதுதான் வாழ்க்கை. இதைத்த்தவிர  வேறு எதுவும் இல்லை  இரண்டு அல்லது மூன்று தேர்வு ஆண்டுகள் சிரமப்பட்டால் பின்னே பிரச்சனை எப்போதும் கிடையாது .வாழ்க்கையே சுகம் தான் என்ற நம்பிக்கையோடு குழந்தைகள் படிக்க வைக்கப்படுகின்றனர். பெற்றோர்கள் தங்களுடைய அபிலாசைகளை ,நிறைவேறாத தங்களது கனவுகளை குழந்தைகளின் மேல் திணிக்கிறார்கள் .கேட்டதை அனைத்தும் பெற்றுத் தரும் தந்தை தாயின் ஆசைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற ஆவல் குழந்தைக்கு இருப்பது இயல்புதான் இதனுடன் உறவினர்கள் அண்ட அயலர். நண்பர்கள் ஆகியவர்களின் எதிர்பார்ப்பும் தூண்டுதல்களும் மன அழுத்தத்தை தர ஆரம்பிக்கும் சில நேரங்களில் முதல் போட்டித் தேர்வில்  மதிப்பெண்கள் போதுமான அளவு பெறாவிட்டால் குத்திக்காட்டும் சொந்தங்களும் உனக்கெல்லாம் இது வராதப்பா! என்று சொல்லும் ஆசிரியர்களும் நம்மிடையே நிறைய இருக்கிறார்கள்

 

 

12-ம் வகுப்பு பொது தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்கு இன்று மதிப்பில்லை அதற்குப் பிறகு குறைந்தபட்சம் ஒரு ஆண்டு தனிப் பயிற்சி அதற்கு ஒரு லட்சத்திலிருந்து 2 லட்சத்திற்கு மேல் செலவு .வசதி இல்லாத பெற்றோர்களுக்கு இன்னும் ஒரு கடனாக சுமையாக இது ஏறும். அந்தக் கவலை மனதில் ஒரு புறம். வெற்றியே என்றும் பெற்றுக் கொண்டிருக்கும் தன்னால் எந்த தோல்வியும் தாங்கும்  திறமை கிடையாது என்பது குழந்தைக்கு புரிகிறது. எது கேட்டாலும் கிடைக்கிறது. எதிலும் தோல்வி இல்லை. எதையும் விடாமல் போவதில்லை என்ற சூழல். முயன்று தொடர்ந்து பயின்று தான் எழுதிய தேர்விவில் தோல்வி கிடைத்தால் குழந்தையினால் தாங்க முடியாமல் போகிறது.

 

நுழைவுத் தேர்வுகள் ஒரு மாணவனின் அறிவுத்திறனை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை .நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் சிறந்த மருத்துவர்களாக புரிந்தர்களாக அறிவியலாளர்களாக எப்போதும் திகழ்கிறார்கள் என்று யாராலும் உறுதிசொல்ல முடியாது. வெளிநாடுகளில் உள்ளது போல மருத்துவப் படிப்பிற்கு ஒரு விளையாட்டு \ இசைப் பயிற்சி அல்லது பண்பாட்டு கலை அறிவியல் பயிற்சி வேண்டும் என்ற கட்டாயமும் நமது ஊரில் இல்லை. இருந்தாலும் அதிலேயும்ஆளைப்பிடித்து சாதித்துக்கொள்ளலாம்

தற்பொதைய சூழல் திருப்பித் திருப்பிப் படிப்பது. படிப்பவை நீண்ட கால நினைவில் இல்லை .என்றாலும் தற்காலிக நினைவகத்தில் சேமிக்கும் படி இரவுத் தூக்கம் குறைவாகத் தூங்கி விரைவாக எழுந்து மறுபடியும் தேர்வுகள். தேர்வுகளின் மேல் தேர்வுகள் .புரிகிறதோ இல்லையோ புத்தகத்தில் உள்ளதை அப்படியே எழுதிப் பழகும் பழக்கம் .மாறுபட்ட கேள்வித்தாள்கள் .நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் மற்ற நுழைவுத் தேர்வு வினாக்களை எல்லாம் மறுபடியும் போட்டுப் பார்த்து புத்தியில் ஏற்றி வெற்றி வித்தை கற்றுக் கொள்பவர்கள்

இங்கு ஏராளமாக உள்ள தனிப் பயிற்சி நிலையங்களிலும், தனியாக பிளஸ் 2 விற்கு பிறகு ஒரு ஆண்டு படிக்கும் மாணவர்களும் தங்கள் அறிவுத்திறனை விருத்தி செய்வதை விட மனப்பாடப் திறமையை உயர்த்திக் கொள்கிறார்கள் புரிந்து படிப்பதை விட, அறிந்து தெளிவதை விட ,இந்தக் கேள்விக்கு இந்த வினா, இப்படி வந்தால் இப்படி எழுத வேண்டும் என்ற சூத்திரங்கள் மட்டும்தான் சொல்லித் தரப்படுகின்றன. குறித்த நேரத்தில் வெகுவேகமாக முடிவெடுத்து கேள்விகளையும் பதில்களையும் உடனடியாக

எழுதும் திறமை வளர்க்கப்படுகிறது .ஒவ்வொரு குழந்தைக்கு அவனுடைய திறன் என்ன? படிப்பிற்கு இந்த திறன் போதுமானதாக இருக்குமா? தோல்விகளையும் சவால்களையும் துன்பங்களையும் மேற்கொண்டு சமாளிக்குமா? இல்லை வெற்றியை மட்டும் தான் விரும்பி அது கிடைக்கவில்லை என்றால் மனம் தளர்ந்து விடுவார்களா?என்பதை எந்த கல்விக்கூடங்களும் பார்ப்பதில்லை. எனவே பெற்றோர்களின் ஆசைக்கிணங்க ,படிக்கக்கூடிய பாடங்கள் தனி வகுப்புகளின் பாடங்கள் என எந்த குழந்தைக்கு ஓய்வும் கிடைப்பதில்லை.

பள்ளிக்கூடத்தில் சிறு சிறு பிரச்சனைகள். ஆசிரியரின் கோபம் .தவறான புரிதலினால் திட்டும் ஆசிரியர் என எந்த சிரமங்கள் ஏற்பட்டாலும் தன்னைத்தானே தேற்றிக் கொள்ளவும் உதவுவதற்கும் நண்பர்கள் இல்லை. தன்னுடன் பயிலும் ஒவ்வொருவரையும் நண்பராக பார்ப்பதில்லை அனைவரும் அவனுடைய போட்டியாளர்களாக எதிரிகளாக மீற வேண்டியவர்களாக மாறிவிட்டார்கள் எனவே அவனைவிட நான் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அனைவருக்கும் இருக்கிறது. எவரிடமும் மனது விட்டு பேசுதல் இல்லை.சிறிய தவறுக்கெல்லாம் மனதுடைந்து போகாமல் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிப்பதற்குரிய சமநிலை மனது குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை அழுத்தமான சூழலில் இருந்து வெளிவர தனி\குழு விளையாட்டுக்கள் அல்லது மாலை நேரத்தில் தனி நேரம் என எதுவுமே ஒதுக்கப்படுவதில்லை.

தூக்கமின்றி எந்த ஒரு விளையாட்டும் இன்றி போண்டா கோழிகள் போல நிறைய குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள். விளையாடாத குழந்தைக்கு சரியான தூக்கம் இல்லாத காரணத்தால் மன அழுத்தம் அதிகரிக்கிறது இன்சுலின் மற்றும் கார்ட்டிசால் இயக்குநீர் அளவு எல்லை மீறி போகிறது. உடல் பருமன் ,இன்சுலின் மந்த நிலமை இரைப்பையில் கொழுப்பு, மிகு ரத்த அழுத்தம் என குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் தூரத்திலிருந்து இவர்களை அவர்கள் கழுத்தில் இருக்கும் கறுப்பின் மூலம் அடையாளம் கண்டு கொள்ளலாம்

அரசுகளும் கல்வி நிறுவனங்களும் தெரிந்தும் தெரியாதது போலும் ஒரு விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் முதல் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை ஒரு விளையாட்டு வகுப்பு தினமும் இருக்க வேண்டும் என்ற அறிவுரையை எந்த பள்ளிக்கூடமும் இந்தியாவில் பின்பற்றுவதில்லை .விளையாடும் நேரம் வீணான நேரம் என தவறாக எண்ணுகிறார்கள்.

Photo by Andrea Piacquadio on Pexels.com

படிப்பது நினைவில் கொள்ள, நினைவில் இருப்பதை நாள்பட்ட நினைவகத்தில் வைக்க விளையாட்டு தேவை. மூளையின் கழிவுகளை வெளியேற நல்ல உறக்கம் வர விளையாட்டு தேவை என்பது யாருக்கும் தெரிவதில்லை. எந்தத் தவறை ஆண்டாண்டு காலமாக செய்து வந்தார்களோ அதனை இன்னும் சிறப்பாக செய்கிறார்கள்..இப்படிப்பட்ட அழுத்தமான சூழ்நிலையில் வளரும் குழந்தைகள் நுழைவுத் தேர்வுகளில் போதுமான மதிப்பெண்கள் பெற இயலாவிட்டால் மனமுடைந்து போகின்றனர்

யாரோ ஒருவர் சில வார்த்தைகளை சொல்லிவிட்டால் வளர் இரு பருவத்தில் உள்ள முன் மூளை வளர்ச்சியில் அப்போதுதான் முனைந்து கொண்டிருக்கும் குழந்தைகள் மனது உடைந்து விடுகின்றனர் .திடீரென்று அவசரகதியில் சில செயல்களைச் செய்து விடுகிறார்கள். இவைதான் இந்த அசாதாரண இறப்புகளுக்குக் காரணம். அடிக்கடி கோபம் வருதல் ,மனநிலையில் மாற்றம் ஏற்படுதல், பேசாமல் இருத்தல் ,சோர்வாக இருத்தல், வழக்கம்போல் இல்லாமை, விளையாடாமல் படுத்தே இருப்பது என பல விஷயங்களைக் கொண்டு குழந்தைகள் மனத்தளர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்

 

இத்தகைய குழந்தைகளை அடையாளம் கண்டு உள மருத்துவரிடம் சிகிச்சை அளித்து ஆலோசனைகளைத் தந்தால் வெற்றிகரமான மாணவனாக அவனும் மாற இயலும். நுழைவுத் தேர்வுகளைத் தவிர எத்தனையோ விதமான படிப்புகளும் வேலை வாய்ப்புகளும் இன்று கொட்டிக் கிடக்கின்றன. பொது ஜன ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் சில குறிப்பிட்ட துறைகளை மட்டும் குறிவைத்து அவைகளை தூக்கிக் காண்பிப்பதன் மூலமாக மற்ற துறைகளின் மதிப்பு யாருக்கும் தெரிவதில்லை எனவே அனைத்து துறைகளையும் சரியான எடைத் தராசில் வைத்து போட்டுப் பார்த்து குழந்தைக்கு இருக்கும் ஆர்வத்தையும் அவனுக்கு இருக்கும் திறமைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு படிக்க வேண்டிய வழியினை காட்டுதல் நல்லது. அதற்குரிய அனுபவம் இல்லை என்றால் இந்த அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனையை பெற்று குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லுவது மூலம் லட்சக்கணக்கில் பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் இருப்பதைப் போல வரும் காலங்களில் மருத்துவ பட்டதாரிகளும் வேலை இல்லாமல் திரிவதை தடுக்கலாம் .

பொறியாளராக வேலை செய்வதை விட பெயிண்டிங் அடிப்பதில் நல்ல சம்பளம் கிடைக்கிறது என்று எங்கள் ஊரில் இரண்டு எம்.யீ.க்கள் படித்த பிறகு பெயிண்டிங் வேலை செய்கிறார்கள்.கலை அறிவியல் கல்லூரிகளில் 2 டிகிரி வாங்கியவர்கள் தினக்கூலிக்காக மரமேறி தேங்காய் போடுகிறார்கள் என்பதை அறிந்தபோது மனது வலித்தது

எனவே பெற்றோர்களே விழித்துக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட படிப்புகள் மட்டும் தான் சிறந்தவை மற்றவை மோசமானவை என்ற எண்ணத்தை கைவிட்டு வேலை வாய்ப்புகளை உள்ள அனைத்துத் துறைகளையும் குழந்தைகளுக்கு அறிவுறுத்துவோம் படித்த பிறகு ஆசையில்லாமல் வேறு வேலைக்கு போகக்கூடிய நிலைதான் இருக்கிறது தன் தொழிற் படிப்பினை மாற்ற விரும்பினால் அதைப் பற்றி கவலைப்படாமல் அவனுடைய ஆர்வத்தினை  ஒத்துக்கொண்டு படிக்க விடுவோம் இதன் மூலம் குழந்தைகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கற்றுக் கொண்டு,நன்கு தொழிலை செய்வதற்கும் சிறப்பாக வாழ்வதற்கும் வழி செய்வோம்!

About Post Author

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Copyright © All rights reserved.

Discover more from childhealthtoday-குழந்தைநலம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading