மழைக் காலத்தில் குழந்தைகளைப் பத்திரமா எப்படிப் பார்த்துக் கொள்வது ?என்கிற கவலை மழை வருவதற்கு முன்னமே அனைவருக்கும் இருக்கும். மழையைப் பார்த்து பயப்படுபவர்கள் நம்ம ஊரில் தான் அதிகம் .ஏனெனில் மழையில் நனைந்தால் \மழைத் தண்ணீர் பட்டால் சளி பிடித்துக்கொள்ளும். ஊதக்காற்று அடித்தால் காய்ச்சல் வந்துவிடும் ஆகிய நம்பிக்கைகள் காலம் காலமாக நம்மிடையே நிலவி வருகின்றன. மழை பெய்ய ஆரம்பித்த உடனே ஓடிவா! ஓடிவா! என்று வீட்டுக்கு உள்ளே குழந்தையை கூப்பிடுவோம்.பள்ளிக்கூடத்தில் இருந்து வரும்போது மழையில் நனைந்து இருந்தால் ஒரே கவலை தான்!!! ஐயய்யோ சளி புடிச்சிக்குமே! என்ன செய்வது! பள்ளிக்கூடத்துக்கு லீவு போடாம எப்படி வீட்டில் வைத்துக்கொள்வது அப்படிங்கிற எண்ணம் மண்டைக்குள் ஓடிட்டு இருக்கும்
மழை இப் புவிக்கும் மனிதர்களுக்கும் மிக முக்கியமானது. மழையைப் பற்றி திருவள்ளுவர் வான்சிறப்பு என்று ஒரு அதிகாரமே எழுதி உள்ளார். மழை இல்லை எனில் இந்த உலகே இல்லை. வெய்யில் காலத்திற்குப் பிறகு மழை வரவில்லை என்றால் பயிர்கள் கிடையாது; விவசாயம் கிடையாது நமக்குத் தேவையான உணவும் கிடையாது. பருவ காலங்களில் மழைக்காலம் மிக முக்கியமானது. காய்ந்து கிடக்கும் நிலத்திற்கு தேவையான தண்ணீரை மழை அமிர்தமாக வழங்கும் காலம் அது தான் இயற்கையோடு இணைந்து வாழும் அனைவருக்கும் மழை என்றால் பயமே இல்லை
மழை சம்பந்தமான இந்த நம்பிக்கைகள் சரியா? என்பது உங்கள் கேள்வியெனில் அதற்கு ஒரே வார்த்தையில் பதில்; இல்லை
மழையில் நனைந்தால் , மழை பெய்தால், வேர்த்தால், தலைக்கு குளித்தால் சளி பிடிக்காது. எத்தனை முறை இதை நாம் சொன்னாலும் மக்கள் நம்புவதே இல்லை. மழைக் காலத்தில் தட்பவெட்ப நிலை குளிர்ச்சியாக இருக்கும் வெய்யில் காலத்தில் இருப்பதைவிட இந்த வகையான சூழலில் சில வைரஸ் கிருமிகள் பல்கிப் பெருகும் .மழைக்காலத்தில் அதிகமாகச் சளிப்பிரச்சினைகள் வருவதற்கு காரணம் இதுதான். இந்த வைரஸ் கிருமிகள் 200 வகைக்கு மேற்பட்டவை. இவைகளுக்குத் தனியாக மருந்துகளும் மாத்திரைகளும் கிடையாது இந்த வைரஸ் கிருமிகள் மூச்சுக்காற்றின் மூலம் ஒருவருடமிருந்து மற்றவர்களுக்கு பரவும் பயன்படுத்திய துணி, பொருட்கள் என மற்றவைகளும் இந்த பரவலை அதிகமாகும் கோவிடைத்தாண்டி வந்துள்ள உங்களுக்கு இது நினைவிருக்கும் .இந்த வகையான வைரஸ் கிருமிகளுக்கு பாதிப்பு அதிகம் இருக்காது தொல்லைகளுக்கு ஏற்ப மருந்துகளும் மாத்திரைகளும் தந்தால் போதும். நோய்க்கிருமி எதிர்ப்பு மருந்தோ வைரஸ் தொற்று எதிர்ப்பு மருந்தோ தேவையில்லை
மழை பெய்யும் போது ஒரு பேருந்து நிறுத்தத்தில் நீங்கள் இருந்தால் சளியோடு வேறு யாராவது இருப்பின் அவர்களிடமிருந்து உங்களுக்கு பரவும் வாய்ப்பு அதிகம் .பள்ளியில் ஒரு குழந்தைக்கு சளஇ இருக்கும்போது அந்த குழந்தையை தனிமைப்படுத்த வேண்டும். சரியாகும் வரை பள்ளிக்கு வரக்கூடாது. ஆனால் இதை பின்பற்றாமல் விட்டால் அந்த குழந்தையினுடைய மூச்சுக்காற்றில் அனைவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடும் சளி காய்ச்சல் வைரஸ் தொற்று குறைந்தபட்சம் ஏழு நாட்கள் ஆகும். ஓய்வும் அதிக நீர் திரவங்களும் தான் முக்கியம் .உங்கள் குழந்தை பள்ளிக்கூடத்தில் இருந்து வரும்போது மழையில் நனைந்திர்ருந்தால் பயப்பட வேண்டாம் .நன்றாக துடைத்து காய விட்டு விடுங்கள்.இதனால எந்த பாதிப்பு ஏற்படாது
வெளிநாடுகளில மழை பெய்தால் குடும்பமே மழைக்கோட்டை அணிந்து கொண்டு மழையில் நனைந்து அந்த அனுபவத்தினை இரசித்து விளையாடுகின்றனர். இடி இடித்து மழை பெய்யும் போது, பெற்றோர் சொல்லும் கவனமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மட்டும் மேற்கொள்ள வேண்டும். சொல்லப்போனால் மழையில் நனைவது மிக சுத்தமான தண்ணீரில் குளிப்பதை போன்றது
மழைக்காலத்திலே வரக்கூடிய மற்றுமொரு தொந்தரவு அசுத்தங்கள் கலந்து வெளிவரும் குடிநீர் அல்லது கழிவுநீர் கலந்த தண்ணீர். தண்ணீர்க் காமாலை என்று சொல்லப்படும் மஞ்சள் காமாலை ஏ,குடற் காய்ச்சல் என்று சொல்லப்படும் டைபாய்டு, எலிக்காய்ச்சல் என்று சொல்லப்படும் லெப்டோஸ்பெரோசிஸ் இவை கழிவு நீரில் கலந்து தண்ணீர் மூலமாக பரவும். மழைக்காலத்தில் கழிவு நீரும் சாக்கடையும் கலந்து ஆறு போல வெள்ளமாக ஓடும் போது நாம் கவனமாக அதைக் கடக்க வேண்டும் காலில் புண் இருந்தால் அல்லது காயம் இருந்தால் அசுத்தமான நீரில் கால் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
நம்முடைய வீட்டில் இருக்கும் குடிநீரைக் கொதிக்க வைத்தோ அல்லது வேறு முறையில் சுத்தப்படுத்தியோ குடிக்கலாம். தேவை இல்லாமல் தெருவோரக் கடைகளிலும் அசுத்தமான உணவகங்களிலும் உணவு உட்கொள்ள வேண்டாம் .பச்சையான சூடாக இல்லாத உணவுகளை சாப்பிட வேண்டாம். சாதாரணமாக உணவிலும் தண்ணீரிலும் அசுத்தம் இருந்தால் பரவக்கூடிய குடல் வயிற்றுப்போக்கு பேதி காலரா முதலிய நோய்களும் மழைக்காலத்தில் அதிகமாக வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.இதில் குறிப்பிட்ட வகையான நோய்களுக்கு தடுப்பு ஊசிகள் உண்டு டைபாய்டு, காலரா, தண்ணீர்க் காமாலை இவை அனைத்திற்கும் தடுப்பு ஊசிகள் உள்ளன எனவே பெற்றோர்கள் இந்த தடுப்பூசிகளை உங்கள் குழந்தைக்கு போட முடிந்தால் நோய் வருவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு .மழைக்காலத்தில் நம் குழந்தைகளை இப்படியாகப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.

