| ‘’நோய் வந்தபின் குணப்படுத்துவதைக் காட்டிலும் நோய் வராமல் தடுப்பதே சிறந்த முறையாகும்.’’ |
மஞ்சள்காமாலை வகை ஏ தடுப்பூசி:
ஈரல் தொற்றினை உண்டாக்கும் மஞ்சள்காமாலை வகை ஏ வைரசு கிருமியினால் உருவாகும் தொற்றுநோயினை தடுக்கும். இந்த நோயானது பாதுகாப்பற்ற தண்ணீர் மற்றும் உணவுப்பண்டங்கள் மூலமாக பரவுகிறது.மஞ்சள்காமாலை அறிகுறி உண்டாவதற்கு முக்கிய காரணமாக இந்த வகை ஏ நோய் இருப்பதுடன் வாந்தி, வயிற்றுவலி, பசியின்மை போன்றஅறிகுறிகளும் இருக்கும். 4 வாரம் வரை நீடிக்கும் தன்மை உடையது இந்நோயாகும்.

மஞ்சள்காமாலை வகை பி தடுப்பூசி:
ஈரல் தொற்றினை உண்டாக்கும் மஞ்சள்காமாலை வகை பி வைரசு கிருமியினால் உருவாகும். இந்த நோயானது வாழ்நாள் முழுதும் தொடரும் பாதிப்பினை உண்டாக்கும். ஈரல் அழுகல், ஈரல் புற்றுநோய், முற்றிலும் ஈரல் கெடல், உயிரிழப்பு முதலியவற்றையும் உண்டாக்கும். இந்த பி வகை வைரசுபாதுகாப்பற்ற ஊசி, இரத்தம், உடல் திரவங்கள் அடுத்தவருடன் தொடர்புபடுத்தப்படும்போது பரவக்கூடியதாகும்.
நுரையீரல் தொற்று (நிமோகாக்கல்) தடுப்பூசி:
நிமோனியா என்பதுநுரையீரலை பாதிக்கும் ஒருவித தொற்றுநோயாகும்.இதனால் நுரையீரல் வீக்கம் ஏற்படும்.5-வயதுக்குட்பட்ட குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் ஒரு உயிர்க்கொல்லி நோயாகும். இந்த நோய் உண்டாவதற்கு பலவகையான கிருமிகள் காரணமாக இருந்தாலும் மிக முக்கியமானதும் மிக பரவலாக பாதிப்பு உண்டாக்கும் கிருமி எசு.நிமோனியே என்னும் பாக்டீரியா ஆகும். இந்நோயின் அறிகுறிகள் – தீவிரமான உயர்காய்ச்சல், களைப்பு, உடல் சோர்வு, தளர்வு, குளிர்ந்து வியர்த்தல், மூச்சுத்திணறல், இருமல், மார்வலி உள்ளிட்டவையாகும். இந்த தடுப்பூசி போட்டுக்கொண்டால்,நிமோகாக்கல் நிமோனியா என்ற நுரையீரல் தொற்று தடுக்கப்படும்.
குடற்காய்ச்சல் தடுப்பூசி;
குடற்காய்ச்சல் என்னும் டைபாய்டு காய்ச்சல் வராமல் தடுப்பது இத்தடுப்பூசியாகும். இந்த நோய் ஆரம்ப நிலையிலேயே கண்டு அறியவில்லை எனில் உயிர்க்கொல்லி நோயாகிவிடும். சால்மொனெல்லா என்னும் பாக்டீரியா கிருமியால், குறிப்பாக பயணத்தின் போது பாதுகாப்பற்ற தண்ணீர் மற்றும் ஈமொய்த்த உணவுகளால் பரவக்கூடியது. மிகத்தீவிரமான உயர்காய்ச்சல், வயிற்றுவலி, தலைவலி, பசியின்மை இந்நோயின் அறிகுறிகள்.
சின்னம்மை தடுப்பூசி;
இந்த தடுப்பூசி போடுவதன் மூலம் சின்னம்மை வராமல் பாதுகாத்துக்கொள்ளலாம். சிறிய தோல் கொப்புளமாக புறப்படும் இந்த அம்மையானது, உடல் முழுதும் பரவலாமென்றாலும், குறிப்பாக முகம், தலை, நெஞ்சு, வயிறு, முதுகுபகுதிகளில் தெடன்படும். இது நிமோனியா மற்றும் மூளைக்காய்ச்சலாகவும் பரவ வாய்ப்புகள் குறைவென்றாலும் உயிருக்கு ஆபத்தைஉண்டாக்கும். பெரும்பாலும் இந்த நோய் நம்மில் முக்கால்வாசி பேருக்கு வாழ்நாளில் ஒரு முறையாவது வந்து போகும்.

மூன்றம்மை தடுப்பூசி;
இந்த தடுப்பூசி மூன்று விதமான அம்மை நோய்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கிறது-மணல்வாரி அம்மை, தாளம்மை (எ) பொன்னுக்குவீங்கி, நெறிப்பூ அம்மை (எ) ருபெல்லா. மணல்வாரி அம்மை என்பது மிகவும் வேகமாக பரவக்கூடிய தொற்றுநோயாகும். இது நோயாளியின் தும்மல், இருமல் மூலம் காற்றுவழியாகவும், மூக்கு, தொண்டை சளி நேரடியாக தொடல் மூலமாகவும் பரவுகிறது. தீவிரமான காய்ச்சலுடன், மணல் விசிறியதைப்போன்ற அம்மையானது முதலில் முகம், மேல்கழுத்து, காதுமடல் பின்புறமாகவும் ஆரம்பித்து பின் நெஞ்சு, முதுகு, கைகள், வயிறு, கால்கள் என தலையிலிருந்து கால்களுக்கு இறங்கும். தாளம்மையானது காய்ச்சல், பசியின்மைதொடர்ந்து இருபுறமும் தாடைப்பகுதியில் வீக்கம் தென்படும். ஆண் குழந்தைகளுக்கு விரைவீக்க பாதிப்பு வர வாய்ப்புண்டு. ருபெல்லா அம்மை கர்ப்பவதிகளை முதல் மூன்று மாதங்களில் தொற்று ஏற்பட்டால், பிறக்கின்ற குழந்தைக்கு கண்புரை, காதுகேளாமை, இருதய கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி;
கருப்பைவாய் புற்றுநோய்த்தடுப்பூசியானது இந்த புற்றுநோயை உண்டாக்கும் முக்கிய வைரசு கிருமியிடமிருந்து பாதுகாப்பளிக்கிறது. பெண்களை பாதிக்கும் புற்றுநோய்களில் முதலிடம் வகிப்பது இந்த வகை புற்றுநோயாகும். ஒவ்வொரு ஆண்டும் 72000 மகளிர் இந்த நோயினால் இறக்கின்றனர். முறையான தடுப்பூசியும், தொடர் பரிசோதனை மூலமாகவும் இய்த புற்றுநோய் உண்டாவதை தவிர்க்கலாம்.
பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி;
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் தவறாமல் வந்து பாதிப்பை உண்டாக்கும் வைரசு காய்ச்சல்களில் மிக முக்கியமானதும், விரைந்து பரவுவதும் இந்த பன்றிக்காய்ச்சலாகும். மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலை பாதிக்கும் ஒரு ஆபத்தான தொற்று நோயாகும். மருத்துவமனையில் சேரும் அளவு தீவிரமானதும், சில சமயங்களில் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதால், இந்த நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும், தீவிரத்தன்மையிலிருந்து தடுத்துக்கொள்ளவும் தடுப்பூசியை ஆண்டுதோறும் போட்டுக்கொள்வது நல்லதாகும்.
முத்தடுப்பு ஊசி(சிறு ஊக்குவிப்பு);
10 முதல் 18 வயதுள்ள குழந்தைகளுக்கு இசிவு நோய், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல் ஆகிய மூன்று நோய்களுக்கு எதிராக உடம்பில் தடுப்புசக்தி குறையும்போது இந்த தடுப்பூசி ஊக்கப்படுத்துகிறது. இது அடிப்படை முத்தடுப்பூசி ஏற்கெனவே போடப்பட்டிருக்கும்போது உதவி செய்யும்.
காசநோய்த்தடுப்பூசி;
குழந்தைகளுக்கு பிறந்தவுடன் போடப்படும் இந்த தடுப்பூசி காசநோயின் தீவிரமான பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கிறது. ஊசி போட்டபின் 3-4வாரங்கள் கழித்து, அவ்விடத்தில் வீக்கம் புறப்பட்டு பெரிதாகி உடைந்து புண்ணாகும். புண் ஆறி மீண்டும் மீண்டும் புண்ணாகி ஆறலாம்.இது 2-3மாதங்கள் வரை தொடரலாம்.
இளம்பிள்ளைவாத தடுப்பூசி/சொட்டு மருந்து;
போலியோ என்னும் இளம்பிள்ளைவாதம் வராமல் பாதுகாக்கிறது. சொட்டு மருந்து மூன்று தடவையும், தடுப்பூசி மூன்று தடவையும் போடப்படுகிறது. இந்தியவிலிருந்து இந்த நோய் ஒழிக்கப்பட்டிருந்தாலும், ஒரு சில நாடுகளில் இந்த நோய்தாக்கம் இருந்து வருவதாலும், முழுமையான பாதுகாப்பு தேவைப்படுவதாலும் இந்த தடுப்பூசி போடப்பட வேண்டும்.
முத்தடுப்பு ஊசி (தொடக்க நிலை);
பிறந்து6 வாரம் முதல் 14 வாரம் உள்ள குழந்தைகளுக்கு டெட்டனசு என்னும் இசிவு நோய், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல் ஆகிய மூன்று உயிர்க்கொல்லி நோய்களுக்கு எதிராக ஒரு மாத இடைவெளியில் மூன்று முறை போடப்படும் தடுப்பூசியாகும்.
மூளைக்காய்ச்சல் தடுப்பூசி;
மூளைக்காய்ச்சல் உண்டாக்கும் பல நோய்க்கிருமிகளுள் சிலவற்றுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
பாக்டீரியா கிருமிகளுள் ஈமோபிளசு வகை பி என்ற மூளைக்காய்ச்சல் மற்றும் உட்செவியில் சீழ்பிடித்தல் ஆகிய நோய்களை தடுக்கும் தடுப்பூசி முத்தடுப்பூசியுடன் சேர்த்து ஒன்றாக, பிறந்து6 வாரம் முதல் 14 வாரம் உள்ள குழந்தைகளுக்கு போடப்படுகிறது.
மற்றொரு பாக்டீரியா கிருமியால் உண்டாகும் மெனிங்கோகாக்கல் மூளைக்காய்ச்சல் வராமல் தடுக்கவும் சிறப்பு தடுப்பூசி போடப்படுகிறது.
வைரசு கிருமிகளுள் சப்பானிய மூளைக்காய்ச்சல் பி தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் பருவ காலங்களில் குழந்தைகளை தாக்கும் உயிர்க்கொல்லி நோயாகும். இந்த வகை மூளைக்காய்ச்சல் வராமல் தடுக்கும் தடுப்பூசி உள்ளது.
வயிற்றுப்போக்கு தடுப்பு மருந்து:
வயிற்றுப்போக்கு உண்டாக்கும் பல நோய்க்கிருமிகளுள், ரோட்டாவைரசு என்னும் கிருமியினால் ஏற்படும் பாதிப்பு நிறைய குழந்தைகளை தாக்குவதாலும், தீவிரமானதாகவும்இருப்பதால், அதற்கெதிராக போடப்படும் வாய்வழி தடுப்பு மருந்து போடுவது நன்மையானதாகும்.

தடுப்பூசிகளினால் ஏற்படும் பக்க விளைவுகள்;
- தடுப்பூசிகளினால் உண்டாகும் பின் விளைவுகள் லேசானதாகவே இருக்கும்.
- லேசான காய்ச்சல், உடல்வலி,சோர்வு ஏற்படலாம்.
- பாராசிட்டமால் மருந்து கொடுத்தால் இவை சரியாகிவிடும்.
- காசநோய்த்தடுப்பூசியினால் நெறிக்கட்டி, சீழ்கட்டி ஏற்படலாம்.
- முத்தடுப்பூசியினால் சில குழந்தைகளுக்கு வலி, வீக்கம், கட்டி ஏற்படலாம்;வீறிட்டு அழலாம்.
- எந்த பக்க விளைவுகள் வந்தாலும், குழந்தை மருத்துவரை உடன்அணுகவும்.
- தடுப்பூசி போட்டபின்னர், குறைந்தது 20 நிமிடங்கள் மருத்துவகத்தில் இருந்து குழந்தை நலமாக இருப்பதை உறுதிசெய்த பின் செல்லவும்.
- குழந்தைக்கு ஊசி/மருந்து ஒவ்வாமை அல்லது வலிப்பு நோய் இருப்பின்,குழந்தை மருத்துவரிடம் முன்கூட்டியே தெரிவிக்கவும்.
