Blog Stats

  • 128,340 hits
மே 17, 2024

childhealthtoday-குழந்தைநலம்

குழந்தை நலம்;குடும்ப பலம்

உடற்பருமன் உயிருக்கு எமன்!!

1 min read

ஆண்டுதோறும் மார்ச் மாதம் நாலாம் தேதியை உலக உடல் பருமன் நாளாக(WORLD OBESITY DAY)உலக சுகாதார நிறுவனம் கடைபிடிக்கிறது. வளர்ந்த நாடுகளில் மட்டுமின்றி உலகின் அனைத்து நாடுகளிலும் உடல் பருமன் நோய் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.

நம்முடைய எடையை உயரத்தின் ஸ்கொயரினால்(weight in kg divided by height in m2) வகுத்து கிடைக்கும் எண்ணை வைத்து இயல்பான எடை,(18.5-25)அதிக எடை(25-<39), உடல் பருமன் (>30)என பிரிக்கப்படுகிறது. உடல் பருமன் நோய் உள்ளவர்களில் முதல் நிலை(30-<35) இரண்டாம் நிலை(35-40) மூன்றாம் நிலை என சதைப்பருமனின் அளவு கணக்கிடப்படுகிறது.வளர்ந்த நாடுகளில்  மூன்றில் இரண்டு பேர் அதிக எடை மற்றும்  உடல் பருமன் பிரச்சனையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் பருமன் நோய் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய், மிகு இரத்த அழுத்தம்  இருதய  நோய்கள் உடல் நோய்கள் மன நோய்கள் , மற்றும் புற்று நோய்கள் பாதிப்பது அறிவியல் ஆராய்ச்சிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

உடல் எடை அதிகமாவதற்கு உண்ணும் உணவு, உடற்பயிற்சிமற்றும்  உறக்கம் போதாமை,இயக்கு நீர்களின் அதீத அளவு  எனப்  பல காரணங்கள் உள்ளன. அதிகமாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகள் நம் உடலில் சேரும்போது அவைகளில் உள்ள உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு  காரணமாக தேவைக்கு மேல் வெப்ப சக்தி உடலுக்கு கிடைக்கிறது. அதிகமாக கிடைக்கும் வெப்ப சக்தியினை உடலில் சுரக்கும்  இன்சுலின் இயக்குநீர் தேவைப்படும்வரை தசை மற்றும் ஈரலில் சேமிக்கப்படும் சர்க்கரையாக மாற்றுகிறது. அதையும் மீறி அதிகமாகச் சேரும் குளுக்கோஸினை உடற் கொழுப்பாகவும் ஈரல் கொழுப்பாகவும் மாற்றுகிறது. இந்த மாற்றுதலைச் செய்வதற்கு கணையச்சுரப்பி கடின வேலை செய்து அதிகச் சுரப்பினை அளிக்கிறது. இன்சுலின் இயக்குநீர் அதிகமாகச்சுரந்தாலும் இரத்தத்தில் அதிக அளவுள்ள சர்க்கரையின்   காரணமாக இன்சுலின் மந்த நிலைமை தொடர்கிறது .  இரத்தத்தில் அதிக சர்க்கரை மற்றும் ஈரல் கொழுப்பு மற்றும்  இன்சுலின் மந்த நிலைமை இவைதான் அதிக எடை மற்றும்  உடல் பருமன் நோய்க்கும் முக்கிய காரணமாகும். இவைகளின் காரணமாகவே மிகு இரத்த அழுத்தம், இதய நோய்கள் உள்ளிட்ட பல தொற்றா நோய்கள்ஏற்படுகின்றன.

 அதிகமாகப் பதப்படுத்தப்பட்டுள்ள உணவுகளைப் பயன்படுத்தும் மேலை நாட்டினற்கு மட்டும் தான் இவ்வகைநோய்கள் வரும் என  எல்லாராலும் நம்பப்பட்டிருந்தது.ஆனால் வளர்ந்து வரும் நம்நாட்டிலும்  அதிக எடை மற்றும் உடல் பருமன் மிக வேகமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது .வளர்  இளம் பருவத்தினரின் அதிகபட்ச உடல் பருமன் நோய் கோவா டெல்லி மற்றும் தமிழகத்தில் மிக அதிகமாக இருப்பதாகசமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன .

நகரமயமாக்கல், குறைந்த வேலைவாய்ப்புத் தரும் கிராமப்புறத் தொழில்கள், வேலை தேடி நகரங்களுக்கு வரும்  மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட,பொட்டலங்களில் அடைக்கப்பட்ட உணவுகள், அவைகளின் குறைந்த விலை, அடிக்கடி அதற்காகச் செய்யப்படும் விளம்பரங்கள், தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களின் அதிகப் பயன்பாடு, எனப் பல படிக்காத பாமர மக்களையும் குப்பை உணவுகளை(Junk foods) உண்ணத் தூண்டுகின்றன. காசுக்காக விளம்பரத்தில் நடிக்கும் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள், திரைப்பட நடிகர்கள் அனைவரும் இதற்கு துணை போகிறார்கள். இவைகளை உண்டு பழக்க மக்களை ஈர்க்கும் வண்ணம் பளபளா நிகழ்ச்சிகள், பரிசுகள், போட்டிகள் தள்ளுபடிகள் என மாயவலை விரிக்கப்படுகிறது. இதனைக் கண்டு தடுக்க வேண்டிய அரசும் மற்றைய கட்டுப்பாட்டு நிறுவனங்களும் வேறுபக்கம் பார்த்துக் கொண்டு கண்ணை மூடி கொள்கிறார்கள்.

நமது மக்கள் தொகையில் 35 விழுக்காட்டுக்கு மேல் ஏழைகளாக உள்ளனர். அதில் 60% பேர் மிக ஏழ்மை நிலைமையில் இருக்கிறார்கள். உயிர் வாழ வேலை தேடி கிராமம், நகரம், மாநிலம் என மாறிச் செல்பவர்கள், வேலைச் சூழல்,உணவைத் தயாரிக்க நேரமின்மை, ஒரு குடும்பத்தில் இருவரும் வேலை செய்ய வேண்டிய பொருளாராதக் காரணம், பார்த்துக் கொள்வதற்கு ஆட்கள் இல்லாத சூழல், புதிய இடம், விலை குறைவான சத்தில்லாத உணவு, புது ருசி உள்ளிட்ட  காரணங்களால்  குப்பை உணவுகள் உடல் பருமனுக்கு முக்கிய காரணம் ஆகி விட்டன . குழந்தைகள் உள்பட அனைத்து வயதினருக்கும் போதுமான உடற்பயிற்சியின்மை இன்னுமொரு காரணமாகிvsட்டது. அனைத்து பள்ளிக்கூடங்களில் தினமும் உடற்பயிற்சி பாடவேளை  இருக்க வேண்டும் என்று உத்தரவு இருந்தாலும் 99 விழுக்காடு பள்ளிக்கூடங்களில் வாரத்திற்கு இருமுறை தான் உடற்பயிற்சி வகுப்பு இருக்கிறது.குழந்தைகளுக்கும் விளையாட்டு மற்றும்  போதுமான உடற் பயிற்சிகள் கிடைப்பது அரிதாகவே உள்ளது. அதுவும் குழந்தைகள் எட்டாம் வகுப்பில் தாண்டி விட்டாலே போதும். ஒன்பதாம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்பு பாடங்களும் 11ஆம் வகுப்பிலே பன்னிரண்டாம் வகுப்பு பாடங்களும் நடத்தப்படுகின்றன .ஒரு வருடம் படிக்க வேண்டிய படிப்பு இரண்டு வருடம் ஆகிறது. ஏதாவது தொழிuf கல்லூரிகளில் சேர விரும்பினால் பிளஸ்-2 படிப்பு மூன்று வருடமாக மாறிவிடுகிறது. இந்த சூழ்நிலையில் குழந்தைகளுக்கு போதுமான ஓய்வு கிடைப்பதில்லை.மன அழுத்தத்தைக் குறைக்கும் விளையாட்டு என்றால் கிடையாது என்ற பதில்தான் கிடைக்கிறது தேர்வுக்கு தயாராகும் அவர்கள் உருப்போட்டு படித்ததை வார்த்தை தவறாமல் எழுதி திருப்பி படித்து தூக்கம் கெடுத்து தங்கள் உடலையும் கெடுத்து அதிக எடை அதிக உடல் பருமனோடு இருக்கிறார்கள்

சமீபத்தில் ,ஜெஇஇ மற்றும் நீட் தேர்வுகளுக்காக குழந்தைகளைத் தயார் செய்யும் பள்ளிக்கூடத்தை பார்க்க நேரிட்டது அதில் 90 சதவீதம் குழந்தைகள் அதிக எடை மட்டும் உடல் பருமனோடு இருப்பதை பார்த்தது மனம் திக்கென்றது. இதில் போட்டித் தேர்வில் வென்று  தங்கள் விருப்பப்படி தொழிற்கல்விக்கூடங்களில் சேருபவர்கள்ஒரு பக்கம். எதிர்பார்த்தது  கிடைக்காமல் மன அழுத்தம் கவலை,கோபம் விரக்தி என பல காரணங்களால் இன்னும் எடையை ஏற்றி கொண்டே போகும் குழந்தைகள் மறு பக்கம். தொழிற்கல்விக்கூடங்களில் சேர்வதற்கு முன்பாகவே உடல் எடையில் உச்சத்தினைத்  தொட்ட இவர்களால்  எடையை குறைப்பதும் உடற்பயிற்சியை தொடங்குவதும் உணவினை சரிப்படுத்துவதும்  இயலாத காரியமாக மாறிவிட்டது.

 இந்தியாவில் நான்கில் ஒரு ஆண் உடல் பருமன் தொல்லையால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என சமீபத்திய புள்ளி விவரம் தெரிவிக்கிறது. 50 வயதுக்கு மேற்பட்ட 9%  பேருக்கு இரத்தத்தில்  சர்க்கரையின்  அளவு அதிகமாக உள்ளது. 25 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோய் வருவதற்கு முந்திய சூழலும் நிலவுகிறது. அதிக எடை மற்றும்  உடல் பருமனால் ஏற்படும் நோய்கள், நோய்களுக்கான மருத்துவம் , செலவுகள், ஏற்படும் இழப்புக்கள் குடும்பத்தினருக்கு ஏற்படும் செலவுகள் ஆகியவைகளினால்  நம் நாட்டிற்கு ஏற்படும் இழப்பு ஒன்றிலிருந்து இரண்டு சதவீத ஜிடிபிஅளவிற்கு உள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நுண்பதப்படுத்தப்பட்ட உணவுகளின்  விற்பனையை குறைப்பதற்காகக்  பார்த்தவுடன் உடல் நலத்திற்கு கெடுதல் என்று செய்தி தெரியும்படி முகப்பு வில்லைகளை அச்சிட வேண்டும் என மேற்கொள்ளப்பட்ட முயற்சி சமரசத்தில் முடிந்துள்ளது. மக்களுக்கு புரியாத வண்ணம் 0.5 இலிருந்து 5  ஸ்டார் வரை தங்க நட்சத்திரங்கள் அளிப்பதாக இந்திய தரக்கட்டுப்பாட்டு ஆணையம் முடிவெடுத்துள்ளது. அதிக சர்க்கரை, அதிக உப்பு  அதிக கொழுப்பு உள்ள உணவு என்று அடையாள வில்லை போடுவதை விடுத்து இவ்வாறு தங்கப் புள்ளிகளை அளிப்பது பொதுமக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். குப்பை உணவான ஒரு பிஸ்கட்டும் சாக்லேட்டும் ரெண்டு புள்ளி தங்க நட்சத்திரத்தைப் பெறும். உண்மையை உணராத பெற்றோரும் அட பரவாயில்லை 2 நட்சத்திரம் தானே குறைவு என எண்ணி அவைகளை பாவிக்கும் போக்கு ஏற்பட்டு விடும் என்பது நிச்சயம். அதற்காகத்தான் இத்தகைய பொருட்களை தயாரிக்கும் பன்னாட்டு மற்றும் நம் நாட்டு நிறுவனங்களும் அரசினை வலியுறுத்தி இவ்கையான அடையாள வில்லையை கொண்டு வருவதில் வெற்றி கண்டு விட்டன.

 நாட்டு மக்களின் உடல்நலம் எக்காலத்திலும் எதற்காகவும் ஈடு கட்டப்படக் கூடாது என்ற எண்ணம் மத்திய மாநில அரசுகளுக்கு எப்போதும் இருப்பதில்லை.லாட்டரி மதுபானம் சூதாட்டம் குதிரைப் பந்தயம் எனப் பலவற்றை பல அரசுகளை நடத்தி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் குடிமக்களின் நல்வாழ்வுக்காக  அரசு நல்ல முடிவு எடுத்துச் செயல்படுத்தும் என்ற நம்பிக்கை கானல் நீராகத்தான் தோன்றுகிறது .மக்கள் ஒவ்வொருவரும் தன் உடலுக்குத் தானே பொறுப்பு என்ற முடிவுடன்  சரியான உணவு ,போதுமான உடற்பயிற்சி செய்து அளவான உறக்கம் கொண்டு போதைப் பொருட்களைப் பயன்படுத்தாமல் இருந்தால் மட்டுமே நமது நாடும் நமது மக்களும் வெற்றி பெறுவோம்.

About Post Author

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Copyright © All rights reserved.

Discover more from childhealthtoday-குழந்தைநலம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading