Blog Stats

  • 128,303 hits
மே 16, 2024

childhealthtoday-குழந்தைநலம்

குழந்தை நலம்;குடும்ப பலம்

ஆன்லைன் கேமிங்குக்கு சிறுவர்கள் அடிமையாவது ஏன்? அதற்கு தீர்வு என்ன?

1 min read

  • ஆன்லைன் கேமிங்குக்கு சிறுவர்கள் அடிமையாவது ஏன்? அதற்கு தீர்வு என்ன?
  • நன்றி; விஷ்ணுப்ரியா ராஜசேகர்.பிபிசி தமிழ்
ஆன்லைன் கேமிங்

ஒரு குடும்பத்தின் 14 வயது மூத்த மகன் இணைய விளையாட்டில் ஆர்வமாகி நாள் ஒன்றுக்கு 10-12 மணி நேரம் அதில் நேரத்தை செலவழிக்க தொடங்கியுள்ளார். பின் அதை பார்த்து 10 வயது இரண்டாம் மகனும் இணைய விளையாட்டை அதீதமாக விளையாட தொடங்கியுள்ளார்.

ஒரு கட்டத்தில் தங்களை பெற்றோர் கவனிக்காமல் இருப்பதற்காக அவர்கள் இருவருக்குள்ளும் இந்த பிள்ளைகள் சண்டை மூட்டி தங்கள் பக்கம் திரும்பாமல் பார்த்துக் கொண்டுள்ளனர்.

இப்படி ஒரு வித்தியாமான சூழலில் ஒரு குடும்பம் தன்னிடம் சிகிச்சைக்காக வந்ததாக தெரிவிக்கிறார் பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் கழகத்தின் மருத்துவ உளவியல் பேராசிரியர் மற்றும் ஷட் கிளினிக்கின் ஒருங்கிணைப்பாளர் மனோஜ் குமார் ஷர்மா.

இந்த பொதுமுடக்க காலத்தில் பதின் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் இடையே அதீதமாக இணைய விளையாட்டில் ஈடுபடுதல் (Binge gaming) என்ற நிலை அதிகரித்துள்ளதாக ஷட் கிளினிக் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இந்த ஷட் கிளினிக் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் கழகம் சார்பில் நடத்தப்படுகிறது. இங்கு தொழில்நுட்பத்திற்கு அடிமையாவது குறித்த பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படுகிறது.உலக சுகாதார நிறுவனம் 2018ஆம் ஆண்டிலேயே சர்வதேச நோய்களின் வகைப்பாட்டில் இணைய விளையாட்டால் வரும் பாதிப்பையும் சேர்த்துள்ளது.

இந்த இணைய விளையாட்டில் அதீத ஆர்வம் செலுத்துவது கோவிட் சமயத்தில் வளர்ந்து வரும் ஒரு பிரச்னை என்கிறார்கள் நிபுணர்கள்.

பொதுமுடக்கத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் இணைய விளையாட்டு குறித்த பிரச்னையால் ஒரு வாரத்தில் 6-7 பேர் வந்தால் இப்போது அது 8-12 பேராக அதிகரித்துள்ளது அதாவது கிட்டதட்ட 30-40 சதவீதம் வரை இணைய விளையாட்டு தொடர்பாக வரும் பிரச்னைகளுக்காக சிகிச்சை பெற வருபவர்களின் சதவீதம் அதிகரித்துள்ளது என்கிறார் மனோஜ் குமார் ஷர்மா.

அதிகரித்த காரணம்?

வெளியில் செல்வதற்கு தடை, பணி அல்லது கல்வி நிலையங்கள் வழக்கமாக இயங்காமல் இருப்பது, அதிகப்படியான நேரம் ஆகியவற்றால் பதின் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் இணைய விளையாட்டிற்குள் செல்ல நேரிடுகிறது என்கிறது ஷட் கிளினிக்கின் ஆய்வு.

மேலும் ஒரு நாளைக்கு 10-12 மணி நேரம் வரை இணைய விளையாட்டில் செலவழிக்கும் நிலை சில பதின் பருவத்தினரிடம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலைப்பேசி

அதேபோன்று தன்னிடம் சிகிச்சைக்காக வரும் குழந்தைகளின் பெற்றொரும் இந்த லாக்டவுன் சமயத்தில் இணைய விளையாட்டுகள் குறித்த ஆர்வம் தங்களது குழந்தைகளுக்கு அதிகரித்தாக தெரிவிக்கின்றனர் என்கிறார் மனோஜ் குமார் ஷர்மா.

ஆன்லைன் வகுப்புகள் அதற்காக அதிகரித்த ஸ்மார்ட் ஃபோன் பயன்பாடுதான் இணைய விளையாட்டுகளில் பதின் பருவத்தினர் அதிகம் மூழ்கியிருப்பதற்கான முக்கிய காரணம் என்கிறார் குழந்தைகள் மற்றும் பதின் பருவத்தினர் குறித்த மனநல நிபுணர் மருத்துவர் வெங்கடேஷ்.

இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் இந்த போக்கு அதிகரித்து வருகிறது. சமீபமாக 18 வயதுக்குட்பட்டவர்கள் வெள்ளிக்கிழமை வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ஒரே ஒரு மணி நேரம் மட்டுமே இணைய விளையாட்டில் ஈடுபட அனுமதிக்கப்படும் என சீனா தெரிவித்திருந்தது.

இளைஞர்கள் மத்தியில் கவலைக்குரிய விதத்தில் இந்த இணைய விளையாட்டு பழக்கம் அதிகரித்துள்ளதால் சீனா இந்த அறிவிப்பை வெளியிட்டது.

இதனை எப்போது நாம் addiction என்று சொல்கிறோம்?

எந்த தருணத்தில் ஒரு குழந்தை இந்த விளையாட்டிற்கு அடிமையாகிவிட்டது என்று கூறலாம் என்பதையும் இதற்கு பின் உள்ள மனோநிலையையும் விளக்குகிறார் மனோஜ் குமார் ஷர்மா.

  • எந்த ஒரு பலனும் தராத ஒரு செய்கையில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்ற விருப்பம்.
  • எப்போதெல்லாம் விளையாட தொடங்குகிறார்களோ அப்போதெல்லாம் அவர்கள் கட்டுப்பாட்டை இழந்துவிடுவது.
  • தொடர்ந்து இதில் ஈடுபடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து தெரிந்திருந்தும் அதில் ஈடுபடுவது.
  • இது எல்லாம் தென்பட்டால் நாம் ஒரு குழந்தை இந்த விளையாட்டிற்கு அடிமையாகிவிட்டது என்று சொல்லலாம் என்கிறார் அவர்.

எதனால் இணைய விளையாட்டை நாடுகிறார்கள்?

பெரும்பாலான சமயங்களில் இது `peer pressure` காரணமாக நடைபெறுகிறது. தமது நண்பர்கள் விளையாடினால் தானும் தொடர்ந்து அதில் விளையாட வேண்டும் என்ற அழுத்தம் உருவாகிறது. இல்லையேல் நண்பர்களிடத்திலிருந்து தாம் விலகியது போல ஒரு அச்ச உணர்வை அது தந்துவிடுகிறது.

இரண்டாவது கேமிங்கில் வரும் பரிசுகளும் அதில் கிடைக்கும் வெற்றிகளும் கொடுக்கும் மகிழ்ச்சி. புற உலகில் எளிதில் வெற்றிபெற இயலாத ஒரு குழந்தை இந்த கேமிங் மூலம் வெற்றியை பெற முயற்சிக்கிறது. ஒரு கட்டத்தில் இது புற உலகத்தை முற்றிலும் புறக்கணிக்கும் நிலைக்கு இழுத்து செல்கிறது.

நாளடைவில் சிலர் `நான் கேமிங்கில் சிறப்பாக செயல்படுகிறேன் இதையே நான் வாழ்க்கையாக தேர்ந்தெடுக்கலாம்` என்று நினைக்கிறார்கள் ஆனால் ஒரே சிலராலேயே அதில் சாதிக்க முடிகிறது.

கேமிங்

இதில் பெரிதாக சாதித்துவிட முடியும் என்ற எண்ணம் நாளடைவில் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் அது பரவாயில்லை என்ற நிலைக்கு தள்ளிவிடுகிறது.

யாரெல்லாம் எளிதாக இதில் பாதிக்கப்படுகிறார்கள்

பொதுவாக சுயகட்டுப்பாடு குறைவாக உள்ள குழந்தைகள், ஏற்கனவே குடும்பத்தில் இம்மாதிரியாக அடிமையாதல் பிரச்னை இருப்பது, போன்ற குழந்தைகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறார் மருத்துவர் வெங்கடேஷ்.

“அதே போன்று ஏற்கனவே சில மனநல பாதிப்புகள் இருக்கும் குழந்தைகளும் இதற்குள் எளிதாக சென்றுவிடுகிறார்கள் இம்மாதிரியான குழந்தைகளை அதிகம் இந்த விளையாட்டுக்கள் பாதிக்கிறது. எனவே இம்மாதிரியான சூழலில் முதலில் இம்மாதிரியான நிலைக்கு தள்ளிய காரணிகளை முதலில் கண்டறிந்து அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும்,” என்கிறார் அவர்.

எந்த ஒரு அடிமை பழக்கமும் மருத்துவ ரீதியாக, உளவியல் ரீதியாக, சமூக ரீதியாக என மூன்று வகையில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மருத்துவ ரீதியாக உடல் எடை அதிகரித்தல், ஒற்றை தலைவலி, அல்சர், தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

அதன்பின் உளவியல் ரீதியாக விளையாட்டில் ஈடுபடவில்லை என்றால் மன அழுத்தம் உருவாகிறது. பின் அது குறித்தே யோசித்து கொண்டு இருப்பது. பதட்டம், அதீத கோபம், அதீதமாக நடந்து கொள்வது ஆகியவை ஏற்படுகிறது.

சமூக ரீதியாக படிப்பில் ஆர்வம் குறைவது, வீட்டு வேலைகளில் ஈடுபடாத நிலை, நண்பர்கள் மற்றும் பெற்றொரோடு பேசுவது குறைந்துவிடுகிறது என விளக்குகிறார் மருத்துவர் வெங்கடேஷ்.

இதை எப்படி தடுப்பது? பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகள் இணைய விளையாட்டில் தீவிரமாக செல்வதை தடுப்பதன் முக்கிய பொறுப்பு பெற்றொருக்கு உள்ளது என்று கூறும் மனோஜ் குமார் அதற்கான வழிமுறைகளையும் அடுக்குகிறார்.

பெற்றோர் தொடக்கத்திலேயே குழந்தைகளிடம் வெளிப்படையாக பேச வேண்டும். அதேபோன்று குழந்தைகள் சொல்வதையும் எந்தவித முன் அணுமானமும் இல்லாமல் கேட்க வேண்டும்.

இரண்டாவது குழந்தைகளுடன் நேர்மறையான பொழுதுபோக்கை உருவாக்கி கொள்ள வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அதில் ஈடுபடுவது ஒரு ஆரோக்கியமான மனநிலையை குழந்தைகளிடத்தில் ஏற்படுத்தும்.

சிறுவன்

குழந்தைகளின் நடத்தை, உண்ணும் பழக்கம், அவர்களின் ஆர்வம், தூங்கும் வழக்கம் என இதுபோன்ற செயல்பாடுகளில் பெற்றோர் ஏதேனும் மாற்றத்தை கண்டாலோ அல்லது அதீத கோபம், வெறுப்பு ஆகியவை தென்பட்டாலோ குழந்தைகளுடன் உடனடியாக பேச வேண்டும் அல்லது ஏதேனும் தொழில்முறை ஆலோசகரை தொடர்பு கொள்ள வேண்டும்..

இம்மாதிரியான பிரச்னைகளை தொடக்கத்திலேயே கண்டறிந்துவிட்டால் மிக நல்லது என்கிறார் மருத்துவர் வெங்கடேஷ்.

“படிப்பு மட்டுமே குழந்தைகளுக்கு முக்கியம் என பெற்றோர் அழுத்தம் கொடுக்க கூடாது. பிள்ளைகளுக்குப் பிடித்தமான விஷயத்தில் அவர்களின் ஆர்வம் மேம்பட ஊக்குவிக்க வேண்டும்” என்கிறார் அவர்.

இணைய விளையாட்டில் ஒருவர் எத்தனை நேரத்தை செலவழிக்கிறார்கள் என்று கவனமாக இருத்தல் வேண்டும். அதுவும் இந்த விளையாட்டுகளில் ஈடுபடுவதால் தினசரி நடவடிக்கைகளை பாதிக்கும் விதமாகவோ அல்லது உடல் மற்றும் மன நலத்தில் பாதிப்பு ஏற்படுகிறது என்றாலோ நிச்சயம் கவனம் தேவை என்கிறது உலக சுகாதார நிறுவனம்

About Post Author

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Copyright © All rights reserved.

Discover more from childhealthtoday-குழந்தைநலம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading