நாம் உபயோகப்படுத்தும் அரிசி வகைகளைப் பற்றி பார்ப்போம் பெரும்பாலான தமிழ் குடும்பங்களில் இப்போது நாம் உபயோகப்படுத்தும் அரிசி நன்குபட்டை தீட்டப்பட்டு பளபளப்பாக வெளுப்பாக ருசியோடு இருக்கும். பசுமைப் புரட்சியின் பின் பயிரிடப்பட்ட அதிக விளைச்சல் நிறைந்த ரகங்கள் அவை. பளபளப்பாக , மல்லிகைப் பூ போல, தும்பைப் பூ போல வெளுப்பாக இருப்பதற்குத்தான் விலை. இதில் சிலருக்கு பச்சரிசி பிடிக்கும் சிலருக்கு புழுங்கலரிசி பிடிக்கும் ஆனால் வாங்கும் அரிசி ரகங்கள் என்னவோ பொன்னி உள்பட புதிய அதிக விளைச்சல் ரகங்கள் தான் பண்டைக்கால பாரம்பரிய அரிசிகளான மாப்பிள்ளை சம்பா சிகப்பரிசி உள்பட எத்தனையோ அரிசி வகைகள் சுலபமாக தற்போது கிடைப்பதில்லை .விலையும் சிறிது தான் அதிகம் அதன் ருசியும் நிறமும் நிறைய பேருக்கு பிடிப்பதில்லை குழந்தைகளுக்கு பழக்கம் இல்லாததால் அதனைச் சாப்பிட சிரமப்படுவார்கள் அந்த அரிசி இரகங்களில் வழக்கமான உணவைச் செய்ய முடியுமா ?என்பதில் நமக்கே சந்தேகம் அதிகம் இருக்கிறது
புதிய அரிசிகளை விட பழைய அரிசி நல்லதா? எதனால் ? என்பதை இப்போது பார்ப்போம் புதிய அரிசி வெண்மையாகவும் பசியைத் தூண்டக்கூடிய ருசியுடனனும் இருக்கும் ஆனால் அதில் சத்துக்கள் மிகக் குறைவாகவே இருக்கும். அதிக சத்துக்கள் பட்டை தீட்டப்படும் போது போய்விடும் மீதமுள்ள அரிசியின் உள்பகுதியில் சர்க்கரையை மிக வேகமாக அதிகரிக்க கூடிய தன்மை தான் இருக்கிறது
பாரம்பரிய அரிசி
நன்றி ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை
- . இந்தியாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களும், தமிழ்நாட்டில் 10,000 -க்கும் மேற்பட்ட நெல் ரகங்களும் சேகரிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. இந்தியாவில் விளைவிக்கப்படும் பழைமையான அரிசிகள் குறிப்பாக லச்சா அரிசி (சத்தீஸ்கர்), நவாரா (கேரளம்), பார்மைசால்( மேற்கு வங்கம்), கபிராஜ்சால் (ஒடிஸா) ஆகிய இடங்களில் பயிரிடப்படுகின்றன.
- தமிழ்நாட்டில் தூயமல்லி, சேலம் சன்னா, தங்க சம்பா, ஆத்தூர் கிச்சலிச் சம்பா, ஆர்க்காடு கிச்சிலி சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்புக் கவுனி, பூங்கார், காட்டுயானம் போன்ற பாரம்பரிய ரகங்கள் பிரபலமானவை.

பெருகிவரும் மக்கள்தொகைக்கு உணவளிக்க வேண்டிய முயற்சியில் உருவாக்கப்பட்ட பசுமைப் புரட்சியின் தொடக்கமான 1966-ஆம் ஆண்டில் அதிக வைக்கோலும், குறைந்த மகசூலும் தரக்கூடிய நெல் ரகங்களே பயிரிடப்பட்டன. பின்பு இப் புரட்சியின் விளைவால் அதிக விளைச்சலும், குறைந்த வைக்கோலும் குட்டைத் தன்மையும் கொண்ட புதிய கலப்பின நெல் ரகங்களும், அதிக நீர்ப் பாசனமும், அதிக உரத் தேவையும் கொண்ட நெல் ரகங்கள் பிலிப்பின்ஸ் பகுதியில் இருந்து ( ஐ.ஆர்.8 உள்ளிட்டவை ( I- international .R- rice கூடவே இரகத்தின் எண் சேர்க்கப்பட்டு )அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக கால்நடைகளுக்கான வைக்கோல் அளவு மிகவும் குறைந்து விட்டது.
பாரம்பரிய நெல் ரகங்கள் குறைந்தது(60-நாட்கள்) முதல், நீண்ட (200 நாட்கள்) வாழ்நாள் கொண்டவை., குறைந்த அளவு விளைச்சலும் தரக்கூடியவை. குறிப்பாக 60 நாள்கள் அருங்குறுவை, 70 நாள்கள் பூங்கார், 90 நாள்கள் குள்ளக்குறுவை, 110 நாள்கள் காட்டுப்பொன்னி, 160 நாள்கள் கருப்புக்கவுனி, 180 நாள்கள் காட்டுயானம், 200 நாள்கள் ஒட்டானம் போன்றவை பழைமையான அரிசி ரகங்களாகும். இத்தகைய பழைமையான நெல் ரகங்கள் அதிக நாள்கள் முதிர்ச்சியும், அதிக நேரம் வேகும் தன்மையும் (கடினத்தன்மை) கொண்டுள்ளதாலும், பல்வேறுபட்ட (கருப்பு, சிவப்பு) நிறங்களில் காணப்படுவதாலும், மக்களால் பெரிதும் விரும்பப்படுவதில்லை.

எனினும், பாரம்பரிய நெல் ரகங்கள் பூச்சி நோய் தாக்குதல் குறைவாகவும், வறட்சி, வெள்ளம் மற்றும் அதிகப் பனிப் பொழிவு போன்ற அசாதாரண சூழ்நிலையைத் தாங்கி வளரக் கூடியன. இவற்றில் உள்ள சத்துகள், மருத்துவத் தன்மை காரணமாக மீண்டும் புத்துயிர் பெற்று, மீண்டும் அதிக அளவில் பயிரிட்டு பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.
மருத்துவப் பண்புகளை கொண்ட அரிசியின் தன்மைகள்
- அரிசியானது தவிடு ,உமி, கரு, மாவுப் பொருள் என்ற நான்கு பகுதிகளைக் கொண்டது. அதில் உமி, தவிட்டினை நீக்கி நன்கு பாலிஷ் செய்யும் போது அதில் உள்ள அனைத்து விதமான சத்துகளும் நீக்கப்படுகின்றன. மீதமுள்ள மாவுப் பகுதியான மட்டுமே உணவாக உண்ணுகிறோம். ஆனால் பாரம்பரிய நெல் ரகங்களில் ஊட்டச் சத்துகள் மாவுப் பகுதிவரை பரவி காணப்படுகின்றன.
- இந்த பாரம்பரிய அரிசிகளில் எந்தோசைனின், புரோ எந்தோசைனின் என்னும் நிறமி இருப்பதன் காரணமாக சிவப்பு, கருப்பு, அடர்ந்த கருப்பு நிறத்தினைப் பெறுகின்றன. ஆனால் நாம் மிகவும் விரும்பும் வெண்மையான, சன்னமான அரிசிகளில் அந் நிறமி அற்றுக் காணப்படுகிறது. இவ்வகை நிறமியானது அரிசியின் பல்வேறு ஊட்டச்சத்துகளுக்கும், மருத்துவப் பண்புகளுக்கும் அடிப்படைக் காரணமாக உள்ளது.
- இதற்கான குரோமோசோம் ஜீன் எனப்படும் மரபியல் கூறு காலா 1, காலா 2, காலா 4, காலா 6 என உயிரியல் தொழில்நுட்பத்தில் இன்றைய நவீன ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ குணங்களைக் கொண்ட அரிசியின் பண்புகள்:
- வெண்மை அரிசிகளில் முதன்மையாக நார்ச்சத்து குறைவாக இருப்பதால், கிளைசிமிக் இன்டெக்ஸ் எனப்படும் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவினை அதிகரிக்கிறது. இதன் காரணமாக உணவு எளிதாக சீரணிக்கப்படுவதால், சர்க்கரை (நீரிழிவு) நோய் ஏற்படுகிறது. ஆனால், பாரம்பரிய அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், எளிதில் சீரணம் அடையாததால், ரத்தத்தில் சர்க்கரை அளவினை சீராக வைக்கிறது. இதனால் ஆக்ஸிகரணம் குறைந்து, ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சர்க்கரை நோய் ஏற்படுவதை முழுமையாகத் தடுக்கிறது.
- வெண்மை அரிசியில் அதிக அளவு மாவுச்சத்து இருப்பதாலும் உடல் எடை அதிகரிக்கிறது. பாரம்பரிய அரிசியில் குறைந்த அளவு மாவுச்சத்து இருப்பதால் உடல் எடை குறையவும், உணவு உண்ட திருப்தியையும் அளிக்கிறது.
- வைட்டமின், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, செலினியம் போன்ற கனிமங்கள் நடைமுறையில் உள்ள ரகங்களை விட, இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக உள்ளன.
- பாரம்பரிய நெல் ரகங்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட் காரணி இருப்பதால், புற்றுநோய் செல்களை தடுக்கும் தன்மையும், இருதய நோயை குணமாக்கும் ஓர் அற்புதமான மருந்தாகும்.
- அந்தோசையனின், பாலிபினால் நிறைந்துள்ளதால், தோல் சுருக்கம், சர்க்கரை அளவினைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. பெண்களுக்கு மாதவிடாய் போக்கினை துரிதப்படுத்தவும், உடல், பல் மற்றும் எலும்பு உறுதிக்கும், கூந்தல் வளர்ச்சிக்கும், வாய் ஓரப்புண்கள் ஆறவும் உதவுகிறது.
ஆராய்ச்சிகளின் மூலம் நவாரா மருத்துவ அரிசி இனமானது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நோய் நீக்கியாகப் பயன்படுகிறது. நவாரா இனத்தில் இரும்பு, துத்தநாகம் மற்றும் கால்சியமும், கவுனி அரிசியில் அதிக அளவு புரதச்சத்து மற்றும் கால்சியமும், காத்த நெல்லில் அதிக அளவு மெக்னீசியமும் மற்றும் ஆண்டிஆக்ஸிடன்ட் செயல்பாடும், வீரதங்கன் நெல்லில் அதிக அளவு இரும்பு, துத்தநாகம் உள்ளன என ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டது. குறிப்பாக, ஆன்டிஆக்ஸிடன்ட் பண்பானது பலவிதமான மனித நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
பழைய அரிசி ரகங்கள் நார்ச்சத்து அதிகமாகவும் தீட்டப்படாத வால் அதிக உயிர்ச் சத்துக்களும் கொண்டிருக்கும். அவைகளின் சர்க்கரையை உயர்த்தும் தன்மை மிகக்குறைவாக இருக்கும். குறைந்த அளவு சாப்பிட்டாலும் வயிறு நிரம்பிவிடும் உணர்வு நமக்கு வந்து விடும். அதனால் உடல் எடை ,பருமன் ,சர்க்கரை அதிகம் மற்ற உடல் நோய்கள் வரும் வாய்ப்பு குறைவு. இந்த அரிசிகளை வைத்துக்கொண்டு வழக்கமான சமையல் செய்வதை போல எல்லா உணவுப் பொருள்களையும் செய்யலாம் பிரச்சனை எதுவும் இல்லை
