10 சதவீத குழந்தைகளுக்குப் பார்வைக் குறைபாடு இருக்கிறது., கிட்டப்பார்வை என்பது புத்தகத்தை பக்கத்தில்வைத்துப் படிக்கச் சொன்னால் சுலபமாகப் படிக்க முடியும். தூரத்தில் உள்ள பொருளைப்பார்க்கச் சொன்னால் பார்வை மங்கலாகவும் தெளிவில்லாத தாகவும் உள்ளது என்பார்கள். கிட்டப்பார்வை இருந்தால் கண்ணாடி அணிய வேண்டும் . பதினெட்டு வயதுக்குப் பிறகு வேண்டுமானால் அறுவைச் சிகிச்சைச் செய்து கொள்ளலாம்.
கிட்டப்பார்வை உள்ளவர்களுக்கு உள்ள பிரச்சினை பார்க்கும் பொருளில் இருந்து வரும் பிம்பம் விழித்திரைக்கு முன்னதாகவே விழுந்துவிடும். இதனால் பார்வை மங்கலாகவும் தெளிவில்லாத தாகவும் இருக்கும். இதற்கு நிறையக் காரணங்கள் உள்ளன. இதற்கான காரணங்கள் கண் நீளவாக்கில் பெரிதாவது ,விழித்திரை அல்லது கருவிழியில் ஏற்படும் மாற்றம் ஆகியவையாகும்., குடும்பத்தில் அப்பா, அம்மா யாருக்காவது கிட்டப்பார்வை இருந்தால் பிள்ளைகளுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். கோடை விடுமுறையில் நிறையக் கண் மருத்துவமனைகளில் கண் பயிற்சி சொல்லிக் கொடுப்பார்கள்.எதிர்பார்த்தபடி இது நல்ல பலனைத்தரவில்லை. அட்ரோபின் சொட்டு மருந்து ஒரளவு பலனளிக்கிறது.கிட்டப்பார்வையால் பாதித்து கண்ணாடி போட்டிருக்கும் குழந்தையின் பவர் கூடுதல் ஆகாமல் தடுப்பதற்கு சிறப்புக் கண்ணாடிகள் ஒட்டு வில்லைகள் வந்துள்ளன. இத்துடன் ஒரு புதுவழியைக் கண்டுபிடித்துள்ளார்கள்.அது வேறு ஒன்றுமில்லை . குழந்தையை அதிக நேரம் வெயிலில் விளையாட விட வேண்டும். இப்படி விளையாடச் செய்தால் அந்தக் குழந்தையின் பார்வைக் குறைபாடு அதிகமாகமல் பார்த்துக்கொள்ளலாம். வகுப்பறையில் சில மாற்றங்கள் செய்யலாம். குழந்தைகள் உட்கார்ந்து இருக்கும் இடம்,பேனா பென்சில் சரியாகப் பிடிப்பது, அறையின் வெளிச்சம், கரும்பலகையில் ஆசிரியர் சரியாக தெளிவாக எழுதுவது ஆகியவைகளைக் கவனிக்கவேண்டும். கண்ணுக்குக் கண்ணாடி போட்ட பிறகு அதைத் தினம் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்தாமல் தவிர்த்தால் கண் பவர் கூடுதலாகிக் கொண்டே செல்லும். புதிய வகைக் கண்ணாடியைத் தொடர்ந்து பயன்படுத்தினால் கண் பவர் கூடாமல் பார்த்துக்கொள்ள முடியும். வைட்டமின் ஏ சத்துள்ள காய்கறிகள் எடுத்துக் கொள்வது. குழந்தையின் திரை நேரத்தை1- 2 மணியாகக் குறைப்பது ஆகியவை உதவும். வீட்டில் டிவி, போன்,கணினி போன்றவைகளை நீண்ட நேரம் பயன்படுத்தும் போது 20 நிமிடத்திற்கு ஒரு முறை 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை 20 நொடிகள் பார்க்க வேண்டும். இதன் மூலத் கண்ணுக்குத் தேவையான ஓய்வு கிடைக்கும்.மேற்கூறிய விஷயங்களைக் கடைப்பிடித்து கிட்டப்பார்வையில் இருந்து நம் குழந்தையைக் காப்போம்.
