childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

புத்தகம் படிக்கும் பழக்கம் தேவையா?

1 min read

புத்தகம் படிக்கும் பழக்கம் குழந்தைகளுக்கு தேவையா?

அவர்கள் காணொளிகளையும், தொலைக்காட்சிகளையும், இணையதள வலைத்தளங்களையும் பார்த்துக் கற்றுக்கொள்ள முடியாதா ?எதற்காக புத்தகங்கள் தேவை ?கட்டாயம் புத்தகம் படிக்கும் பழக்கம் முக்கியமா? என்பதனைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்

புத்தகம் படிக்கும் பழக்கம் தமிழகத்தில் எப்படி?

பொருளாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சியில் சிறந்து இருக்கும் மாநிலங்களில் தமிழகம் முன் வரிசையில் உள்ளது .ஆனால் புத்தகங்கள் வாங்குவது,நல்ல புத்தகங்களைப் படிப்பது, அதன் கருத்துக்களை உள்வாங்கி புதிய விஷயங்களை சிந்திப்பது,அக வளர்ச்சிக்கு இலக்கியத்தை பயன்படுத்துவது, சிந்தனைகளை மேம்படுத்துவது என்று பார்த்தால் நம்முடைய வாசிப்பு மிக குறைவாகத்தான் இருக்கிறது.24 மணி நேரமும் திரைப்படங்களும் திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகளும் தான் தொலைக்காட்சிகளில் ஓடிக்கொண்டு இருக்கின்றன. அதிலிருந்து தப்பித்து கைபேசியை எடுத்தாலோ அதிலும் அவர்களுக்கு தான் முதலிடம் . அதையும் மீறிப் போய் ,பத்திரிக்கைகள், வார இதழ்களைப் புரட்டினாலும் அதிலும் படித்து மறந்துபோகும் சுலபமான விஷயங்கள்தான்!!! நல்ல கருத்துக்கள், விவாதங்கள், ஆரோக்கியமான சிந்தனைகள் ,வளர்ச்சிக்கான வழிப்பாதைகளை முன்னெடுத்துச் செல்லும் வாசிப்பு ,அதற்குரிய பங்களிப்பு, நமது தமிழகத்தில் மிக குறைவுதான்.

Photo by Pixabay on Pexels.com

குழந்தைகள் ஏன் அதிகப் புத்தகங்களைப்படிப்பதில்லை?

நிறைய வீடுகளில் குழந்தைகள் பாடப்புத்தகத்தை தவிர்த்து வேறு ஏதும் படிப்பதில்லை. மற்ற புத்தகங்களைத் தொடுவதில்லை. அதற்குப் பதிலாக கைபேசியையும் தொலைக் காட்சியையும் கண்டு பொழுதைப் போக்குகிறார்கள் என்பது பெற்றோர்கள் மனக்குறை. அவர்கள் வீட்டிலும் பெரியவர்களும் மற்றவர்களும் புத்தகங்களை அதிகமாக பயன்படுத்தாமல் இருப்பது தான் இதற்கு முக்கியமான காரணம். எனவே இளைய தலைமுறையைக் குறை சொல்வதை விடுத்து நாம் நல்ல புத்தகங்களை படிக்கும் பழக்கத்தினை தொடங்க வேண்டும். நம்மைப் பார்த்து நம் குழந்தைகளும் நம் குடும்ப உறுப்பினர்களும் கற்றுக் கொள்வார்கள்.

பள்ளிக்கூடங்கள் உதவுமா?
பள்ளிக்கூடங்களில்நிலைமை இன்னும் மோசம் .புத்தகங்களில் அச்சிடப்பட்டுள்ள வார்த்தைகளை எழுத்து மாறாமல் அப்படியே பொதுத்தேர்வு விடைத்தாளில் க க்க வேண்டும்.முதல் இடம், மேற்படிப்பு வாய்ப்பு கள் எல்லா ம் அதை பொறுத் து தான்.பாடத்தை தவிர்த்து மற்ற விஷயங்களையும் தெரிந்து கொண்டு அவைகளையும் சேர்த்து இணைத்து எழுதக்கூடிய மாணவர்களுக்கு வரவேற்பு இருக்கிறதா? என்றால் இல்லை !!என்பது தான் உண்மை.மற்ற புத்தகங்களைப் படித்து நேரத்தை வீணடிக்கிறான் என்று பெற்றோர்களும் தேவைக்கு மேல் படித்து சரியாக எழுதாமல் போனால் என்ன செய்வது? என்று ஆசிரியர்களும் கவலைப்படும் காலகட்டம்தான் இன்று.நூலக நேரம் சரியாகப் பயன் படுத்தப்படுவதில்லை..

Photo by Andrea Piacquadio on Pexels.com

பரந்த வாசிப்பு தேவையா?

இன்றைய சூழல் ,சமுதாயத்தினுடைய பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள், எதிர்காலத்தில் வரக்கூடிய சவால்கள், அதனை எவ்வாறு மேற்கொள்வது ?வாழ்க்கையில் சிறப்பாக நடப்பது எப்படி ?அதற்கு கைக்கொள்ள வேண்டிய உத்திகள் என்ன ?என்பதைப்பற்றி பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு நமக்குச் சொல்லித் தருவது புத்தகங்கள்தான் .இந்தத் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள, ஆழ்ந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளும் இதழ்களும் ஆய்வுகளும் இலக்கியங்களும் நம் இளையோரை சென்றடைவது மிக முக்கியம்.கதைப் புத்தகங்கள் படிப்பது என்பது மிகப்பெரிய குற்றமாக அனைவராலும் கருதப்படும் காலம் இதுதான். எந்த புத்தகங்களும் ஏதாவது ஒரு அறநெறியை போதிப்பதாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு சட்டம்.

வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள, மற்றவர்கள் பார்வையிலிருந்து அணுக ,கதைகளும் காவியங்களும் உதவுகின்றன .வெறும் அறநெறியை போதிப்பதை மட்டும் அவை செய்வதில்லை இதைப்படி !இதைப்படிக்காதே!!என்று எந்நேரமும் சொல்லிக் கொண்டிருந்தால் இளைஞர்கள் புத்தகங்களை படிப்பதில் இருந்து விலகிச் சென்று விடுவார்கள்.குறிப்பிட்ட பாடத்தில் தேர்ச்சி பெற்று தகுதி நிலையை அடைவது நல்ல கல்வியினை வழங்கும். ஆனால் நல்ல வாழ்க்கையை அறிந்து கொள்ள இலக்கியங்களும் ,கவிதைகளும் அவசியம். அதை நமக்கு அளிக்கக்கூடிய இதழ்களும் புத்தகங்களும் மிக முக்கியம் .ஒவ்வொரு இளைஞனுடைய கருத்துக்களும் வெவ்வேறாக இருக்கலாம் அவர்களுடைய கவனம் பல்வேறு துறைகளில் இருக்கலாம் .பல்வேறு துறைகளில் உள்ள சிறப்புகளை எல்லாம் தாய் மொழியில் எடுத்துச் சொல்லும் வண்ணம் புத்தகங்கள் வெளிவர வேண்டும் அந்த மாதிரி புத்தகங்களை படிக்க வைக்க குழந்தையை பழக்குவதுமிக முக்கியம்

Photo by Koshevaya_k on Pexels.com

மாறுபட்ட படிப்பு அனுபவங்களுக்கு பழக்குவது எப்படி?
குழந்தையின் சிறிய வயதிலிருந்தே கதைகளைச் சொல்வது நல்லது.படக்கதைகளை காண்பித்து கதை சொல்லுவது, குழந்தையை கதையை சொல்ல பழக்குவது ,வீட்டில் நடக்கும் சம்பவங்களை கோர்த்து கதைகளைச் சொல்வது, நடந்த விஷயங்களை குழந்தை கற்பனையாகச் சொல்லும்போது அதைப் பாராட்டுவது, குழந்தையையும் நடிக்க விடுவது என படிப்போடு முடிந்த நிகழ்வுகளை ஊக்குவிக்கலாம். குழந்தை தானே எழுத்துக்களை படிக்கஆரம்பி க்கும் போது சொல்லித் தருவது, வார்த்தைகளுக்கான விளக்கங்களை தருவது, கேட்கும் கேள்விகளுக்கு பதில் தருவது, இவைகளின் மூலம் அந்தக் கதைகளில் மனம் ஒன்றி இருக்க செய்யலாம் ,நாட்கள் செல்லச் செல்ல தானே படிக்க ஆரம்பிக்கும் போது குழந்தை மீண்டும் தனக்கென ஒரு உலகத்தை உற்பத்தி செய்து கொண்டு அவ்வுலகில் உலாவ ஆரம்பித்துவிடும் .அந்த கற்பனை உலகத்தில் உலாவி வரும் குழந்தைகளுடைய கற்பனைகளும், கனவுகளும் ,திட்டங்களும், வளர்ச்சியும் சி ற ப் பாக இருக்கும் .அவர்கள் மற்ற குழந்தைகள் இருந்து வேறுபட்டு இரு ப்பார்கள்

தூக்கம் வர புத்தகங்கள் உதவுமா?

எனவே புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும் .தூங்குவதற்கு முன் கைபேசியினை எடுத்துச் செல்லக்கூ டாது. புத்தகத்தை எடுத்துச் சென்று தூங்கும் வரை கதைசொல்லி தூங்க வைப்பது நல்ல பழக்கத்தை அ றிமுகப்படுத்தும். நீல வெளிச்சங்களை வெளியிடும் தொலைக்காட்சி,கைப்பேசிகளை விட புத்தகங்களைப் படிப்பது தூக்கம் வருவதற்கு உதவியாக இருக்கும் என்பது அறிவியல் உண்மை. நல்ல உறக்கம் பெற புத்தகங்களை தூங்குவதற்கு முன் படிப்பது மிகவும் முக்கியம் .குழந்தைகளை பழகுவது என்பதினை பெற்றோர்களுடைய கடமைகளில் ஒன்றாக நாம் எடுத்துக் கொள்வது மிக நல்லது.

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading