ஆஸ்துமா அல்லது இளைப்பு நோய் உள்ளவர்கள் தனக்கு நோய் எதனால் வந்தது ?எப்படி கட்டுப்படுத்தலாம் ?என்ன செய்யலாம் ?நல்வாழ்வு எப்படி வாழலாம்? என இக்கட்டுரை விளக்குகிறது.
ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்ட குழந்தையின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதோடு தின வாழ்க்கை சாதாரணமாக செல்ல வழிவகைகள் சொல்லி உள்ளேன். இதிலுள்ளவை பொதுவான அறிவுரைகள் மட்டுமே .உங்களுக்கு உள்ள தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு பதில் அறிய மருத்துவரை நாடுவது சிறந்தது
ஆஸ்துமா என்றால் என்ன?
நுரையீரலுக்கு ஆக்சிஜன் கலந்த காற்றினை எடுத்துச்செல்லும் மூச்சு சிறு குழாய்களின் தசையில் ஏற்படும் அலர்ஜி ஆஸ்துமா. நோய்க் காரணிகளால் தசை சுருங்கி ,கூடவே சளியும் சுரக்க ,மூச்சு விடுவதில் சிரமம் ஆகிறது மருந்துகளால் தசைகள் சுருங்குவதைத் தடுத்து விரிய வைத்து சரிசெய்யலாம் உறிஞ்சு மருந்துகள் சில, நோய் வராமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவி செய்கின்றன. மீண்டும் ஒருமுறை இந்த பிரச்சனை வராமல் இருக்க, மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை

என்ன செய்யலாம்?
முழுவதுமாக சரிசெய்ய முடியவில்லை எனினும் நோயின் தீவிரத்தையும் அடிக்கடி ஏற்படும் பாதிப்பையும் தடுக்கலாம். பல்வேறு முறைகளில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதும் நலம் பயக்கும்
- சுத்தம் சோறு போடும் ;சாப்பிட்ட உடன் நீர் அருந்துவது வாய் கொப்பளிப்பது ,தினம் இரு முறை பல் விளக்குவது, வாயில் நோய்த்தொற்று இல்லாமல் இருக்க உதவும்
- ஙப் போல் வளை. மூச்சுப்பயிற்சி, யோகாசனம், ஆழ்நிலைத் தியானம் போன்றவை மூலம் மூச்சு தசைகளுக்கு பலம் தரலாம் .குளிர் காலத்தில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, ஓடுதல் தவிர்க்கப்படவேண்டும். டென்னிஸ் நீச்சல் முதலியவை தசைகளுக்கு வலுவூட்டி நோயின் தீவிரத்தைக் குறைக்க உதவி செய்யும்
- வித்தை விரும்பு; பொழுதுபோக்கிற்காக பாடுதல் ,புல்லாங்குழல் நாதஸ்வரம் போன்ற இசைக் கருவிகளை வாசித்தல் ,மூச்சுத் திறனை அதிகரிக்கும் பரதநாட்டியம், கதக்களி போன்ற நடனங்கள் உடற்பயிற்சியும் மூச்சுப் பயிற்சியையும் ஒருங்கிணைத்து இளைப்பினை படிப்படியாக குறைக்கும்
- ஒவ்வாதன செய்யேல்: தலைக்கு குளித்தால் தும்மல், இருமல், மூக்கடைப்பு ஏற்படுபவர்கள் குளிர் நீரில் தலை குளிக்க வேண்டாம் .குளித்தவுடன் உடனே தலையை நன்கு துவட்டி விடவும் அழுக்கு நீர் மூக்கினுள் செல்வதை தவிர்க்கவும்
- தூசி தவிர்; ஆஸ்துமா நோய் வருவதற்கு முக்கிய காரணிகள் வீட்டில் உள்ள தூசிகள், கண்ணுக்குத்தெரியாத பூச்சிகளின் கழிவுகள் குப்பை சேர்ந்த விரிப்பு, காற்றாடியின் மேலுள்ள தூசு ,சுவர் அலங்கரிப்பு , குவித்து வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் ,காற்றில் வரும் மகரந்தம், தூசு படிந்த உடைகள் மரச்சாமான்கள் ஆகும். பூசணம் சிகரெட் பீடி புகை, தூக்கலான வாசனை ,கொசுவர்த்திச் சுருள் சாம்பிராணி மற்றும் ஊதுபத்தி முதலியவைகளை தவிர்க்கவும்
- ஒப்புரவு ஒழுகு. சமையலறையில் வெளிக் காற்றாடி வைத்திருப்பது நல்லது. வறுவல் பொரித்தல் செய்யும்போது புகை முகத்தில் படும்படி அருகில் இருக்க வேண்டாம் ஒட்டடை அடித்தல் ,பூச்சிமருந்து தெளித்தல், பெயிண்ட் பூசுதல் இவைகளை நீங்கள் வீட்டில் இல்லாதபோது செய்யச் சொல்லவும்
- ஒவ்வாமை உண்டாக்கும் பண்டங்கள். புளித்த தயிர். குளிர்பானம் பணி குழைவு ,இனிப்புகள் ,சாக்லேட், ஜாம்,புளிப்புள்ள பழம் திராட்சை எலுமிச்சை மற்றும் பதனப் பொருள் பயன்படுத்திய சாஸ் ஊறுகாய் முட்டை கலந்த உணவுகள் பேக்கரி பொருட்கள், நன்கு வறுத்த பண்டம் ஆகிய ஒவ்வாமை உண்டாக்கும் பண்டங்கள் தவிர்க்கவும்
- என்ன சாப்பிடலாம்?பச்சைக் கீரைகள் ,காய்கறிகள், உயிர்ச்சத்து தாது பொருட்கள் நிறைந்தவை ,மலச்சிக்கலைத் தவிர்க்கவும் ,நெஞ்சுசளி இளக வைக்கவும் அடிக்கடி சுத்தமான நீர் பருகவும்
- கவனம் தேவை மருந்துகளில். ஆஸ்பிரின், சில ரத்தக்கொதிப்பு மருந்துகள் இருமலைத் தூண்டலாம். தூக்க மருந்து, சளி மருந்துகளை கவனமாகப் பயன்படுத்தவும் உடல் வலி காய்ச்சல் இருப்பின் பாரசிடமால் மருந்து சிறந்ததாகும்
- நோய்க்கு இடம் கொடேல் ; நாய் பூனைகளின் முடி மற்றும் பூசனம் சிலருக்கு ஆஸ்துமாவை உண்டுபண்ணும். எனவே இவைகளை வீட்டினுள் வளர்க்க வேண்டாம்.விட்டு இருக்க முடியவில்லை எனில் கட்டித்தழுவி விளையாட வேண்டாம் தனியே இடத்தில் வைத்திருக்கவும் முடியினை குட்டையாகக் கத்தரித்து விடவும்
- ஒத்த இடத்து நித்திரை கொள்:நன்கு உணவு உண்ட உடனேயே பகலில் உறங்குதல் வேண்டாம், முகத்துக்கு நேரே மின் விசிறியின் காற்று படவேண்டாம். சுத்தமான படுக்கை விரிப்பு பிளாஸ்டிக் உறையிட்ட தலையணை, மெத்தை உபயோகப்படுத்தவும்
- வருமுன் காப்போம்:வெதுவெதுப்பான உப்பு நீரில் தொண்டை நனைய தினமும் கொப்பளிக்கவும் உணவு உண்டபின் நீர் அருந்தவும். உடற்பயிற்சி தினமும் செய்யவும். யோகாசனம் மூச்சுப்பயிற்சி மூச்சு தசைகளுக்கு உதவியாக இருக்கும் அடிக்கடி உணர்ச்சி வசப்படுதல் இல்லாமல் பொறுமையாக இருப்பது நல்லது விளையாட ஆரம்பிப்பதற்கு முன் சிறிது நேரம் முன் பயிற்சி எடுத்துக் கொள்வது
- மருத்துவரை எப்போது உடனடியாக சந்திக்க வேண்டும்?
மருந்தினை குறிப்பிட்ட நாட்கள் குறிப்பிட்ட அளவில் உபயோகப்படுத்திய பிறகும் மூச்சு விடுவதில் சிரமம் ,தொடர்ந்த காய்ச்சல் ,வாந்தி, சாப்பிட முடியாத நிலை, மயக்கம் ,நினைவு தவறுதல் ,மூச்சுத்திணறல், உடல் தளர்வு இருப்பின் உடனடியாக அவசர சிகிச்சை பிரிவிற்கு வரவேண்டும்
உங்களுடைய உடலில் எவை ஒவ்வாமையை உண்டாக்கும் ?என்பதனை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இளைப்பிற்காக எந்த மருந்துகளை எந்த அளவில் முதலில் உபயோகப்படுத்த வேண்டும் என நினைவில் வைக்கவும
இளைப்பு குறையவில்லை என்றால் எந்த மருந்தினை உபயோகப்படுத்த வேண்டும்,எப்போது உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும் ?என்பதனைக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்
