childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

பிள்ளைகளுக்கு மருந்து கொடுக்கும்போது

1 min read

பிள்ளைகளுக்கு மருந்து கொடுக்கும்போது பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை விஷயங்களைப் பற்றி குழந்தைகள் நல மருத்துவர் கூறும் தகவல்கள்.

குழந்தைகளுடன் டூர் அல்லது நீண்ட பயணம் செய்யும் பெற்றோர் முதலில் செய்வது குழந்தைகளுக்கான மருந்துகளை எடுத்து வைப்பதுதான். வெளியூர் செல்லும் இடங்களில் குடும்ப மருத்துவர் எழுதித்தந்த மருந்து கிடைக்காத சூழல் வரும் என்பதால், எதற்கும் இருக்கட்டும் என்று கூடுதலாக மருந்துகளை வாங்கிச் செல்லும் பெற்றோர்களும் உண்டு. வீட்டில் இருக்கும்போதும் காய்ச்சல், சளி மருந்துகளைத் தயாராக வைத்திருப்பார்கள். இவை பிள்ளைகள் மீதான அக்கறை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இதில் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். இல்லையெனில், குழந்தையின் உடல்நலனைப் பாதிக்கக்கூடும்.

பிள்ளைகளுக்கு மருந்து கொடுக்கும்போது பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை விஷயங்களைப் பற்றி குழந்தைகள் நல மருத்துவர்  கூறும் தகவல்கள் இதோ:

* முதல் விஷயம், குழந்தைகளுக்கு மருத்துவர் ஆலோசனை இல்லாமல், மருந்து அல்லது மாத்திரைகளைத் தருவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, மெடிக்கல் ஷாப்களில் குழந்தையின் உடல்நலக் குறைவைச் சொல்லி, மருந்து வாங்கித் தருவது சரியானதல்ல. அது பிள்ளைகளுக்கு வேறு விதத்தில் ஏதேனும் தீங்கை விளைவிக்கக்கூடும்.

* எட்டாத உயரத்தில் மருந்துகளை வைக்கவும் என்று மருந்துப் பெட்டியில் எழுதியிருப்பதைத் தவறாமல் பின்பற்றவும். அதில் அலட்சியம் கூடாது.

* பிள்ளைகளின் எடைக்கேற்பவும் வயதுக்கேற்பவும் மருந்துகளின் அளவும் அதன் வீரியங்களும் வேறுபடும். இந்த தெளிவு அவசியம். ஏனெனில், சின்னக் குழந்தையின் மருந்தை, பெரிய குழந்தைக்கு இரண்டு மடங்காகக் கொடுக்கலாம் எனச் சிலர் நினைப்பார்கள். அது தவறு. மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

* இருமல், காய்ச்சல் மருந்து மற்றும் மாத்திரைகள்தான் பிள்ளைகளுக்கு அதிகம் கொடுக்கப்படுகின்றன. வழக்கமாகக் கொடுப்பதுதானே என்று அளவுக்கு அதிகமாகக் கொடுக்கும்போது குட்டீஸ்களின் ஈரல்களுக்குத் தீங்கை விளைவிக்கக்கூடும். கவனம் தேவை.

* மருந்துகளின் எக்ஸ்பெரி தேதிகளைப் பார்த்து வாங்கியிருந்தாலும். குட்டீஸ்களுக்கு அவற்றைத் தரும் முன் ஒருமுறை செக் செய்துகொள்வது நல்லது. ஏனெனில், ஒரு மருந்தின் பழைய பாட்டிலை எடுத்துவிட வாய்ப்பு இருக்கிறது அல்லவா?

* மிட்டாய் வடிவம் அல்லது குட்டீஸ்களை ஈர்க்கும் வடிவத்தில் இருக்கும் மருந்துகளை, குழந்தைகளின் எட்டாத உயரத்தில் மட்டுமல்ல, கண்களில் படாத இடத்தில் வைக்க வேண்டும். ஏனென்றால், குழந்தைகள் எப்படியாவது அந்த மருந்தை எடுத்துச் சாப்பிடும் ஆசை, பார்க்கும்போதெல்லாம் கொடுத்துக்கொண்டே இருக்கும்.

* சில மாத்திரைகள் இனிப்பாக இருக்கும். அவை விழுங்கக்கூடிய மாத்திரைகள் என்றால் பிள்ளைகளுக்குக் கொடுக்கும்போது விழுங்குவதற்குப் பழக்க வேண்டும். சில குழந்தைகளில் வாயில் சிறிது நேரம் வைத்திருந்து, துப்பிவிடக் கூடும். அதனால், மாத்திரையின் பலன் கிடைக்காமல் போய்விடும்.

* சில மருத்துகள் இனிப்பாக இருக்கும். அதைப் பிள்ளைகள் விரும்பிக் குடிப்பர். ஆனால், அதை மருத்துவர் கூறியிருப்பதன் அளவை விடவும் அதிகமாகச் சில குட்டீஸ்கள் கேட்டு அடம்பிடிக்கலாம். அதற்காக, கொஞ்சம் கொடுப்போம் என்று கொடுக்கக்கூடாது.

* மருந்துகளைக் கொடுக்கும் ஸ்பூன், ஃபில்லர், மூடி போன்றவற்றைப் பயன்படுத்தும்போது, அதன் அளவு மருத்துவர் கூறியதாக இருக்கும்படியாகச் சரி பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு முன், அவை சுத்தமாக இருக்கின்றனவா என்பதையும் பார்க்க வேண்டும்.

* மருந்துகளை, மருத்துவர் அறிவுறுத்தியிருக்கும் காலம் வரை குழந்தைகளுக்குக் கொடுத்தால் போதுமானது. அதை நீட்டிக்க வேண்டும் என்று கருதினால், அதற்கும் மருத்துவர் ஆலோசனை நிச்சயம் வேண்டும். -நன்றி. மா.யுவராணி விகடன் .காம்

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading