தொடுஉணர்வு (Tactile) மற்றும் தசை இயக்கத்தின் உள்உணர்வுப் (Kinesthetic) பயிற்சிகள். உருவங்களைத் தொட்டு உணர்ந்து, அதன் நயமான தன்மைகளை அறிதல் (Feeling the structure and Textures). உம்:- மரம், உலோகம், உப்புக் காகிதம், துணி, பஞ்சு, தொடு பலகைகள் (Touch boards) போன்றவைகளில் உள்ள ஈரப்பதம் போன்ற தன்மைகளை தொட்டு உணர்ந்து அதன் வடிவங்கள், வெப்பநிலை, எழுத்துக்கள் ஆகியவற்றை கண்டறிதல்.
ஒருங்கிணைந்த புலன் அறிதிறன் (Perceptuasl integration).கேட்டல், பார்த்தல், தொடுதல் ஆகிய புலன் அறிவை ஒன்றிணைத்து புரியவைத்தலுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். தலை, கை, கால் ஆகிய உறுப்புகளின் அசைவு மூலம் பொது உடல் நகர்வை ஒன்றியக்குவதற்கும் பயிற்சி தேவை. நாம் நன்கு பேசுவதற்கு,கேட்கும் திறனும், பேச்சு சதை இயக்கமும் சேர்ந்து நன்கு இயங்க வேண்டும் என்பதிலிருந்து; ஒருங்கிணைந்த புலனறிவு / செயல் இயக்கத்திறன் (Sensori-Motor integration) எவ்வளவு முக்கியம் என்பதை அறியலாம். புரிதலுக்கான இவ்வகை பயிற்சிகள் Perceptual skill training என அறியப்படுகிறது.
தசை இயக்க பயிற்சிகள் (Motor movement exercises). சாதாரண மற்றும் நுட்ப தசை இயக்கத்திற்கான பயிற்சிகள் (Gross motor and Fine motor skills) கொடுக்கப்பட வேண்டும். உடல் நிலை தானறிதல் பயிற்சி (Body image) கொடுப்பதால், உடல் உறுப்புகளின் இயல்பு நிலை, அதன் செயல்பாடுகள் பற்றிய புரிதலை உணர்த்துதல் சுலபமாகும். உடல் உறுப்புகளை நிஜமாகவோ படத்திலோ சுட்டிக்காட்டுதல், படத்தில் விடுபட்ட பாகங்களைக் கண்டறிதல் போன்ற பயிற்சகளை கொடுக்கலாம். பஸ் ஓட்டுனர், காவலர், தையல்காரர் போன்றவர்களின் வேலையை நடித்துக் காட்டுதல்; உட்கார், நட போன்ற கட்டளைகளை செய்வித்தல் போன்றவற்றால், அச்செயலைப்பற்றிய பயிற்சிக்கு உதவியாக இருக்கும். நடக்கும் போது வலது கால் / இடது கால் என இருவேறு நிற கட்டங்களில் சறியாக வைக்க பயிற்றுவிக்கலாம். மேஜைக்கு அடியில் இருந்து குறிப்பிட்ட தூரத்தைக் கடந்து வெளியே வருவதற்கு எத்தனை பாத அடிகளை வைப்பது என மதிப்பீடு செய்வதற்கு (Estimation) பயிற்சி தேவை. நீச்சல், நீரில், மூழ்கி எழுதுதல் போன்ற நீர் விளையாட்டுகள் மூலமாக பயிற்சி அளிக்கலாம். கண் பார்வையும் கை அசைவும் ஒன்றிணைந்த செயலுக்கான (Eye hand coordination) பயிற்சிகள் கொடுக்க வேண்டும். பந்து வீசுதல், அடித்தல், பிடித்தல் போன்ற விளையாட்டுகளாலும்; கோடுகளை இணைத்தல் (Joining dots), கோட்டின் மேலேயே வரைதல் (Tracing), படங்களை வெட்டுதல், Stencil வரைவான் உபயோகித்தல், பென்சில் வைத்து எழுதுதல், வடிவங்களை வரைதல் போன்றவைகளாலும் தசை இயக்க பயிற்சிகள் அளிக்கலாம்.
பொதுவான தசை இயக்க (Gross motor) பயிற்சிக்கு கீழ்கண்ட செயல்கள் உதவும். முன்னோக்கியும் /பக்கவாட்டிலும் /பின்னோக்கியும் நடப்பது (Forward, Side and Backward Walking), நேரான, வளைவான / குறுகிய பாதையில் நடப்பது, நடக்கும்போது கைகளை ஆட்டியும் /கைகளை வெவ்வேறு நிலைகளில் வைத்தும் போவது,பொருள்களை சுமந்தும் /விலங்குகளைப் போலவும் நடப்பது நல்லது. குதித்து குதித்தும், ஏணிப்படிகள் இடையையும், மரப்பாலத்தின் மீதும், நூல் ஏணியிலும் நடக்கலாம். அரைவட்ட பலகையின் மீது நின்று சமநிலைப் படுத்துதல் (Balance walk) பயிற்சி செய்யலாம்.
சமப்படுத்துதல் (Balance walk) பயிற்சி செய்யலாம்.
பேச்சுப் பயிற்சி (Speech Training). பெரும்பாலான கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு பேச்சுப் பயிற்சி (Speech Training) மிகவும் அத்தியாவசியமானதாக அமையும். பெற்றோர்களின் நல்ல கவனிப்பும், தொடர் தூண்டுதலும் பேச்சுப் பயிற்சிக்கு உதவியாய் இருக்கும். குழந்தை எழுப்பும் சப்தத்தை பெற்றோர்கள் திரும்பச் சொல்வதை Echolalia என்கிறோம். பெற்றோர்கள் / ஆசிரியர்கள் சொல்வதை குழந்தை திரும்பச் சொல்லி பழகுவதை Verbal imitation என்கிறோம். அவர்களின் மொழி வளர்ச்சிக்கேற்ற வார்த்தைகள், வாக்கியங்கள், படங்களுடன் பயன்படுத்தப்பட வேண்டும் (Illustration). முக்கிய வார்த்தைகளுக்கு தொடர்புடைய விளக்கங்களை தருதல் Modelling and expansion எனப்படுகிறது.
கட்டளைகள் பிறப்பதற்கு (Commandsa) உற்சாகப்படுத்தலாம். வார்த்தைகளை புரிந்து கொள்வதற்கு சிரமப்பட்டால், பொருந்தக்கூடிய குறிப்பை (Semantic cues) கொடுத்தும், சாத்தியப்பட்ட பதில்களில் சரியானதை (Binary choices) தேர்ந்தெடுக்கவும் உதவி செய்யலாம். பதிலை வரவழைக்கத் தூண்டும் (Prompting) வார்த்தைகளை அளிக்கலாம். பெரிய வாக்கியங்களைப் பிரித்து சொல்வதற்கு (Shapping) பழக்கலாம். முடிக்கப்படாத வாக்கியத்திற்கு தகுந்த சொற்களைக் கோர்த்து (Sentence completion) நிறைவு செய்ய சொல்லலாம். வாக்கியத்தில் உள்ள பிழைகளை கண்டறிய (Error identification) ஊக்குவிக்கலாம். கேள்வி பதில் சமயத்தில் ஆம் / இல்லை என சரியாக சொல்ல பயிற்சி கொடுக்கலாம். கேள்விக்கேற்ற குறிப்பிட்ட பதிலை எதிர்பார்க்கும்போது, அதை எப்படி தேர்ந்தெடுப்பது என்பது குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். வாக்கியத்தில் மாற்றி தரப்பட்ட வார்த்தைகளை சீரமைக்க (Sentence re- arrangement) செய்யலாம். கோர்வையாக கதை சொல்ல (Story telling) வைக்கலாம்.
பேச்சு சப்தங்களான உயிரெழுத்து, / மெய்யெழுத்து, / உயிர்மெய் எழுத்துக்கள், குறில் / நெடில் எழுத்துக்கள், வார்த்தைகள், வாக்கியங்கள், சிறிய விவரமான உரையாடல், கதை சொல்லுதல், கேள்வி / பதில், விவரித்தல் ஆகியவற்றிற்கும் பயிற்சி அளிக்க வேண்டும். பேச்சில் உள்ள தவறுகளை கண்டறிதலுக்கும், தங்கள் பேச்சிற்கான சந்தர்ப்பங்களுக்கு காத்திருக்கவும் பயிற்சி தேவை. முக்கிய வார்த்தையை விரிவு படுத்தி பேசுவது (Expanding key words), குழந்தை சொல்ல நினைப்பதை நாம் எடுத்துரைப்பது (Parellel talk) ஆகிய பயிற்சிகளை மேற்கொள்ளலாம். காணும் காட்சிகளை விளக்கமாக எடுத்துரைக்க கேட்கலாம். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கேட்கும் எண்ணிக்கையில் மிருகங்கள், பறவைகள், பூக்கள், காய்கள், பழங்கள், போன்ற தொகுப்பு வார்த்தை களின் பெயர்களை (Categorisation) சொல்ல வைக்கலாம்.
வார்த்தைகளை ஜோடி ஜோடியாக (ஆண்/பெண், பேப்பர்/பென்சில்) சொல்ல வைக்கலாம். பேச்சில் வரும் உச்சரிப்பு மற்றும் ராகத்திற்கான முன்னேற்ற பயிற்சிகளை அளிக்கலாம். சரியான உச்சரிப்பு கொண்டு வர உதவும் உறிஞ்சுதல், ஊதுதல், மெல்லுதல், நக்குதல், நாக்கு அசைத்தல் போன்ற சில செயல்களை செய்விக்கலாம். பேசும்போது தொண்டையில் கை வைத்து பேச்சு சதைகளின் அதிர்வை தொட்டு உணரவும், உதட்டு அசைவை கண்ணாடியில் பார்ப்பதற்கும் பயிற்சி அளிக்கலாம்.
மொழிப்பயிற்சி (Language Training). மொழிப்பயிற்சியில் அதிகமான வார்த்தைகளை கற்பது, வாக்கியங்களை அமைத்தல், அர்த்தங்கள் மாறும் சப்தங்களை உபயோகித்தல் (ஒருமை/பன்மை, நிகழ்காலம்/எதிர்காலம் / இறந்தகாலம்), இலக்கண மாற்றங்ககளுக்கான சப்தங்கள் போன்றவைகள் கற்பிக்கப்படவேண்டும். சுலபமான வாக்கியங்களில் ஆரம்பித்து இரண்டு/மூன்று வாக்கியங்களை சேர்த்து சொல்லும் கடினமான வாக்கிய அமைப்புகள் வரை (Simple to complex sentences) சொல்லிக்கொடுக்கவேண்டும். பெயர்ச் சொற்களை மட்டும் கொடுத்து, அத்துடன் வினைச்சொற்களை சேர்த்து வாக்கியங்கள் அமைக்க சொல்லலாம் (Content word to function words). ஒரு வாக்கியத்தில் உள்ள பெயர்ச்சொல்லையோ அல்லது வினைச்சொல்லையோ மாற்றிப்போட்டு,புதிய வாக்கியங்களை உண்டாக்க பயிற்சி அளித்தல்வேண்டும் . உம்:- ராமன் படிக்கிறான், சீதை படிக்கிறாள், ராமன் ஓடுகிறான். புதிதாக கற்றுக் கொண்ட வார்த்தைகளையோ வாக்கியங்களையோ, தினசரி பேச்சு வழக்கில் கையாள வைப்பதற்கான பயிற்சி (Functional usage of words) தேவை. இதை நேரடி உரையாடல், தொலைபேசி இணைப்பு உரையாடல் மற்றும் விவாதம் போன்றவற்றில் கையாளலாம். பொருள்களின் நிறம், அளவு, வடிவம், தன்மை போன்றவற்றை விளக்கலாம். குழந்தைகளின் யோசிக்கும்/நினைவாற்றல் திறனை சோதிக்க கேள்வி கேட்கலாம். ஒரே ராகத்தில் வரும் பொருள்களை பட்டியலிட வைக்கலாம். பேச்சில் ஏன்? எப்படி? என்ற கேள்விகளை பயன்படுத்த பயிற்சி அளிக்கலாம். மொழி வளர்ச்சிக்கு, பாதி சொல்லப்பட்ட கதையை நிறைவு செய்ய வைத்தல் ஒரு நல்ல பயிற்சி முறை ஆகும்.
தொடரும்
