குழந்தையின் இணை உணவில் உப்பு சேர்க்கலாமா? சேர்க்கக் கூடாதா?
இது பெற்றோர்களிடையே பொதுவாக எழும் கேள்வி. பாரம்பரியமாக பல வழிகாட்டுதல்கள் “உப்பு சேர்க்க வேண்டாம்” என்று கூறுகின்றன. ஆனால் சமீபத்திய அறிவியல் ஆதாரங்களைப் பார்த்தால், பதில் சற்று நுணுக்கமானது.
உலக சுகாதார நிறுவன் -WHO மற்றும் பிறகுழந்தைநல மருத்துவ அமைப்புகள் என்ன சொல்கின்றன?
- 6 மாதங்களுக்குப் பிறகு இணை உணவு தொடங்க வேண்டும்.
- குழந்தை உணவில் தனியாக உப்பு சேர்க்க வேண்டாம்.
- அதிக சோடியம் கொண்ட நுண்பதப்படுத்தப்பட்ட (processed) உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
நடைமுறையில் என்ன செய்யலாம்?
ஒரு ஆரோக்கியமான,நிறைமாத கர்ப்பத்தில் பிறந்த குழந்தையின் 6 மாதங்களுக்கு பிறகு :

✅ வீட்டில் சமைக்கப்படும் வழக்கமான குடும்ப உணவுகளை (இட்லி, தோசை, பொங்கல், சாம்பார், ரசம், கூட்டு, பருப்பு சாதம் போன்றவை) காரம் இனிப்பு தவிர்த்து வயதுக்கேற்ற பதத்தில் கொடுக்கலாம்.
✅ அந்த உணவில் இருக்கும் மிதமான அளவு உப்பு பொதுவாக பிரச்சினை ஏற்படுத்தாது.
❌ ஆனால் குழந்தைக்காக தனியாக கூடுதல் உப்பு சேர்க்கத் தேவையில்லை.
❌ சிப்ஸ், ஊறுகாய், பாக்கெட் ஸ்நாக்ஸ், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், சாஸ், பேக்கரி உணவுகள் போன்ற அதிக உப்பு கொண்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
“உப்பு சிறுநீரகத்தை பாதிக்குமா?”
6–12 மாத ஆரோக்கியமான குழந்தைகளின் சிறுநீரகங்கள் சாதாரண அளவு சோடியத்தை வெளியேற்றும் திறன் கொண்டவை என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. மிதமான அளவு உப்பு உள்ள வீட்டுச் சாப்பாடு சிறுநீரக சேதத்தை ஏற்படுத்தும் என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை.
ஒரு குழந்தை நல மருத்துவராக நான் பெற்றோரிடம் கூறுவது:
“6 மாதங்களுக்குப் பிறகு குழந்தைக்கு தனியாக உப்பில்லா உணவு தயாரிக்க வேண்டிய அவசியமில்லை. வீட்டில் சமைக்கப்படும் வழக்கமான குடும்ப உணவை மென்மையாகவும் பாதுகாப்பாகவும் மாற்றிக் கொடுக்கலாம். ஆனால் குழந்தைக்காக காரம்,இனிப்ப சேர்க்க வேண்டாம். பதப்படுத்தப்பட்ட, அதிக உப்பு கொண்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.”
தமிழ்நாட்டு குடும்பங்களுக்கு எளிய செய்தி
“வீட்டுச் சாப்பாடு கொடுங்கள்; டப்பா\ உடனடி சாப்பாடு வேண்டாம்.”

இணை உணவில் கவனம் செலுத்த வேண்டியவை:
- இரும்புச் சத்து (முட்டை, பருப்பு, மீன், இறைச்சி)
- பல்வகை உணவுகள்
- குழந்தை தானாக உண்பதை ஊக்குவித்தல்
- சரியான பதம் (texture)
- நுண்பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல்
உப்பைப் பற்றிய கவலையை விட, இரும்புச் சத்துக் குறைபாடு, உணவின் பல்வகைத் தன்மை, மற்றும் நுண்பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவை குழந்தையின் ஆரோக்கியத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
சுருக்கமாக:
👉 6 மாதங்களுக்குப் பிறகு மிதமான உப்பு உள்ள வீட்டுச் சாப்பாடு – ஆம்
👉 குழந்தைக்காக உணவில் இனிப்பு, காரம் சேர்த்தல் – தேவையில்லை
👉 சிப்ஸ், ஊறுகாய், பாக்கெட் உணவுகள் – தவிர்க்க வேண்டும்.
