childhealthtoday

childhealthwiki

பாதுகாப்பாக குழந்தையைப்பார்த்து கொள்வது எப்படி?

1 min read

1.தண்ணீர், (குடிதண்ணீர், பெப்சி, மிராண்டா, கோகோகோலா போன்ற)குளிர்பானப் பாட்டில்களில் மண்ணென்ணெய், தின்னர், டீசல்,பெட்ரோல் பூச்சிமருந்து, எலி மருந்து ,பினாயில், லைசால் ஆகியவைகளை சேமித்து வைக்க வேண்டாம்

உங்கள் குழந்தை அதனை ஏமாந்து சாப்பிட்டு விட்டால் உயிருக்கு ஆபத்து

2.பூச்சிக்கொல்லி மருந்து, கொசு ஒழிப்புச் சுருள், திரவம் மற்றும் களிம்பு ஆகியவைகளை குழந்தை விழுங்காதவாறு கவனத்தோடு பார்த்துக்கொள்ளவும். மண்ணெண்ணெய், வண்ண அடர்த்தி குறைப்பு திரவம், சுத்திகரிக்கும் அமில, காரத் திரவங்கள், எறும்பு, பூச்சி, எலி மருந்துகள் ஆகியவைகளை கண் பார்வை படாத இடத்தில் பத்திரப்படுத்தவும்.

3.கொதிக்கும் சுடு திரவங்கள் உள்ள பாத்திரங்களை மேசையின் ஓரத்தில் வைக்காமல் குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் உள்ளே தள்ளிவைக்கவும். அடுப்பின் மேலுள்ள கைப்பிடி குழந்தையின் கைக்கு எட்டாமல் இருந்தால் நல்லது.

4.கண்ணாடி, பீங்கான் போன்ற எளிதில் உடையக்கூடிய பொருட்களால் ஆன விளையாட்டுப் பொருட்களைத் தரவேண்டாம். காயம் பட்டுவிடும். விலை மலிந்த வண்ணம் பூசிய பிளாஸ்டிக், பேட்டரிகளால் ஓடக்கூடியத் தரமற்ற பொம்மைகளும் வேண்டாம். அவைகளிலுள்ள பேட்டரிகளை விழுங்கவும் சிறு பாகங்கள் மூச்சுக் குழாய்க்குள் அடைக்கவும் வாய்ப்புண்டு. குழந்தைகளின் உடல்திறன், வளர்ச்சி, வயதினைப் பொறுத்து தரமான விளையாட்டுப் பொருட்களைத் தரவும்.

5.மருந்துப் புட்டிகளை, குழந்தைகள் சுலபமாக திறக்காத வண்ணம் பெட்டிக்குள் போட்டு மூடி, கைக்கு எட்டாத இடத்தில் பூட்டிவைக்கவும். வண்ண மாத்திரைகளை இனிப்பு எனத் தவறாக  சாப்பிட வாய்ப்புண்டு.

6.முதலில் பாத்திரத்தில் குளிர் நீரை பாதி நிரப்பி, பின் சுடுநீரை கொட்டி மிதமான சூடுள்ள நீரில் குளிக்க வைக்கவும். சுடுநீரை முதலில் ஊற்றிவிட்டு இடத்தை விட்டு நகரக்கூடாது.

7.இதனைப் போலவே தண்ணீரைச் சுடவைக்கும் மின் சுருளினையும் எடுத்துப் பாதுகாப்பாக வைக்கவும். குழந்தை விரலைவிட்டு நோண்டாதபடி தொலைக்காட்சிப்பெட்டி, மின் கம்பி, அரவைக்கலன் இணைப்பினை அடைக்கவும்.

8.சுவரில் உள்ள மின்துளைகளில் வெற்று அடைப்பான்களை சொருகி வைக்கவும். அருகே விளையாட விடவேண்டாம். கனமான சாமான்களை வைத்து குழந்தை அருகில் செல்லாதமாதிரி மறைத்து வைக்கலாம். பயன்படுத்தாத போது மின் இணைப்பினைத் துண்டிக்கவும்.

9.சூடாக உள்ள மின் சலவைப் பெட்டியினை விட்டுவிட்டு, அகல வேண்டாம். மின் இணைப்பினை இழுத்து தன் மேலேயே போட்டுக் கொள்ள வாய்ப்புண்டு. இணைப்பினை துண்டித்து, சூடு குறைந்த பின், சுருட்டி பாதுகாப்பாக வைக்கவும்.

10.தீக்குச்சி, தீ மூட்டிகளை குழந்தைகள் பற்ற வைக்க அனுமதிக்க வேண்டாம். பெரியவர்களின் கண்காணிப்பின்றி, பட்டாசு, மத்தாப்பு, ராக்கெட், புஸ்வானம் போன்றவைகளைக் கொளுத்தக்கூடாது. தீயினால் ஏற்படும் தீங்குகளையும் சொல்லித்தரவும்.

11.சிறுகுழந்தைகள், நீச்சல் தெரியாதவர்களை, குளம், தொட்டி, வாய்க்கால், ஓடை, ஆறு அருகில் விளையாட விடவேண்டாம். தவறி விழுந்தால் மூழ்கிப்போக வாய்ப்புண்டு இவை உயரமான வேலிகளுடன் இருப்பது நல்லது.  அருகில் இருந்து ஆபத்து நேராவண்ணம் கவனித்து கொள்ளவும். வரும்முன் காக்க, நீச்சலடிக்கக் கற்றுக் கொடுப்பது நல்லது. நிலத்தடி நீர் சேகரிப்பு தொட்டியினை எப்போதும் மூடியே வைத்திருக்கவும்.

12.விபத்துக்களைத்  தவிர்த்தல் உயிரிழப்பு மற்றும் காயங்கள் ஏற்பட, முக்கிய காரணங்களில் ஒன்றாக விபத்துக்கள் திகழ்கின்றன. பாதுகாப்பு அம்சங்களான தலைக்கவசம் அணிதல், குழந்தைக்கான மகிழுந்து இருக்கை உபயோகித்தல், பாதுகாப்புப் பட்டை அணிதல், வேகத்தடை கவனித்துப் பயணித்தல், கதவின் கண்ணாடி திறக்காவண்ணம் பூட்டியிருத்தல் போன்றவைகளை உபயோகித்தும், சரியான போக்குவரத்து நெறிகளைக் கடைப்பிடித்தும் பெரும்பாலான விபத்துக்களைத் தவிர்க்கலாம். தனியாகச் சாலையைக் கடக்கவோ, சாலை ஓரங்களில் விளையாடவோ விடக் கூடாது. பெரிய குழந்தைக்கு போக்குவரத்து விதிகளை கற்பிக்க வேண்டும்.

13.ஐந்து வயதிற்குக் குறைவான குழந்தைகள்  பெற்றோருடன் மட்டும் வெளியே செல்வது பாதுகாப்பானது. பாதுகாப்பான பழக்கவழக்கங்கள் செருப்புப் போட்டு நடக்க பழக்கவில்லையென்றால் ஆணி, முள், கல் போன்றவை குத்தி, சீழ் பிடிக்கும்.

14. காதிலோ, மூக்கிலோ, வாயிலோ எந்தப் பொருளையும் வைத்து குடைவதையும் விளையாடுவதையும் கண்டிக்கவும். எளிதாகக் கழன்றுவிடும் கற்கள் பதித்த மோதிரம், கம்மல், பாசி கோர்த்த மாலை, சரடு,  போன்றவற்றை உபயோகிக்க கூடாது.

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading