குழந்தையினுடைய உடல் தோலில் சிகப்பா ஏதாவது படர்ந்து இருந்தால் போதும் !!பார்க்கிறவங்க அத்தனைபேரும் ஒரே குரலில் சொல்ற வார்த்தை “இது அம்மையா இருக்கும்?”
அடுத்து இதுக்கு என்ன செய்யணும் ?அப்படிங்கறதுக்கு ஒரு பெரிய பட்டியல் வரும் ஆத்தா வந்ததால “குழந்தைக்கு சாப்பாட்டில் உப்பு புளிப்பு எதுவும் சேர்க்கக்கூடாது !வேப்பிலை அரைத்து மேலே போடுங்க !அஞ்சு நாள் தினம் இதே மாதிரி செய்யணும் !வீட்டுக்குள்ள பெருக்கிறது கூட்றது அப்படி எதுவும் கூடாது !
அடுத்த வருஷமும் மாரியாத்தா கோயிலுக்கு பொங்கல் வைக்க வேண்டும்! வீட்டுக்கு முன்னாடி வேப்பிலை சொருகி வைங்க !”அப்படின்னு நிறைய ஆலோசனைகள் இருக்கும்
அப்படி எல்லாச் சிவப்பும் அம்மையா?அம்மை என்றால் என்ன ?அதுக்கு மருந்து கிடையாதா ?என்னென்ன வகை தோல் நோய்களால் சிகப்பு உடம்பில் ஏற்படும்? அதனைக் கட்டுப்படுத்த என்ன செய்வது எனப் பார்ப்போம்

பெரியம்மை நோயை உலகத்திலிருந்து ஒழித்துக்கட்டி சமாதி எழுப்பி ஆகிவிட்டது (முள்ளும் மலரும் படம் வந்த காலத்தில் அது நடந்தது !!அதில் மகேந்திரன் ஒரு வசனம் வைத்திருப்பார் பெரியம்மை வந்தது என்று பஞ்சாயத்து போர்டல சொல்லி ஆயிரம் ரூபாய் வாங்கிக்க!! என்று)
இப்போது மக்களுக்கு பிரச்சனை உண்டு பண்ணக்கூடிய அம்மைகளில் முதலாவது தட்டம்மை .வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியா மூலமாக அதிக பாதிப்பினை உண்டுபண்ணும் .

அதற்கடுத்த நிலையில் ஜெர்மனி மீசெல்ஸ் என்று சொல்லக்கூடிய ரூபெல்லா. கர்ப்ப காலத்தில் தாய்க்கு இந்த அம்மை தாக்கினால் பிறக்கும் குழந்தை இருதய நோய் காது கேளாமை மூளை வளர்ச்சி குறைவு என பல பிரச்சனைகளுடன் பிறக்கும் இதை தவிர்ப்பதற்காக தற்போது ரூபெல்லா தடுப்பூசி எல்லா குழந்தைகளுக்கும் இலவசமாக போடப்படுகிறது.கோயில்களில் திருமணம் செய்யும்போது தடுப்பூசி சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும்

.பிறகு சிக்கன் பாக்ஸ் என்று சொல்லக்கூடிய சின்னம்மை,.அசலாக முதலில் எல்லாரையும் பாதித்த முத்து முத்தாக வந்த அம்மையின் கடைசி தம்பி. அம்மை என்பது வைரஸ் என்று தெரியாத போது தெய்வ கோபத்தினால் வருவதாக மக்கள் எண்ணினர் அதனால் ஸ்மால் பாக்ஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது பெரிய அம்மை பெரிய மாரியம்மன் மற்றும் சிக்கன் பாக்ஸ் குறைவான பாதிப்பை ஏற்படுத்தியதால் சின்ன மாரியம்மன் என்றும் அழைத்தார்கள். இதற்குப் பிறகு விளையாட்டு மாரியம்மன் என்று அழைக்கப்படும் மீசில்ஸ், மற்றும் சில ஊர்களில் பிளேக் ஏற்படுத்திய பிளேக் மாரியம்மன் என ஒவ்வொரு நோய்களுக்கும் தனித்தனி மாரியம்மன் கோயில்களை அமைத்தனர். அறிவியல் முன்னேற முன்னேற தடுப்பூசிகளின் மூலம் நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டன தீர்க்க முடியாத என்று நினைத்த நோய்களுக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதை மக்கள் புரிந்து கொண்டதால்தான் டெங்கு மாரியம்மன் சிக்கன்குனியா மாரியம்மன் பறவைக்காய்ச்சல் மாரியம்மன் பன்றிக்காய்ச்சல் மாரியம்மன் ஏன் கொரானா மாரியம்மன் என்று கூட இனிமேலும் கோயில்கள் வராது

அக்கியை பற்றி இன்னொரு பதிவில் விவரமாக எழுதி விட்டோம்.
இதைத்தவிர மற்ற தோல் சிகப்புகளுக்கு மக்கள் தன் விருப்பத்திற்கு ஏற்ப எக்கச்சக்கமான பெயரை வைத்துவிட்டார்கள் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்” “கொத்தமல்லி அம்மை, கஞ்சி மாரியாயி,என பலவற்றை

பூஞ்சைக்காளானால் வரும் சில நோய்களும் தோல் சிகப்பினை உருவாகலாம்
வைரஸ் நோய்த் தொற்றுகளைத் தவிர சில பாக்டீரியா கொப்புளங்கள் சிறு கட்டியாக மாறும் வாய்ப்பு உண்டு

சில மருந்துகளுக்கு ஒவ்வாமை ஏற்படும் போது தோலில் சிவப்பு ஏற்படுவதுண்டு
பூச்சிக்கடி,எரிப்பூச்சி, சில தாவரங்களின் பால் மூலம் அலர்ஜி,சொத்தைப்பல் ,சிறுநீரக நோய்த்தொற்று ரத்தத்தில் நோய் தொற்று ஆகியவையும் தோலில் சிகப்பு நிறத்தினை ஏற்படுத்தலாம்
நமக்கு நன்றாகத் தெரிந்த டெங்கு, உண்ணிகள் மூலம் பரவும் டைபஸ் காய்ச்சல் ஈரலில் வரக்கூடிய சில வகையான நோய் தொற்றுக்கள் என ஏகப்பட்ட காரணங்களினால் தோலில் சிகப்பு தடிப்புகள் ஏற்படலாம்
என்ன காரணத்தினால் தோலில்ல் சிகப்பு ஏற்பட்டது ?என்பதனை முதலில் கண்டுபிடிக்க வேண்டும் கண்டுபிடித்த பின் நோயின் தன்மைக்கு ஏற்ப மருந்துகளை தரலாம்
அரிப்பினைக் குறைக்க மேல்பூச்சு மருந்து தருவார்கள் மேலும் ஆண்டிஹிஸ்டமின் மருந்துகள் மற்றும் சிறப்பு மருந்துகள் பொதுவாக உபயோகப்படுத்தப்படும் அதனுடன் குறிப்பிட்ட நோய்க்கு தேவையான மருந்துகள் தரப்படும்
இப்போது புரிகிறதா உங்களுக்கு ?எல்லா சிவப்பும் அம்மை இல்லை ?என்று
