Site icon childhealthtoday-childhealth wiki

பயமின்றி தேர்வு எழுதுவது எப்படி?

Photo by Andrea Piacquadio on Pexels.com

EXAM 2

பரிட்சை என்றாலே அனைவருக்கும் பயம் தான் .சிறு வயது தொடங்கி கல்லூரியிலும் அதற்குப் பின்னரும் கூட பயம் தொடர்வதுஒரு இயல்பான விஷயம் தான். நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். தேர்வினை நன்கு எழுத வேண்டும் எனில் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் .மனநலத்திற்கும் ஒரு இடம் தர வேண்டும் .தேர்வு என்றாலே ஒரு அளவுக்கு மன அழுத்தம் ஏற்படும் இந்த மன அழுத்தம் ஓரளவுக்கு ஆக்கபூர்வமானது என்று கூடச் சொல்லலாம் ஏனெனில் நாம் படித்த பாடத்தினை கவனத்தோடு திருப்பி எழுதவும், மூளையில் பதிந்துள்ள செய்திகளைத் திரட்டி தாளில் கொண்டு வரவும் இந்த அழுத்தம் உதவுகிறது ஆனால் அதிக அளவு மன அழுத்தம் இருந்தால் சரியாக தேர்வு எழுத முடியாது. நாம் பெற நினைத்திருக்கும் மதிப்பெண்கள் நமக்கு கிடைக்காது.

இந்த அதிக மன அழுத்தம் நம் குழந்தைகளைப் பாதிக்காமலிருக்க நாமும் குடும்பத்தினரும் உதவ வேண்டும். அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்காக நம் குழந்தைகளுக்கு அழுத்தம் தந்து தூக்கம் குறைத்து ,நேரத்தில் எழுந்து படிக்க கடைசி நேரத்தில் கட்டாயப்படுத்துவது உதவாது.கடைசி நிமிடப் படிப்பு பெரிய மதிப்பெண்களைக் கொடுக்காது. எனவே அதுவரை என்ன படித்து இருக்கிறார்களோ அதை திருப்பி ஒரு முறை ஞாபகப்படுத்திக்கப் பார்க்கச் சொல்வது நல்லது .வழக்கமாக சரியாக செய்யாத பாடங்களில் பரிட்சை வரும்போது நமது  குழந்தையின் முந்தைய வெற்றிகள், அவனுடைய நற்குணங்கள் என நேர்மறையான செய்திகளைச் சொல்லி ஊக்குவிப்பது அவனுக்கு உற்சாகத்தை ஊட்டும். என்ன படித்து என்ன கிழிக்க போறே? என்று கிண்டல் செய்ததால் உள்ளதும் போய்விடும் .வினாத்தாள் கசிஞ்சிருச்சு !! மழை பெய்வதால் அநேகமா தேர்வு  இருக்காது !இதுல தான் அதிகமாக கேள்வி கேப்பாங்க! இந்த பாடத்தில்வராது! என்ற செய்திகள் கட்செவி அஞ்சல். குறுஞ்செய்தி என பல வெளிவரும். அதனைக் கவனத்தில் கொள்ள வேண்டாம்

 

அவ்வப்போது அன்றன்றைக்கு நடக்கும் பாடங்களை அன்றைக்கே படிக்க சொல்லவேண்டும் .தினந்தோறும் குறிப்பிட்ட நேரத்தை படிப்பதற்கும் மீண்டும் எழுதிப் பார்ப்பதற்கும் ஒழுங்குபடுத்த உதவ வேண்டும் .மாதிரித் தேர்வுகளை அதிகம் எழுதிப் பார்ப்பது அச்சத்தை குறைக்கும் .ஒவ்வொரு மாதிரி தேர்விற்கு முன்பும் நேரத்தையும் காலத்தையும் சரியாகக் கணக்கிட்டு எழுத வேண்டிய கேள்விகளை குறித்த நேரத்திற்குள் எழுத பழக்க வேண்டும் ..எப்போது படித்தால் மனதில் பசுமரத்தாணி போல் பதியுமோ, அந்த நேரத்தினை( பகலாக இருந்தாலும் இரவாக இருந்தாலும் )படிக்க உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். மாதிரித் தேர்வுகளை ,முழு பரிட்சைத் தேர்வுகள் போல அடிக்கடி எழுதிப் பழகுவது நல்லது

உங்கள் நண்பன் காலை 4 மணிக்கு எழுந்து படிப்பவனாக இருக்கலாம். அது உங்களுக்கு  பழக்கம் இல்லை எனில் செய்ய வேண்டாம். எப்போது உங்கள்கவனம் அதிகமாக உள்ளதோ அப்போது படிக்கவும். நன்கு வழக்கம் போல் உணவு உண்டு உறங்க வேண்டும். போதுமான தூக்கம் இல்லையெனில் படித்ததைக் கூடச் சரியாக எழுதாமல் வந்து விடுவார்கள்.மணிக்கு ஒரு முறை 5 நிமிடங்கள் படிப்பதை நிறுத்தி ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்..இளைப்பாறலாம். சிறு நடை நடக்கலாம் .காலையிலும் மாலையிலும் சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். மூச்சுப்பயிற்சி முதலியவைகளை சில நிமிடங்களாவது செய்வது நல்லது படிக்கும்போது இசையைக் கேட்டு படிக்கும் பழக்கம் இருப்பின் கேட்கலாம் ஒருமுகப்படுத்தி படிப்பது, தனக்குத் தானே பாராட்டிக் கொள்வது !என்ன சாதிக்கப் போகிறோம்! என்பதனை மனதுக்குள் கற்பனை செய்து பார்ப்பது போன்றவை எல்லாம் தொடர்ந்து படிப்பதற்கு ஊக்கத்தை தரும்.

தேர்வு அறையில் நுழைந்த உடன் அமைதியாக சில நிமிடங்கள் இருக்க வேண்டும் .உங்களுடைய தேர்வு அனுமதிச் சீட்டினை சரிபார்த்தபின் உங்கள் பெயரை குறிப்பிட்டுஉள்ள இடத்தில் அமரவும். தேர்வுக் கண்காணிப்பாளர் சொல்லுவதை கவனமாகக் காது கொடுத்து கேட்டு அதன்படி நடக்க வேண்டும் .நேராக அமர்ந்து கண்களை மூடி சில நிமிடங்கள் அமைதியாக மூச்சு விட்டு மனதைத் ஆசிவாசப்படுத்திக் கொள்ளலாம் முன்பே நீங்கள் பயிற்சி செய்தபடி ஒவ்வொரு கேள்விக்கும் எவ்வளவு நேரம் ஒதுக்க போகிறீர்கள் என்பதை முடிவு செய்து கொண்டு அதன்படி எழுத ஆரம்பிக்கவும்.தெரிந்த கேள்விகளுக்கு முதலில் பதிலளிக்கவும். கடைசி மணி அடிக்கும் எழுத வேண்டாம். எழுதியதைச்சரி பார்க்க சிறிது நேரம் ஒதுக்க வேண்டும்

Exit mobile version