childhealthtoday

childhealthwiki

இணையவகுப்புகளால் கண் பாதிப்பு வருமா? தடுப்பது எப்படி?

1 min read

இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் என்பது இணைய வழியில் நடக்க ஆரம்பித்துவிட்டது .அதுவும் மழலையர் வகுப்பில் இருந்து கூட ஆரம்பித்துவிட்டனர் .வயது ஏற ,ஏற, வகுப்பு மாற ,மாற குழந்தைகள் இணையவழி வகுப்பில் இருக்க வேண்டிய நேரமும் மூன்று நான்கு மணி நேரம் என தினமும்அதிகமாகிக்கொண்டே போகிறது. இதைத் தவிர்த்து மற்றவர்களுடன் சேர்ந்து பார்க்கும் தொலைக்காட்சி மற்றும் திறன்பேசி, பொம்மைப் படங்கள் ,வலைத்தளத்தில் காணும் காணொளிகள் என கண்ணுக்கு வேலை தினம் தினம் கூடிக்கொண்டே போகிறது

.மின்னணுத்திரை கண்சோர்வு என்றால் என்ன?எவ்வளவு நேரம் குழந்தைகள் மின்னணுத்திரைகளை பார்க்கலாம் ?பார்க்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன? பயிற்சிகள் மூலம் கண்ணுக்கு ஏற்படும் பாதிப்புகளை எபபடிக் குறைக்கலாம் என்பது பற்றி இப்போது பார்ப்போம்

மின்ணணுத்திரை கண்சோர்வு என்றால் என்ன? என்பதை முதலில் பார்ப்போம் .மின்னணுச் சாதனங்களை தொடர்ந்து ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் உபயோகப்படுத்துவதால் கண்களுக்கும் அதன் தசைகளுக்கும் ஏற்படும் பிரச்சனைதான் இது.
முன் காலத்தில் கணினிக் கண் சோர்வு என அழைக்கப்பட்ட இந்த உடல் நலக்கேடு தற்போது மின்னணுத்திரை கண்சோர்வு என அழைக்கப்படுகிறது
கணினி மட்டுமின்றி மடிக்கணினி. தொடுதிரை திறன்பேசி .டேப் என பலவற்றிலும் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதால் வரும்தொல்லை இப்போது பொதுவாக இப்பெயரால் அழைக்கப்படுகிறது. சமீபத்திய ஆராய்ச்சிப்படி பெரியவர்கள் 5 லிருந்து 12 மணி நேரம் தினமும் மின்னணுத்திரைகளை உபயோகப்படுத்துகின்றனர் இவர்களில் குறைந்தது 50 லிருந்து 90 விழுக்காடு நபர்களுக்கு மின்னணுத்திரை கண்சோர்வு ஏற்படுகிறது
இதில் கண்ணினுடைய பாப்பாவை சுற்றியுள்ள சிலியரி தசைகளும் கண்ணைச் சுற்றியுள்ள கண் தசைகளும் பாதிப்புஅடைகின்றன. இதன் காரணமாக தூரத்து பொருளிலிருந்து அருகில் உள்ள பொருளினைப் பார்க்கும்போதும் ஒரு பொருளை கூர்ந்து கவனிக்கும் போதும் பார்வையில் பிரச்சனை ஏற்படுகிறது
சாதாரணமாக ஒரு பொருளைப் பார்க்கும்போது ஒரு நிமிடத்திற்கு 15- 25 முறை கண்ணை இமைக்கிறோம். தொடர்ந்து மின்னணுச்சாதனங்களை பயன்படுத்தும்போது கண்ணிமைப்பது
3-12 தடவையாகக் குறைகிறது இதனால் கண்ணின் மேற்பரப்பில் வறட்சி ஏற்படுகிறது .


திறன்பேசிகளை- ஸ்மார்ட் போன் உபயோகப்படுத்தும் குழந்தைகளுக்கு கண் வறட்சி வருவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.நேர உபயோகத்தினைப் பொறுத்து பாதிப்பு இருக்கும்.பார்க்கும் நேரத்தை குறைக்கும் போது 4 வாரத்துக்குள் கண் வறட்சியிலிருந்து முழு குணம் கிடைக்கிறது
கண் சம்பந்தப்பட்ட அறிகுறிகளான, கண் எரிச்சல் ,கண் நீர் வறட்சி,கண் வலி , தூரத்துப் பொருளிலிருந்து பக்கத்து பொருளைப் பார்க்கும்போது கலங்கலாகத் தெரிதல், கூர்ந்து கவனிக்கும் போது பார்வைத்தெளிவின்மை, இரட்டை பொருள்களாக தெரிதல் ,ஒட்டுக் கண்ணாடிஅணிவதில் பிரச்சனை ,கண்ணில் அசௌகரியம், நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பதால் கழுத்து மற்றும் தோள் தசைகளில் வலி என பலவாக இருக்கலாம்.
புத்தகத்தில் படிப்பதைவிட மின்னணு திரைகளில் படிக்கும் போது ஏன் பிரச்சனை வருகிறது என்பதற்குக் காரணம் நாம் பார்க்கும் எழுத்துகள் பிக்செல்களால் ஆனது. மிகச்சிறிய மின்எழுத்துக்கள் இவை. இது கூடவே வெளிச்சம், எதிர் வெளிச்சம், திரையின் ஒளிரும் தன்மை அனைத்தும் சேர்த்து கண்ணின் வேலையை அதிகப்படுத்துகின்றன .கைகளில் வைத்துக்கொண்டு பார்க்கும் திறன்பேசி முகத்துக்கு வெகு அருகில் கொண்டு வரப்படுகிறது. அதனால் அதிலிருந்து வெளிப்படும் வெப்பம்,வெளிச்சத்தன்மை, எதிர் வெளிச்சம்,நாம் உட்காரும் நிலை, இதற்கு முன்கண்ணில் உள்ள பிரச்சனைகள் என பலவும் சேர்ந்துதான் மின்னணுத் திரை கண்சோர்வை உருவாக்குகின்றன.


எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறோம், கண்ணுக்கு எவ்வளவு நேரம் ஓய்வு தருகிறோம், உட்காரும் நிலை என்ன? உபயோகப்படுத்தும் கீபோர்டு எங்கு இருக்கிறது? எவ்வளவு அருகில் தேவையான பொருட்கள் உள்ளன? தூரம் ,இடைவெளி ,வெளிச்சம், அமரும் நாற்காலியின்அமைப்பு என்பதைப் பொறுத்து கண்சோர்வு ஏற்படும்

இரண்டு வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு கட்டாயம் திறன்பேசி -ஸ்மார்ட் போன்,தொலைக்காட்சியை பார்ப்பதும் , பேசுவதும் கூடாது. ஏனெனில் இந்த வயதில் குழந்தை மற்றவர்களுடன் நேரடியாக பேசுதல்மற்றும் , பராமரிப்பவர் அல்லது பெற்றோர்களுடைய எதிர்வினை இவைகளைப் பார்த்து குழந்தைகற்றுக் கொள்ளும்.

கற்றுக்கொள்ளுதல் மூளையின் நரம்பு செல்களின் எண்ணிக்கைக்பெருக்கம் ,வளர்ச்சி மற்றும் அடர்த்தியாதல் ஆகியவை மூலம் நடக்கிறது .எனவே ஒருவர் மட்டும் பேசக்கூடிய மின்னணுத்திரை நிகழ்ச்சிகள் உங்களுடைய குழந்தையின் பேச்சு மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவி செய்வதில்லை.
மூணரை வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு கட்டாயம் இந்த வகுப்புகள் தேவை இல்லை. குழந்தையை நாம் செய்யும் வேலையின் போது உதவி செய்ய அனுமதிப்பது, குழந்தைகளுடன் விளையாடுவது காகிதம் மற்றும் பேனா அல்லது பென்சில் மூலம் படங்கள் வரைய சொல்லித்தருவது ,பாடல் பாடுவது பாடல் கேட்பது பாடலுக்கு நடனம் ஆடுவது என பல பல விஷயங்களை செய்யலாம். வீட்டில் சிறிய தோட்டம் இருந்தால் குழந்தையை அங்கு கூட்டிச் செல்லலாம் .செடிகளைப் பற்றி சொல்லலாம். பூ மரம் இலை ஒவ்வொன்றைப் பற்றியும் குழந்தைக்கு சொல்லிச் சொல்லி காண்பிக்கலாம் தோட்ட வேலைகளில் மற்ற வேளைகளில் குழந்தையும் ஈடுபடுத்தலாம்.
ஐந்து வயதிற்கு மேற்பட்ட உள்ள குழந்தைகளுக்கு சொல்லித் தரும் நேரம்1-2 மணிநேரத்திற்கு மொத்தமாக குறைவாக இருக்க வேண்டும் ‌


முதலில் கண்பார்வை சரியாக இல்லை எனில் கண்கண்ணாடி அணிந்து குறைபாட்டினை சரி செய்ய வேண்டும்.
கூடவே எதிர் வெளிச்சம் தராத பூச்சுகளை கண்ணாடிக்கும் பூசிக்கொள்ளலாம்
2. கண் பயிற்சிகள்
இவை பொருட்களை தூரத்துக்கு ஏற்ப பார்க்கும் வண்ணம் கண் பாப்பாவின் சுருங்கி விரியும் தன்மையும் மற்றும் கண் லென்ஸ் இன் குவியும் திறனையும் அதிகரிக்கும்
3. கண் வறட்சி
கண் வறட்சியை தவிர்ப்பதற்கு அடிக்கடி கண்ணைத் திறந்து மூடுவது, இமைகளை அசைப்பது, செயற்கைக் கண்ணீர் மருந்துகளை பயன்படுத்துவது, குளிர் காற்று முகத்தில் நேராக அடிக்காமல் பார்த்துக் கொள்தல் என பலவழிகளில் சரி செய்யலாம்

கணினித் திரைகள் மூலம் பார்க்கும்போது கணினி திரைகள் 4-5 இன்ச்(1/2 அடி) கண் மட்டத்திற்குகீழே இருக்கும்படி வைக்க வேண்டும். கண்ணுக்கு 20 -28 இன்ச்(2 அடி ) இடைவெளிஇருக்குமாறு அமைத்துக் கொள்ள வேண்டும். சில மணி நேரத்திற்கு ஒருமுறை நடுநடுவே தூரத்தே கண்பார்வையை திருப்பி மறுபடியும் பார்த்துக்கொள்வது நல்லது. தூரத்து பச்சை பார்ப்பது மிக நல்லது.குழந்தைக்கும் கற்றுக்கொள்ளும் கணினி அல்லது திறன் பேசிக்கும்இடையே குறைந்தபட்சம் ஒரு அடி இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்

நாற்காலி உட்கார வசதியாக சிறிய தலையணை உடன் இருக்கலாம். கைப்பிடிகள் இருபக்கமும் வேண்டும். உயரத்தினை மாற்றியமைக்கும் வசதி இருந்தால் சிறப்பு..மவுசினை உபயோகிக்கவும்.மணிக்கட்டு கீ போர்டில் உட்காராமல் எழுத்தடிக்க வேண்டும்.

எளிய பயிற்சிகள். நேராகப்பார்த்தபடி உட்காரவும்.வலது பக்கம் தலையை 30 நொடி தோளினை தொடும்படி வைக்கவும். இதேபோல் இடது புறமும் செய்யவும். 5 முறை செய்யலாம்.இதைப்போன்ற எளிய பயிற்சிகள் உதவும்

20;20;20 விதிகள்

20 நிமிடநேரம் மின்னணுத்திரையினைப்பார்த்தால்20 நொடிக்கு 20 அடி தூரத்தில் உள்ள பொருளினைப்பார்க்கவும். வகுப்புப் பாடங்களுக்கிடையே இடைவெளி விட வேண்டும் .பாடங்களை 2 தவணைகளாக சொல்லித் தரலாம் இரண்டு மணி நேரத்திற்கு 15 நிமிட இடைவெளி பார்த்துக் கொள்வது நல்லது

இதற்கு அதிகமாக இணைய வழி வகுப்புகள் பார்ப்பது உங்களுடைய கண்களுக்கு பாதிப்பு கண்வலி தலைவலி தூக்கம் வராமல் உள்ளிட்ட பல பிரச்சனைகளை உருவாக்கும்

அதிக நீல வெளிச்சம் படும் இந்தக் கருவிகளில் குழந்தைகள் இருக்கும் நேரமும் கட்டுப்படுத்த வேண்டி இருக்கும் ஏனெனில் நீல வெளிச்சம் வெளியிடும் இத்தகைய கருவிகளினால்குழந்தைக்கு வரும் தூக்கம் பாதிக்கப்படும் என ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading