Blog Stats

  • 147,367 hits
ஜனவரி 21, 2026

childhealthtoday-குழந்தைநலம்

குழந்தை நலம்;குடும்ப பலம்

பிரசவத்திற்கு தாய் வீட்டிற்குப் போவது நல்லதா?

1 min read

OLYMPUS DIGITAL CAMERA

இது என்ன கேள்வி? காலம் காலமாக இதுதான் செய்துட்டு வருகிறோம்? தாய் வீட்டில் போய் பிரசவம் பார்ப்பதுதான் நல்லது {நமக்கு கொஞ்சம் விடுதலைஅப்படின்னு நீங்க முணுமுணுத்தது காதுல கேட்கிறது) இருந்தபோதிலும் நம்ம கலாச்சார த்திலிருக்கிற நல்லவைகளை அசை போட கோக்குமாக்கா கேள்வியை போட்டால் தானே பக்கத்தைத் திரும்புவீங்க அதான்


பழங்கால தமிழர் சமுதாயத்தில் கடைபிடித்து வந்த பல பழக்கங்கள் பற்றி இப்போது நாம் ஆராய்வு செய்வோம். தாய் கருவுற்ற நாளிலிருந்து ஏழு மாதங்கள் கழித்த பின்னர் முதலில் வளைகாப்பு அல்லது சீமந்தம் என்ற விழா மணமகன் வீட்டில் நடக்கிறது உறவினர்கள் நெருங்கிய சொந்தக்காரர்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர் கர்ப்பிணி தாய்க்கு அனைவரும் ஆரத்தி எடுத்து நலங்கு வைத்து வாழ்த்துகின்றனர் வளையல்போடுகின்றனர் கலகலவென்று சத்தத்தோடு குழந்தைகள் உறவினர்கள் மற்றும் இளம் பெண்கள் வீட்டையே கலக்குகின்றனர்.

வளைகாப்புக்கு நிறைய பெண்கள் கூடி, கர்ப்பவதிக்கு மூத்த சுமங்கலிகள் வளையல் போடுவார்கள்.இதற்கான காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், “எங்களை எல்லாம் பார்…நாங்கள் எத்தனை பிள்ளைகளைப் பெற்று உன் முன் நிற்கிறோம்?! நீயும் உன் பிரசவத்தை சுலபமாக கடப்பாய்…தைரியமாக இரு!” என்பதை இங்கு நாம் எடுத்துக் கொள்ளலாம்.இந்தச் சடங்கில் ஒரு இனிமையாக உணர்ச்சி ஊட்டுகிற ஒற்றுமையையும் கவனிக்கலாம். வளையல் இடும் பெண்ணின் கையை கர்ப்பப்பைக்கு ஒப்பிட்டுப் பாருங்கள்.கை விரல்களை கூப்பி, வளையல்களை உள்ள செலுத்தும்போது சற்று சுலபமாக இருக்கும். வளையலை மணிக்கட்டுப் பகுதிக்குச் செலுத்தும்போது சற்று கடினமாகி, அந்த வலியைச் சற்றே சற்று பொறுத்துக் கொண்டால்…அடுத்த நிமிடமே கரங்களில் வளையல் ஏறிவிடும். இப்படித்தான் பிரசவமும்!

இந்த வளையல்கள் ஏற்படுத்தும் அதிர்வு ஓசை, கருவில் வளரும் குழந்தைக்கு நல்ல தாலாட்டு. நம் தாய் நம்முடன் இருக்கிறாள் என்று குழந்தைக்கு அது கொடுக்கும் பாதுகாப்பு உணர்வு, அழகானது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.அந்தக் காலத்தில் வீடு என்பது பெரியதாக இருந்தது. பிரசவத்துக்கு முன்பு அடிக்கடி உறக்கம் கலைந்து, அந்தப் பெண்ணுக்கு சிறுநீர் கழிக்க வேண்டியதிருக்கும். இரவு நேரத்தில் கர்ப்பமான பெண் அறையைக் கடந்து, கூடத்தைக் கடந்து, பின்புறமிருக்கும் கழிவறைக்குப் போகும்போது அந்த வளையல் சப்தம் அந்த பெண் எங்கே செல்கிறாள் என்பதை சட்டென்று சுட்டிக்காட்டும்.”ஏன்டி, என்னை எழுப்பக்கூடாதா…இரு நானும் வர்றேன்” என்று உதவிக்குச் செல்வார்கள் வீட்டில் இருக்கும் பெண்கள்.வளையல் போட்ட ‘கையோடு’ கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக தாய் வீட்டுக்குச் செல்வதிலும் அடங்கி இருக்கின்றன அவர்களின் மனநலம் சம்பந்தப்பட்ட நுணுக்கங்கள். இந்திய நாட்டில் மட்டுமின்றி, ஆசிய நாடுகளில் எல்லாம் பிரசவம் என்று வந்தாலே அந்தப் பெண் தாய் வீட்டுக்குச் சென்றுவிடுவது வழக்கமாக இருக்கிறது.ஆம்…பிரசவமாகும் பெண்ணின் உடல்நலம் மட்டுமல்ல, மனநலத்தையும் பாதுகாக்கிற பணி, தாய் வீட்டுக்குத்தான் என்று பார்த்துப் பார்த்து இந்த ஏற்பாட்டை செய்து வைத்துள்ளனர் நம் முன்னோர்கள். 1

வெளிநாடுகளில் வாழும் தம்பதியினருக்கு குழந்தை பிறக்கும் வரை துணை இல்லை..இதுபோன்ற விழாக்கள்((Baby showers)நிறைய இனங்களிடம் இல்லை .பிரசவத்திற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு உறவினர்கள் வருவதுண்டு .தானே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் மருத்துவமனைக்குப் போய் குழந்தை பிறந்தவுடன் (உங்களுடைய இன்சூரன்ஸ் தொகையைப் பொறுத்து) வீட்டுக்கு வரும் நாட்கள் இருக்கும். அறுவை சிகிச்சை என்றால் 3 நாட்களிலும் சுகப்பிரசவம் என்றால் ஒருநாளிலும் வீட்டுக்கு வரவேண்டும். உங்களுக்கு உதவ பணிப் பெண்களை அமர்த்திக் கொள்ளலாம் மற்ற உறவினர்கள் நண்பர்களுடைய ஒத்துழைப்பும் உதவியும் குறைவாகத்தான் இருக்கிறது

நம் நாட்டிலோ,வளைகாப்புக்கு பிறகு வீட்டுக்கு செல்லும் கர்ப்பிணியின் அனைத்து தேவைகளும் தாய் வீட்டில் நிறைவேற்றப்படுகின்றதன.தாய் மகிழ்ச்சியாக இருக்கிறாள். அனைவரும் குழந்தையின் வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் நல்ல தூக்கம் ,தேவையான உணவு ,ஓய்வு மற்றும் குழந்தை பற்றிய நல்ல செய்திகள் மட்டுமே பேசப்படுகின்றன வீடுகளில் நல்ல படங்கள் .பூஜை அறைகளில் வணங்கும் தெய்வங்களின் படங்கள் ஆகியவை நல்ல சிந்தனைகளையும் மனநிலையையும் தாய்க்கு ஏற்படுத்துகின்றன தினம் தினம் பிரார்த்தனை செய்தல், வழிபாடு ,பாட்டுப் பாடுதல் ஆகியவை பொழுது போவதே தெரியாமல் நாட்களைக் கடப்பதற்கு உதவி கின்றன .கூடவே துணைக்கு அம்மா, உதவிக்கு அப்பா மற்றும் உறவினர்கள் என மகிழ்ச்சியோடு கர்ப்பத்தின் கடைசி மாதங்கள்.

மருத்துவமனைக்குச் செல்வதற்கு உதவி செய்ய யார் போவது ?என்பதிலிருந்து ஆரம்பித்து என்ன துணிகளை எடுத்துச் செல்ல வேண்டும்? எந்த மருத்துவமனை ?யார் பகலில்? யார் இரவில் கூட இருப்பது? யார் மாற்றி விடுவது ? என அட்டவணைப் பட்டியலில் தயாராகிவிடுகிறது. அதுமட்டுமின்றி தாயின் வீட்டுச் சூழலில் இருக்கக்கூடிய நல்ல கிருமிகள் தாயின் உடலில் சேர ஆரம்பிக்கின்றன கர்ப்ப காலத்தின் கடைசி மாதங்களில் சேர்ந்த இந்த நல்ல கிருமிகள் குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கின்றன. மருத்துவமனைகளிலும் அல்லது மற்ற இடங்களிலோ இருக்கும் தீமை பயக்கும் கிருமிகள் குழந்தையின் உடலில் சேராமல் தடுக்கின்றன குழந்தைக்கு தேவையான நல்ல கிருமிகளின் முதல் தவணை தாய் வீட்டிலேயே வழங்கப்படுகிறது

பிரசவத்தின் போதும் பின்னும் தாய் ,கூடப்பிறந்தவர்கள் இருக்கும்போது தாய்க்கு மனக்கவலை மற்றும் பிரசவத்திற்கு பின் ஏற்படும் மனநிலை மாற்றங்கள் குறைவாக இருக்கிறது. மன நல மருத்துவரின் உதவி தேவைப்படுவதில்லை குழந்தையின் தேவைகளை கவனித்துக் கொள்ள ஆட்கள் இருப்பதால் படபடப்பு, கோபம் மற்றும் மனநலப் பிரச்சனைகள் தாய்க்கு ஏற்படுவதில்லை. மற்றவர்களும் விட்டுக்கொடுத்து போகிறார்கள் .கூடத் துணைக்கு நிற்கிறார்கள். எனவே தாய் வீட்டில் இருந்து பிரசவம் பார்த்துக் கொள்ளும் தாய்மார்களுக்கு ஏற்படும் மனநிலை பிரச்சினைகள் மிகக்குறைவு என்று ஒரு ஆய்வு சொல்லுகிறது.


தாய்ப்பாலூட்ட தாய்க்கு துணை தேவைப்படும்போது கூடவே செலவு வைக்காத உதவியாளர்களாக 24 மணி நேரமும் தாயின் பெற்றோர்கள் .தாய்ப்பாலூட்ட இயலவில்லை என்றால் போதுமான ஆதரவு தந்து தேற்றி மறுபடியும் நான் கொடுத்தேன். நீயும் கொடுக்கலாம் என்று தாய் சொல்லி உதவுகிறாள்.
ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும் என்ற அறிவுரையை நிறைவேற்ற தாய்வீடு மிக்க உதவி செய்யும்

முதல் ஆறு வாரங்கள் குழந்தை பிறந்த பிறகு தீட்டு என சொல்லுவார்கள் தாயும் சேயும் மட்டும் வீட்டில் இருப்பார்கள் உறவினர்கள் மற்றவர்கள் சென்று குழந்தையை பார்க்க மாட்டார்கள். இது நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றவை இல்லாத காலத்தில் நோய் தொற்று குழந்தைக்கும் தாய்க்கும் ஏற்படாமல் தடுத்தது .எனவே நாமும் குழந்தை பிறந்த உடனே மருத்துவமனைக்கோ அல்லது வீடுகளுக்கும் சென்று பார்க்காமல் இரண்டு மாதம் ஆனப் பின் பொறுத்துப் பார்ப்பது நல்லது. அதுவும் குழந்தைகள் குறைமாதத்தில் , எடை குறைவாகப் பிறந்திருந்தால் ஓரளவு எடை வந்ததுக்கப்புறம் சென்று பார்ப்பது தான் நாம் செய்யும் நல்ல உதவி .


ஒன்றரை மாதங்கள் கழித்த பின் தடுப்பு ஊசி போட ஆரம்பிப்போம் நோய் எதிர்ப்பு சக்தி ஓரளவு வந்திருக்கும். எடை ஏறி இருக்கும் .தாய்ப்பாலை மட்டும் தருதல் வேறு டப்பாக்கள் எதுவும் தராமல் இருத்தல், வெளிப்பால் இரண்டு வயதுவரை தவிர்த்தல், வீட்டு உணவையே இனிப்பு , காரம் இன்றி தருதல் கடைப் பொருட்களை தவிர்த்தல் ஆகியவை அந்தக்கால பழக்கவழக்கங்களில் முக்கியமானவையாகும். இதை வலியுறுத்தவே ஆறு மாதத்திற்கு பிறகு குழந்தைக்கு உணவு தரும் சோறு ஊட்டும் விழா இருந்திருக்கிறது. பண்டைக்கால தமிழ் இலக்கியத்தில் எத்தனையோ பாடல்கள் சோறுண்ணும் பருவத்தை விவரித்து கூறுகின்றன.


ஆறு மாதம் கழித்து வீட்டு உணவினை பிசைந்து கடைந்து தருவதுதான் மிகச்சிறந்தது .வீட்டு உணவையும் குழந்தை பழகிவிடும். பிரச்சனை எதுவும் இருக்காது .எங்கு போனாலும் என்ன நாம் உண்டாலும் அதை குழந்தைக்குப் பகிர்ந்து கொடுத்து பசியை ஆற்றிக் கொள்ள லாம் எனவே ஆறு மாதத்திற்கு பின்பு சோறூட்டும் பழக்கம் கோயிலாவது அல்லது வீட்டிலாவது முன் வைத்து செய்வது மிக நல்லது
இந்த நல்ல பழக்கங்களை விடுத்து, நாக்கில் தேன் வைப்பது, குளிக்கும் போது நாக்கில் விரல்விட்டு வழிப்பது, வாயில் மூக்கில் வாயை வைத்து ஊதி எடுக்கிறேன் என்று செய்வது .காதுக்கு எண்ணெய் விடுவது. மலம் கழிக்காமல் இருந்தால் வெற்றிலைக்காம்பு ஆசனவாயில் வைப்பது .தொப்புளிற்கு சாம்பல் சுருட்டு திருநீர் வைப்பது, புடைக்கும் தொப்புளுக்கு துணி வைத்து கட்டுவது, காசு வைத்து அமுக்குவது என தவிர்க்க வேண்டிய பழக்கங்கள் ஏராளம் அவைகளை செய்யாமல் இருப்போம் குழந்தையை பிரச்சனையிலிருந்து காப்போம்

1.http://scienceofhinduism1.blogspot.com/2016/03/blog-post_18.html

About Post Author

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

You may have missed

Discover more from childhealthtoday-குழந்தைநலம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading