childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

ஆட்டிஸம்-தற்புனை ஆழ்வு

1 min read
 ஆட்டிசம் என்பதை தமிழில் தற்புனை ஆழ்வு  எனச் சொல்லலாம்.அதாவது குழந்தை வெளி உலகத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஆழ்ந்து தனக்குத்தானே உறவாடிக் கொண்டு இருப்பதுதான் ஆட்டிஸம். இதுமன நோய் அல்ல மனவளர்ச்சி குறைபாடும் அல்ல

 ஆட்டிசம் என்பதை தமிழில் தற்புனை ஆழ்வு /மதியிறுக்கம் எனச் சொல்லலாம்.அதாவது குழந்தை வெளிஉலகத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஆழ்ந்து தனக்குத்தானே உறவாடிக் கொண்டு இருப்பதுதான் ஆட்டிஸம். இதுமன நோய் அல்ல ;மனவளர்ச்சி குறைபாடும் அல்ல.

ஆட்டிசம் நோய் வருவதற்கு என்ன காரணம் என்பது உறுதியாகத் தெரியவில்லை .இது பாரம்பரிய,நரம்புஉயிரியல் பிரச்சனை என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுவிட்டது.இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிறந்ததில் இருந்தே எளிதில் காணமுடியாத குறைகளைக் கொண்டிருப்பார்கள். குழந்தை வளர வளர 15 -18 மாதங்களுக்குப் பிறகு  உற்று நோக்கப்படும் போது சாதாரணமாக கண்டறியப்படுகிறது .அமெரிக்காவில் இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 36 இல் 1  என கணக்கிடப்பட்டுள்ளது இந்தியாவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை  சரியாக யாருக்கும் தெரியாது

இக்குழந்தைகள் எவரிடத்திலும் எளிதாக பழகமாட்டார்கள் .கவனமின்றி இருப்பார்கள் தனியாகவே இருப்பார்கள். சுழலும் பொருட்கள் மீது ஆர்வமாக இருப்பார்கள் .தானாகவே சிரித்துக் கொள்வார்கள். மற்றவர்களோடு விளையாடுவது இருக்காது பேசும் வார்த்தைகளில் குறைவாகவே இருக்கும் .வயதுக்கு ஏற்ப சமூக தொடர்புகளை வளர்த்துக் கொள்ள மாட்டார்கள். புலனுணர்வு தூண்டுதலற்கு அளவுக்கு அதிகமாகவோ அல்லது உணர்ச்சிகளை காட்டாமலே இருப்பார்கள் வழக்கத்தினை விட இவர்களுக்கு புலனுணர்வு தூண்டுதல் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம் 

ஒளி, ஒலி ,சுவை, மணம் ,தொடு உணர்வு, ஆகுயவை மற்ற குழந்தைகளை விட இவர்களுக்கு அதிகமாகவோ அல்லது மிகவும் குறைந்கோ இருக்கும் .அதனால் இவ்வாறான உணர்வுகளுக்கு  அதிக அளவில் எதிர்வினை ஆற்றுவார்கள். தினசரி குறிப்பிட்ட வரைமுறைகள், மாற்றம் இல்லாமல் தம் வாழ்க்கை இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள் அதில் சிறு மாற்றம் இருந்தாலும் மனதளவில் கலவரம் அடைந்து விடுவார்கள். ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்

 இத்தகைய குழந்தைகளை சிறு வயதிலேயே கண்டுபிடிக்க தற்போது கணினி பயிற்சிகள் ஆய்வில் பயன்படுத்தப்படுகின்றன .குழந்தை நல மருத்துவரிடம் காண்பிக்கும் போது குழந்தை வயதிற்கேற்ற வளர்ச்சி, முகம் பார்த்து சிரித்தல், மற்றவரோடு பழகுதல், விளையாடுதல் கண்களை உற்று நோக்கல் ,உறவினர்களிடம் போதல் என வயதுக்கேற்ற வளர்ச்சி இருக்கிறதா? என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் இதில் ஏதாவது பிரச்சனை இருப்பின் எம் சாட் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும் .

முதலில் 15 இல் இருந்து 18 மாதத்தில் போடப்படும் MMR  தடுப்பு ஊசி காரணமாக இருக்கலாம் என தவறாக எண்ணினார்கள். அதற்கு முக்கிய காரணம் புகழ்பெற்ற மருத்துவ அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட தவறுதலான கட்டுரைதான் .கட்டுரையை எழுதிய மருத்துவர் தான் வேண்டுமென்றே பொய்ச் செய்தியினை வெளியிட்டதாகவும் அதற்காக வருந்துவதாகவும் தன்னுடைய கட்டுரையை திரும்பப் பெற்றுக்கொண்டார் .அவருடைய மருத்துவ பதிவும் ரத்து செய்யப்பட்டது.

 ஆனாலும் இன்னும் சிலர் அதை உண்மை என்று நம்புகிறார்கள் அதனால் எம் எம் ஆர் தடுப்பூசி போட மறுக்கிறார்கள் அதன் மூலம் எளிதில் கட்டுப்படுத்தக்கூடிய ,தட்டம்மை,மம்ஸ் ரூபெல்லா நோய்கள் பரவி குழந்தைகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றன என்பது உண்மைதான்

இந்த நோய்க்கு முழு மருத்துவம் என்பது இதுவரை இல்லை ஆனால் நோயின் தீவிரத் தன்மையில் இருந்து குழந்தையை வெளிக்கொணர்ந்து படிப்படியாக தன்னை கவனித்துக் கொள்ளவும்  நாளடைவில் தனிமனிதனாக வாழ்வதற்கான பயிற்சிகளையும் தர இயலும் .ஆட்டிஸம் லேசாக பாதித்த மனிதர்கள் நிறைய பேரை நம் வாழ்வில் நாம் சந்திக்கலாம். சிலர் மிக முன்னேறி இருப்பார்கள் சிலர் குறிப்பிட்ட விஷயங்களை வியக்கத்தக்க அளவுக்கு நிபுணத்துவம் பெற்று இருப்பார்கள் அவ்விசயங்களில் அவர்களை மிஞ்சுவதற்கு ஆட்கள் இருக்க மாட்டார்கள்

இக் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தீவிரமான பயிற்சிகள் தேவை. இப்பயிற்சிகள் தினசரி வாழ்க்கை முறை செயலுக்கான பயிற்சிகள் ,புலனுணர்வு சார்ந்த பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி, தொடர்பு ,பயிற்சி ,கற்றல் பயிற்சி என பல வகைப்படும் .எவ்விதமான பயிற்சி தேவை என்பதனை மருத்துவ குழுவினரும் மருத்துவரும் முடிவு செய்வார்கள் .பெற்றோரின் முயற்சி மிக முக்கியம் .வருடக்கணக்கில் தினசரி மனச்சோர்வடையாமல் செய்வது மிக நல்ல முன்னேற்றத்தை கொண்டுவரும் . சிறு வயதிலேயே சுலபத்தில் மாற்றங்களை கொண்டுவரலாம் பெற்றோர்களும் உறவினர்களும் குழந்தைக்கான பயிற்சி முறைகளை கற்றுக் கொண்டு வீட்டில் தொடர்ந்து செய்வது கொரோனா காலத்தில் மிக உதவியாக இருக்கும்

ஒவ்வொருவரும் இக்குறைபாடு பற்றிய செய்திகளை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம் .இக்குழந்தைகளுக்கு உதவும் நிறு னங்களைப் பற்றிய தகவல்களை பெற்றோர்களுக்கு தெரிவிக்கலாம் .நிறுவனங்களுக்கு உதவலாம். இக்குழந்தைகளின் குடும்பத்திற்கு உதவி செய்யலாம். பாதிக்கப்பட்ட குழந்தையின் மறுவாழ்வு பணிகளில்  நாமும் ஈடு படலாம்.  இக் குழந்தைகளை மன நலம் குன்றியவர்களாக நிறைய பேர் நினைத்து விடுவார்கள் .இது தவறு .சரியான நேரத்தில் தொடர்ந்த தீவிர பயிற்சி தந்தால் மிக அதிக பாதிப்பில் இருந்து குழந்தையை விடுவித்து சாதாரண குழந்தையாக மாற்றுவதற்கு இயலும் என்ற செய்தியினை உலக ஆட்டிசம் தினமான இன்று உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்

Autism Spectrum disorder
( தன் புனைவு / மதி இறுக்கம் )

தன்னுள் தானே ஆழ்ந்திட்டாய்
உன்னுள் உலகம் படைத்திட்டாய்
என்னை நீ பார்க்க மறுத்திட்டாய்
அம்மா என்றழைக்க மறந்திட்டாய் !

கூடி விளையாடுதல் தவிர்த்திட்டாய்
நட்பு பாராட்ட தவறிட்டாய்
கூப்பிட்ட குரலை மறுதலித்தாய்
மறு மொழி கூற மறந்திட்டாய்

செய்வன திரும்ப செய்திட்டாய்
அதில் அலுப்பும் சலிப்பும் வென்றிட்டாய்
ஆர்வம் வித்தியாசமாய் காட்டிட்டாய்
அதில் தவறேதும் உணர்ந்திட மறந்திட்டாய் !

தாயின் அணைப்பை வெறுத்திட்டாய்
தந்தையுடன் விளையாட மறுத்திட்டாய்
தூங்கா இரவுகள் கழித்திட்டாய் !

வேண்டும் பொருள் சுட்டுவதில்லை
விரும்பும் பொம்மை காட்டுவதில்லை
ஒன்றரை வயதில் சொல்லொன்றும் மொழிவதில்லை
இரண்டு வயதில் வாக்கியமது வரவில்லை !

சுட்டும் விரலின் தட்டும் பொருளும்
விரியும் வண்ணமும் உனைக் கவர்வதில்லை
மற்றவரைப் போல் செய்ய நினைப்பதில்லை
சறுக்கு மரமும் ஊஞ்சலும் உற்சாகமளிப்பதில்லை !

என் சிரிப்பில் உன் முகம் மலர்வதில்லை
புன்சிரிப்பை பதிலாய் தருவதில்லை
தானே நடக்க முயல்வதில்லை
கண்ணோடு கண் நோக்க நினைப்பதில்லை !

சுற்றுப்புற சத்தங்கள் தருவது குழப்பமே
நிலையான சூழல் நித்தமும் வேண்டுமே
எனில் …
தன் புனைவு உள்ளது திண்ணமே
மருத்துவரை அணுகுதல் நலமே ! ⁃ மருத்துவர் நளினி ⁃ கோவை .

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading