Blog Stats

  • 147,326 hits
ஜனவரி 21, 2026

childhealthtoday-குழந்தைநலம்

குழந்தை நலம்;குடும்ப பலம்

மழைக்காலத்தில் குழந்தைகளைக் கவனித்துக்கொள்வது எப்படி?

 

நன்றி -vikatan.com மற்றும் மரு.இர.செல்வன்

குழந்தைகள் மழையில் நனையலாமா…. கூடாதா? மருத்துவர் விளக்கம் #GoodParenting | Can children play in rain

“குழந்தைகளை மழையில் நனைய அனுமதிக்கலாமா… கூடாதா?” என்று கேட்டதும் `நல்ல கேள்விதான். மழை பெய்தால் ஓடி வந்து நனைபவர்களும், ஓடிச் சென்று வீட்டுக்குள் ஒளிப்பவர்களும்’ என்று  இரண்டு வகையான குழந்தைகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். நான் எல்லாம் சின்ன வயதில் மழையில் நனையும் வகைதான்” என்று சிரித்தபடியே பேச்சைத் தொடங்குகிறார் குழந்தைகள் நல மருத்துவர் செல்வன்

குழந்தை “மழையில் குழந்தைகள் நனைகிறார்கள் என்றாலே சிலர் பயப்படுவதற்குக் காரணம் சளி பிடித்துக்கொள்ளும் என்பதற்காகத்தான். பொதுவாகத் தூசு, குப்பை போன்றவற்றால் சளி பிடிக்கும். சிலருக்கு அலர்ஜியினாலும் தும்மல், இருமல் வரக்கூடும். அதாவது அதிகமாக இனிப்பு சாப்பிட்டால், விளையாடினால் என அலர்ஜிக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பலர் இரண்டையும் ஒன்றாகக் குழப்பிக்கொள்கிறார்கள். மழை விஷயத்துக்கு வருவோம். வெளிநாடுகளில் மழையின்போது ஆடுவதற்கான விளையாட்டுகள், வாக்கிங் செல்வது என்பதெல்லாம் ஒரு பழக்கமாக இருக்கிறது. நமது ஊரில் குழந்தைகளின் மழையும் ஆசைக்கும் பெரும்பாலும் தடைதான் போடுகிறோம்.

மழையில் நனைவதால் இயல்பான உடல்நிலை சளிப் பிடிக்க வாய்ப்பில்லை. அதனால், குழந்தைகள் பள்ளி விட்டு வரும்போதோ, விளையாடிக்கொண்டிருக்கும்போது மழையில் நனைந்துவிட்டாலோ உடனே நீங்கள் பதறி, பயந்து மற்றவர்களையும் கலவரப்படுத்திவிடாதீர்கள்.

மழை நம்மை என்ன செய்கிறது? தலை, கை கால்கள், உடைகளை நனைக்கிறது. இதனால் சளிப் பிடிக்குமா என்றால் வாய்ப்பு மிக மிகக் குறைவு. அதேநேரம் அருகிலுள்ள தூசு, குப்பைகளில் உள்ள கிருமிகளால் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது. அலர்ஜி உள்ள குழந்தைகளுக்கும் விரைவாகத் தொற்றும். அலர்ஜி உள்ளவர்கள் அதிக நேரம் நனைந்தாலும் சளிப் பிடிக்கும். (மிக மிக மோசமான சுற்றுச்சூழல் சீர் கேடு அடைந்த இடத்தில் பெய்யும் மழையில் நனைந்தால் பாதிப்பு வரலாம்)

 

குழந்தை மழை

மழைக்காலத்தில் ப்ளூ கிருமிகள் உலவும். அதில் 100-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இவற்றில் பெரும்பான்மை பெரும் இடைஞ்சலைத் தருவதில்லை. மழைக்காலத்தில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் கிருமிகள் பெருகுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. கிருமிகளால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மும்போதும் இருமும்போதும் வெளிப்படும் கிருமிகள் அருகில் இருப்பவர்களைத் தொற்றக்கூடும். மழையில் நனையும்போது வாயால் சுவாசிக்கிறோம். மூக்கு வழியே வடிகட்டி அனுப்பப்படும் நிலை வாயால் சுவாசிக்கும்போது இருப்பதில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதற்கெல்லாம் முடிவான மருத்துவ ஆய்வுகள் இல்லை.

குழந்தை மழையில் நனைந்துவிட்டால்?

சரி, குழந்தைகள் மழையில் நனைந்துவிட்டார்கள் என்ன செய்யலாம் என்று கேட்டால், நம் முன்னோர்கள் சொன்ன விஷயங்களைக் கடைப்பிடிக்கலாம். அதாவது, ஈரமான உடைகளைக் களைந்துவிட்டு, உலர்ந்த ஆடைகளை உடுத்தச் செய்யுங்கள். தலையில் உள்ள ஈரத்தைத் துண்டால் நன்கு துவட்டி விடுங்கள்.

வெது வெதுப்பான சூப் வைத்துக்கொடுங்கள். அவ்வளவுதான். ஒருவேளை குழந்தைகள், சாக்கடை நீரோடு கலந்து மழை நீரை மிதித்து வந்திருந்தால், கை கால்களை சோப் போட்டு நன்கு கழுவச் சொல்லுங்கள். ஏனெனில், சாக்கடை நீரில் உள்ள கிருமிகள் மூலம் காய்ச்சல் உட்பட ஏதேனும் உடல்நலக் குறைபாடு ஏற்படலாம். அப்படி ஏதேனும் மாறுதல் தெரியும்பட்சத்தில் மருத்துவரிடம் அழைத்துச்செல்லத் தாமதிக்காதீர்கள்.

பிள்ளைகளை மழையில் நனைய விடுவதற்கு நாம் மட்டுமல்ல, உலகில் பலருக்கும் தயக்கம் இருக்கிறது. ஆனாலும், மழை நேரடியாக குழந்தைகளைப் பாதிப்பதில்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் மழையை ரசிக்கவும் நேசிக்கவும் அவர்களுக்குக் கற்றுத்தராமல், மழை பெய்ய ஆரம்பித்தவுடனே பயப்பட வைத்துவிடுவோம்!

 

குழந்தைகள் மழையில் நனையலாமா…. கூடாதா?

You may have missed