குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லஉணவு,உடற்பயிற்சியுடன் போதுமான இரவு உறக்கம் தேவை. வயதிற்கேற்ப குழந்தைக்கு தேவைப்படும் உறக்கத்தின் நேரமும் மாறுபடும். உயிரினங்களின் உடலின் பல்வேறு மண்டலங்கள் உயிர்க்கடிகாரத்தினை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகின்றன. அவைகளின் இயக்கமும் வேலைத் திறனும் இயக்குநீர்களின் சுரப்பும் இரவுபகல் என மாறுபடும். உதாரணமாக பகல் நேரத்தில் இருப்பதை விட நல்ல உறக்கத்தில் உடல் வளர்ச்சி தரும் குரோத் ஹார்மோன் அதிகமாக சுரக்கும். மலக்குடல் மற்றும் சீரண உறுப்புகள் காலைநேரத்தில் சுறுசுறுப்பாக வேலை செய்யும்.

போதுமானளவு இரவு உறக்கம் நல்ல உடல் ஆரோக்கியத்திற்கும், குடலின் நல்ல நுண்ணுயிர் வளர்ச்சிக்கும் மற்றும் தொற்றா நோய்கள் தவிர்ப்பதற்கும் தேவைப்படும்.
ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் குறைந்தபட்சம் 14மணி நேரமும் 2 வயதுள்ள குழந்தைகள் 13 மணி நேரமும் ஐந்து வயதுள்ள குழந்தைகள் 11 மணி நேரமும் 10 வயது குழந்தைகள் 10 மணி நேரமும் 16 வயது குழந்தைகள் எட்டிலிருந்து 9 மணி நேரமும் தூங்க வேண்டும்.
குழந்தையின் கற்றல் திறன், நினைவுத்திறன், கற்றதை திருப்பி எழுதும் திறன், கணித அறிவு, புரிதல் புதிய சிந்தனைகள், தெளிவான பேச்சு ஆகியவைகளுக்கு போதுமான உறக்கம் தேவை. இதுதவிர உடலின் நோய் எதிர்ப்புப் பொருட்கள் உற்பத்தி மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் முதலானவை தூக்கமின்மையால் பாதிக்கப்படும். எனவே தினமும் குறிப்பிட்ட நேரத்தில் குழந்தைகள் இரவு தூங்கி காலை எழுவதினைப் பழக்கப் படுத்தவும். மதியம் குட்டித் தூக்கம் போடுவது ஒரு மணி நேரத்திற்கு மேல் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும் .மாலை4 மணிக்கு மேல் தூங்க விட வேண்டாம்

தொலைக்காட்சி, அலைபேசியை மாலை ஆறு மணிக்கு மேல் உபயோகிக்க வேண்டாம். படுக்கை அறையில் தொலைக்காட்சிப் பெட்டி கட்டாயம் கூடாது .தொலைக்காட்சி,அலைபேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் இருந்து வரும் நீல நிற வெளிச்சம் தூக்கத்தை தூண்டும் மெலட்டோனின் சுரப்பினை தடுக்கிறது .சுறுசுறுப்பாக இருக்க உதவும் வேதிப்பொருளைத் தூண்டுகிறது. மாலை முழுவதும் விளையாட்டு என்ற பாரதியின் வார்த்தைகள் முற்றிலும் உண்மை. மாலை வெயிலில் குழந்தை விளையாடுவது நல்ல உறக்கம் வருவதற்கு உதவியாக இருக்கும். விளையாடி வந்த குழந்தையை வெது வெது நீரில் குளிக்க வைப்பது மிக நல்லது
6 மணிக்கு மேல் குழந்தையை விளையாட விடுவது தூக்கம் வருவதை தவிர்க்கும். வேலைக்குச் சென்று வரும் பெற்றோர்கள் வரும்வரை குழந்தையை விழித்திருக்க வைக்கக்கூடாது.காலதாமதமாகவீட்டிற்கு வந்த பெற்றோர்கள் குழந்தையோடு விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும் 10 மணி வரை விளையாடி விட்டு அதற்குப் பிறகு படுக்க வைத்தால் காலையில் எழுவதும் காலைக்கடன்களைக் கழிப்பதும் சிரமமாகிவிடும்
மாலைஆறு மணிக்கு முன் வர முடிந்தால் நல்லது. வீட்டில் உள்ளவர்கள் குழந்தை தூங்க வைத்து விடலாம். பெற்றோர்கள் காலை நேரத்தில் எழுந்து குழந்தையுடன் விளையாடுவது நல்லது. காலைநேரத்தில் எழும் பழக்கம் குழந்தைக்கு (நல்ல உறக்கத்திற்கு பிறகு )படிக்கும் திறனை அதிகரிக்கும். இது ஒரு கூடுதல் போனசாக குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இருக்கும்
தூங்குவதற்கு இரண்டு மணித் நேரத்திற்கு முன்னரே தூண்டும் மின்னணு சாதனங்கள் நிறுத்தப்படவேண்டும்

சாப்பிட்ட உடனே தூங்க வைக்க வேண்டாம் தளர்வான உடை அணிவித்தல், வெளிச்சம் குறைந்த இடம், அமைதியான சூழல், சிறிய குழந்தைக்கு தாலாட்டு ,தாயின் அருகாமை போன்றவைதூக்கம் வரச்செய்யும். குழந்தை தூங்கும் முன் கதை சொல்லுவது,படிப்பது மெல்லிசையை ரசிப்பது உறக்கத்திற்கு உறுதுணையாக இருக்கும். தூங்கும் முன் பால் தரலாம் .அதில் இருக்கும் சில வேதிப் பொருட்கள் உறக்கத்தை உண்டுபண்ணும். தூண்டும் காபி மற்றும் காப்ஃபைன் கலந்த பானங்கள் வேண்டாம். தொட்டில் கட்டி பழகினால் கை வலிக்க ஆட்ட வேண்டியிருக்கும் தூக்க மருந்து சீரண மருந்து எதுவும் தேவையில்லை .தூங்கவில்லை என்று குழந்தையை பயமுறுத்துதல் கூடாது .பேய் பிசாசு வரும் பிடித்துக் கொண்டு போகும் என சொல்வதோ அடித்து உறங்க வைப்பது குழந்தைக்கு நல்லது அல்ல. இவ்வகையான பழக்கங்கள் குழந்தைக்கு மன அழுத்தத்தை உருவாக்கும். குழந்தையின் கற்றல் மற்றும்அறிவு வளர்ச்சியில் இவை பாதிப்பினை உண்டாக்கும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது
பகல் நேரத்தில் வீட்டு உணவினை சரியாக தர வேண்டும் உணவில் போதுமானசத்துள்ள காய்கறிகளும் கீரைகளும் பழங்களும் சேர்ந்து இருப்பது நலம் .தூண்டுதல் தரக்கூடிய வேதிப்பொருட்கள் உடைய குப்பை உணவுகள் கடை உணவுகள் மென்பானங்கள் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்
எழுதில் கடைபிடிக்கக் கூடிய இந்த அறிவுரைகளை கடைப்பிடித்தால் உங்கள் குழந்தையை மிக சுலபமாக தூங்க வைத்து விடலாம் குழந்தையின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்
