childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

பிறந்தகுழந்தையின் வயிற்றுப் போக்கு தொடர்பான நம்பிக்கைகளும், விளக்கங்களும்

1 min read

breastcrawl1. தவறான நம்பிக்கை: தாய்பால் மட்டுமே குடிக்கும் என் குழந்தைக்கு 10-12 முறை மலம் கழிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாகப் போகிறது. செரிமானம் ஆக மருந்து வேண்டும்.
சரியான விளக்கம்: தாய்பால் மட்டும் குடிக்கும் சேய்க்கு 10-12 முறை ஒரு நாளைக்கு மலம் கழிப்பது இயற்கையே. அது சீரணக் கோளாறு அல்ல. சரியாக எடை ஏறி, பால் குடித்து உறங்கும் இக்குழந்தை  மலம் கழிப்பது அடிக்கடி இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை.
சில நேரங்களில், தாய் ஒரு மணிக்கொருமுறை 5-10 நிமிடங்கள் மட்டுமே பால் தரும் பழக்கம் கொண்டிருந்தால், மார்ப்பகத்திலிருந்து அதிகமாக முன்பால் மட்டுமே கிடைத்திருக்கும். இந்தப்பாலில் சர்க்கரைச் சத்தின் அளவு அதிகமாக இருப்பதால், அடிக்கடி மலம் கழிக்கலாம். பால் தரும்போது ஒரு மார்ப்பகத்தில் முழுமையாகத் தராமல் ஒவ்வொருமுறை பாலூட்டும் போதும் இருபக்கமும் தருவதாலும் அடிக்கடி மலம் கழிக்கலாம்.
இது வயிற்றுப்போக்கு அல்ல. தாய்;பாலில் உள்ள அதிக சர்க்கரைச் சத்தின் காரணமாக அதிகமாக மலம் வெளியேறுகிறது. இதற்கு சீரண மருந்துகள், கை மருந்துகள் எதுவும் தேவைப்படாது.
தாய் பாலூட்டும் போது முழுவதும் ஒருபக்கம் தந்தபின் அடுத்த மார்ப்பகத்தில் 20-30 நிமிடம் தந்தால் போதும். முதல் 3 மாதங்களுக்கு தினம் 30 கிராம் எடை ஏறி கொழு கொழுவொன்று இருக்கும் குழந்தை ஆரோக்கியமான குழந்தை தானே!!!
2. தவறான நம்பிக்கை: குழந்தை மலம் கழிக்கும் போது பச்சை பச்சையாக போகிறது. சில நேரங்களில் மட்டும் மஞ்சளாக உள்ளது இது நோய் தானா?


சரியான விளக்கம்: முதலில் சொன்ன மாதிரி, சரியாக குழந்தையின் வளர்ச்சி இருக்கும் போது ஏன் கவலைப்பட வேண்டும். பச்சையாக போகும் மலத்தினை கண்டு பயப்படுவதற்கு காரணம், நோய்க்கிருமி தாக்கி இருக்குமே என்ற சந்தேகமே.
20-30 ஆண்டுகளுக்கு முன்னர் ஊட்டச்சத்து பற்றாத குழந்தைகளுக்கு ஏற்பட்ட கொடிய சூடோமோனாஸ் கிருமி தாக்கி பேராபத்து விளைவித்தது. நோயுற்ற அந்த குழந்தையின் மலத்தின் நிறம் பச்சை என்பதால் அந்த பயம் இன்றளவிலும் தொடர்கிறது.
நம் குழந்தை நன்கு தாய்பால் குடிக்கிறது. உடல்நலம் சரியாக உள்ளது. நம் குழந்தையின் மலம் சில நேரங்களில் பச்சையாகப் போவதற்கு காரணம், சீரணத்திற்கு உதவும் பித்தநீர் கலந்து வருவது தான். இது நோயல்ல. மருந்துகள் தேவையில்லை. தாய்பாலினை தொடர்ந்து ஊட்டவும் எந்தவொரு பரிசோதனையும் தேவையில்லை.

 

football hold
3. தவறான நம்பிக்கை: வயிற்றுப்போக்கு உள்ள குழந்தையை பட்டினி போட வேண்டும். அப்போது தான் அடிக்கடி மலம் கழிக்காது.

சரியான விளக்கம்: வயிற்றுப் போக்கு ஏற்படும் போது உடலில் இருந்து நீர் மற்றும் சோடியம்/பொட்டாசியம்/உப்புச்சத்து இழப்பு ஏற்படுகிறது. உடலில் அமிலத்தன்மை மாறும் அபாயம் உள்ளது.
இந்த நேரத்தில் தாய்பாலூட்டும் குழந்தைகளுக்கு தொடர்ந்து தாய்ப்பாலினை தர வேண்டும். ஏற்பட்ட நீர் மற்றும் உப்புச்சத்துகளை ஈடுகட்ட உப்பு சர்கரைக் கரைசலினை அடிக்கடி தரலாம்.

6 மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அரிசிக்கஞ்சி, பார்லி கஞ்சி, அரிசி பருப்பு கஞ்சி, இளநீர், சூப் மற்றும் கரைத்த உணவுகளைத் தரலாம். கடையில் விற்கும் உடனடி மாவுக்கஞ்சி, பால் பவுடர் போன்றவை வயிற்றுப் போக்கினை அதிகரிக்க செய்யும். இனிப்புச் சத்தினைக் கொண்டிருக்கலாம். எனவே, தவிர்க்கவும்.

குழந்தை வழக்கமாக உண்ணும் இட்லி, மோர்/தயிர்சாதம், கஞ்சி சாதம் இவை பெரும்பாலான நேரங்களில் போதுமானது. பாட்டிலில் உள்ள ஜூஸ், பழச்சாறு மற்றும் பழவகைகளில் உள்ள இனிப்புச்சத்து வைரஸ் வயிற்றுப்போக்கினை அதிகரிக்கும். எனவே, இவைகளைத் தருவதினைத் தவிர்க்கவும்.

csm_Laktoseintoleranz_Abb_NS-Mappe_englisch_f84a1f757f

4. தவறான நம்பிக்கை: பாலூட்டிக் கொண்டிருக்க குழந்தையின் மலத்தில் லேக்டோஸ் உள்ளது. எனவே தாய்பால் சேரவில்லை. அதனை நிறுத்திவிட்டு, சோயாபால் (அ) பால்பவுடர் தர வேண்டும்.

சரியான விளக்கம்: அறிவியலுக்கு மாறுபட்ட தவறான கண்ணோட்டம் இது. முதலில் ஏன் மலத்தில் லேக்டோஸ் வருகிறது? எனப் பார்ப்போம். பாலில் உள்ள இனிப்புச்சத்தான லேக்டோஸ் குடலின் உள்படலத்தில் சுரக்கும் லேக்டேஸ் நொதிகளால் சீரணிக்கப்படும்.
வைரஸ் வயிற்றுப்போக்கின் போது குடலின் உள் படலத்திலுள்ள செல்கள் அழிந்துவிடும். எனவே, லேக்டேஸ் சுரப்பு குறைவாகிறது. மீண்டும் பழைய அளவிற்கு சுரக்க 10-14 நாட்கள் ஆகும். அதுவரை தாய்பாலில் உள்ள லேக்டோஸ் சத்து சரிவர சீரணமாகாமல் மலத்துடனே வெளியே வருகிறது. அதன் காரணமாக அதிக சத்தத்துடன், துர்நாற்றத்துடன் மலம் கழிக்கும். சரியாக சீரணிக்கப்படாத லேக்டோஸ், லேக்டிக் அமிலமாக வெளியேறும் போது ஆசனவாயில் புண் ஏற்படும். மலம் கழிக்கும் முன் குழந்தை வலியினால் அழும். பிசு பிசுப்பாக, நுரை நுரையான எடைகுறைந்த மலமாக வெளியேறும். நோயின் தன்மையினை புரிந்து கொண்டு தொடர்ந்து பாலூட்ட வேண்டும். எக்காரணம் கொண்டும் தாய்பாலினை நிறுத்தக் கூடாது. வேறு பால், சோயாபவுடர் தரக்கூடாது.

5. தவறான நம்பிக்கை: லேக்டோஸ் சீரணக்கோளாறு சரியாகது. பால்பவுடர் சோயா பால் தான் தீர்வு.
சரியான விளக்கம்: பிறவியிலே லேக்டோஸ் நொதி குறைவாக உள்ள குழந்தைகள் மிகக்குறைவு. வைரஸ் மற்றும் குடலில் நோய்த்தொற்று ஏற்பட்டபின், ஏற்படும் லேக்டோஸ் குறைபாடு தான் 99 விழுக்காடு.

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading