
சிறு குழந்தைகளை வீட்டில் வைத்திருக்கும் பெற்றோர்களின் பெரிய குழப்பமே ஆறு மாதத்திற்கு பிறகு என்ன உணவை குழந்தைக்கு தருவது ?என்பது தான்.
முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால். முழுமையான உணவு என்பது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயம் ஆறு மாதத்திற்கு பிறகு என்ன உணவு தருவது? எப்படி தருவது? என்பதில் ஏகப்பட்ட குழப்பங்கள் ;ஏகப்பட்ட தனிநபர் விருப்பங்கள். மாமியாரும் அம்மாவும் சொல்வதைக் கேட்டு நடப்பதா? அல்லது தான் படித்த, பார்த்த விஷயங்களை கடைபிடிப்பதா? என்பது தான் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தாய்மார்களுக்கு முன் இருக்கும் மிகப்பெரிய கேள்வி!!!!!
முதலில் இணை உணவு என்பது என்ன? இது வெளிநாட்டில் இருந்து வந்த விஷயமா ?இல்லை நமது கலாச்சாரத்தில் இருந்தததா? உணவாக என்ன தரவேண்டும்? ஏன் இனிப்பை தரக்கூடாது?என்பதை பற்றி பார்ப்போம்
ஆறு மாதத்திற்கு பிறகு குழந்தைக்கு வீட்டு உணவினை பழக்குவதை வீனிங்க் டயட் (weaning diet)என்று முதலிலேசொல்லி வந்தார்கள். அதாவது தாய்ப்பாலை குறைத்து வீட்டு உணவு தருவது என்ற அர்த்தத்தில் இது பயன்படுத்தப்பட்டு வந்தது இதன் காரணமாக ஆறு மாதத்திற்கு பின்பு 50% சத்துக்களைத் தரக்கூடிய தாய்ப்பால் மறக்கடிக்கப்பட்டது. சில வீடுகளில் நிறுத்தப்பட்டது. ஒரு வயதுக்குப் பிறகும் கூட தாய்ப்பாலிருந்து கிடைக்கும் சத்து குழந்தையின் மூன்றில் ஒரு பங்குத் தேவையை பூர்த்தி செய்யும் என்பது நிறைய பேருக்கு இன்னும் தெரியாது.இதனைக் தவிர்க்க உலக சுகாதார நிறுவனம் கம்பிளிமெண்டரி டயட் (complementary diet) அதாவது தாய்ப்பாலுடன் இணைந்து தரும் ‘இணை உணவு என்ற சொற்றொடரை பழக்கத்திற்கு கொண்டுவந்தனர்

இந்தியக் கலாச்சாரத்தில் இதற்கு இடம் உள்ளதா? என்பதனைப் பார்ப்போம் உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் குழந்தைக்கு ஆறு மாதம் முடிந்த பின் அன்னபிரசன்னம் சோறு ஊட்டுதல் என்ற சடங்கு மாநிலம் மொழி வேறுபாடு இல்லாமல் இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது இந்த நிகழ்வில் ஆறுமாதம் கடந்த குழந்தைக்கு வீட்டில் சமைத்த உணவினை ,தாய் பருப்பு மற்றும் தானியத்தோடு சேர்த்து கலந்து தருகிறாள் .ஒவ்வொரு ருசியாக குழந்தைக்கு படிப்படியாக பழகுக்கிறாள் இது வீட்டிலுள்ள பூஜை அறையில் நடைபெற்ற சம்பவமாக இருந்துவந்திருக்கிறது நாட்கள் செல்லச் செல்ல ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கோயில் என மக்களே தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள் அது சாதாரணமாக கிருஷ்ணனுடைய கோயிலாக இருக்கிறது தென்மாநிலங்களில் குருவாயூரப்பன் சன்னதியில் அன்னபிரசன்னம் -உணவு ஊட்டுதல் என்பது குடும்பத்தோடு செய்யும் சடங்காக ஆண்டாண்டு காலமாக இருந்து வந்திருக்கிறது

இதிலே ஒரு பிரச்சனை புதுசாக ஏற்பட்டிருக்கிறது குறிப்பிட்ட கோயிலுக்கு செல்வதற்கு வசதிப் படவில்லை என்றால் உணவு ஊட்டும் வழக்கம் தள்ளிப் போடப்படுகிறது இது குழந்தையின் உணவு மற்றும் சத்துத் தேவையை பூர்த்தி செய்யாமல் வளர்ச்சி குறைவுக்கு வழிகாட்டுகிறது எனவே குறைந்தபட்சம் உங்கள் மனதிற்கு உகந்த கடவுளர் படம் முன் உணவை ஆறு மாதத்திற்கு(180 நாட்கள் ஆன பின்) பின்பு ஊட்டிப் பழக்குங்கள் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள்
ஆறு மாதம் வரை குழந்தை நாக்கை துருத்திக் கொண்டும் வெளியே தள்ளிக் கொண்டும் இருக்கும். தாய்ப்பால் குடிக்கும் போது நாக்கின் வேறுபட்ட அசைவுகளுக்கு ஏற்ப பால் கிடைப்பது அதிகமாவதால் அந்தப் பழக்கத்தை யும் குழந்தை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும் அதனால் ஆறு மாதங்களுக்கு முன்பு உணவு தரும்போது துப்புவது அதிகமாக இருக்கும் தாய்ப்பால் குறைய ஆரம்பித்த பிறகு குழந்தையே வீட்டு உணவினை உண்ண விரும்புஎஇறது

இங்குதான் பிரச்சனை ஆரம்பமாகிறது ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு தனி அட்டவணை இருக்கிறது .தாய்ப்பால் குறைந்துவிட்டது ;வேறு பால் சேர்க்கலாமா? என்பது முதல் கேள்வி. வேறு பால், பால் பவுடர் கட்டாயம் சேர்க்காதீர்கள் ஒரு வயது வரை அதிகமாக தேவைப்படும் 50 சதவீத சத்துக்களையும் இரண்டு வயது அல்லது அதற்கு பின்பு வரை 33 %சத்துக்களையும் தாய்ப்பால் குழந்தைக்குத் தரும்.
உங்கள் வீட்டு உணவை குழந்தை விருப்பத்திற்கு ஏற்ப தந்து பழக்கவும். உணவில் ருசி இருக்க வேண்டும் காரம் வேண்டாம் நீங்கள் உண்ணும் அளவு உப்பு சேர்த்து இருக்க வேண்டும் இனிப்பை சேர்க்க வேண்டாம் வெறும் சர்க்கரை போட்டு தரக்கூடிய பழச்சாறுகள் வேண்டாம்
முதல் தவறு ருசி இல்லாமல் ஒரே மாதிரி உணவை தினம்தோறும் கொடுப்பதன் மூலம் குழந்தையின் சுவை அரும்புகளை தூண்டாமல் உணவின் மேல் வெறுப்பு வர செய்யும் பெற்றோர்கள் ஒரு குறிப்பிட்ட உணவை மட்டும் தருதல் வேண்டாம் அதாவது உருளைக்கிழங்கு கேரட் ஆப்பிள் வேக வைத்துதருவது , பால் சோறு நெய் சோறு, உப்புக்கல் சாதம் எனத் தருவது, பிஸ்கட்டை பாலில் தண்ணீர் தொட்டு தருவது,ருசியே இல்லாமல் வெறும் பருப்பை வேக வைத்து பருப்பு சாதம் தருவது என பலவிதங்களில் ருசி இல்லாத உணவு குழந்தைக்கு தரப்படுகிறது அதன் விளைவாக குழந்தை உணவை வாயினுள் வைத்தவுடன் துப்பஆரம்பிக்கிறது குழந்தைக்கு உணவு உட்கொள்ள தெரியவில்லை அதனால் வெறும் கஞ்சி தரலாம் அல்லது வேறு பால் தரலாம் என்று வீட்டு முடிவு செய்கிறார்கள் இது அவர்கள் செய்யும் இரண்டாம் தவறு.

இணை உணவில் இனிப்பு ஏன் சேர்க்க கூடாது? என்பதனைப் பற்றி இப்போது பார்ப்போம் பரிணாம வளர்ச்சியில் பல்லாயிரம் ஆண்டுகளாக மனித இனம் உயிர் வாழ முக்கியமாக உதவியது இனிப்பு தான். தேவையான உடனடிச் சக்தியை தரும் பழங்கள் கிழங்குகள் ஆகியவைதான் மனித இனத்தின் தொடர் வாழ்விற்கு காரணமாக இருந்தன. ஆபத்தை விளைவிக்காத உணவுப் பொருள்கள் அனைத்தும் இனிப்புடன் இருந்தது தேவையான சக்தியை அளித்தது ஆகியவை இயற்கையாகவே மனித குழந்தைக்கு இனிப்பின் மேல் ஒரு விருப்பத்தை ஏற்படுத்திவிட்டது கசப்பு துவர்ப்பு ஆகிய சுவைகளுடன் உள்ள உணவுகள் பெரும்பாலானவை ஆபத்தை விளைவிக்கக் கூடியவையாக இருந்ததினால் குழந்தைகளுக்கு இயற்கையாகவே அவை பிடிப்பதில்லை
வீட்டு உணவினை ருசியோடு காரமின்றி போதுமான உப்பு சேர்த்து உங்கள் வீட்டு ருசிக்கேற்ப குழந்தைக்கு தரும்போது முன்னே மூளையில் பதிந்திருந்த (இம்பிரின்டிங்)பதிவின் மூலமாக குழந்தைக்கு ருசி பிடிக்கும். உணவினை குழந்தை சாப்பிட ஆரம்பிக்கிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒவ்வொரு உணவாக கர்ப்ப காலத்தில் தாய் உண்ட உணவுகளைத் பழக்கும்போது வெகு சுலபத்தில் வீட்டு உணவுகளை குழந்தையே உண்டு பழகிவிடும் இது குழந்தை முன்னெடுத்துச் செல்லும் இணை உணவு எனப்படுகிறது.பழச்சாறுகளை விட பலங்களைத் தருவது மிகச் சிறந்தது பழச்சாறுகளில் சேர்ந்து உள்ள இனிப்பு வெற்றுக் கலோரிகளை அதிகப்படுத்துவதால் குழந்தைக்கு உடல் பருமன் ஆபத்து அதிகமாகிறது

சர்க்கரை, இனிப்பு சேர்ந்த பிஸ்கட் மற்றும் பேக்கரி பொருட்களை தர ஆரம்பிக்கும்போது அந்த இனிப்பு அதன் சுவை மற்றும் முழு மொறுமொறுப்பின் காரணமாக குழந்தை அதனையே திருப்பித் திருப்பி கேட்கும் . சாக்கரின் பாமாயில் தவிடு மற்றும் மைதா கலந்த பேக்கரி பொருட்களை குழந்தைக்கு தராமல் இருப்பது பிற்கால நோய்களான சர்க்கரை ரத்தகொதிப்பு ஆகியவை ஏற்படாமல் தடுக்க முதல் தடுப்பாக அரணாக இருக்கும் இதைப் போலவேதான் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ் வகைகள் குளிர் பானங்கள் மென் பானங்கள் சாக்லேட் மற்றும் சத்தில்லாத பானங்கள் இனிப்பு சேர்த்த உணவுகள் ஜாம் உள்பட இவைகளை குழந்தை சாப்பிட்டுப் பழகிவிட்டால் உங்கள் வீட்டு உணவுகளையும் சட்னி சாம்பார் பருப்பு காய்கறி கீரைகளை வாயில் போடாது. ருசி பார்க்காது எனவே இணை உணவுகளை பழக்கும்போது குறைந்தபட்சம் 3 வயது தாண்டும் வரையிலாவது குழந்தையின் உணவில் இனிப்பு சேர்க்காமல் இருப்பது எல்லா உணவுகளையும் குழந்தை சாப்பிடுவதை உறுதி செய்ய உதவும்
இனிப்பினைத் தவிர்ப்போம் இணை உணவை வழங்குவோம்
வீட்டு உணவே சிறந்த உணவு கடை உணவு கழிசடை உணவு
பிஸ்கட்டை தவிர்ப்போம் உடல்பருமனை ஒழிப்போம்
சாக்லேட் வேண்டாம் சரியான உடல் எடை பெறுவோம்
