ஆங்கில மூலம்;மருத்துவர்நியீட்டன் லூயிசு
தமிழில் மொழியாக்கம்;மருத்துவர் அறம் செந்தில்
நேரம் எடுத்து படித்து மற்றவர்களுக்கும் பகிரவும்
“வாழ்க்கை என்பது பொது இடத்தில், தனியாக வயலின் வாசித்தலுக்கு ஒப்பானது.அது நாட்கள் செல்லச் செல்ல கற்றுக்கொள்வதும் ஆகும்.”
….சாமுவேல் பட்லர்.
விடலைப்பருவம் என்பது குழந்தைப் பருவத்திலிருந்து பெரியவர்களாக மாறும் பருவமாகும். விதிகளின்றி, இந்த பருவம் 10 வயது முதல் 19 வயது வரை என உலக நல அமைப்பால் வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்கமானது, இதுவரை செயலற்று இருந்த இனப்பெருக்க மண்டலம், விழிக்கும் காலமாகவும், அதன் விளைவாக இனப்பெருக்க இயக்குநீர் சுரப்புகளான ஆண்களுக்கு-விந்து இயக்குநீர். பெண்களுக்கு பெண்மை இயக்குநீர் மற்றும் கருப்பை இயக்குநீர் சுரக்க ஆரம்பிக்கும்.பொதுவாக, பெண் குழந்தைகளுக்கு பூப்படைதல்(முதல் மாத விலக்கு), விடலைப்பருவத்தின் தொடக்கம் என்றிருந்தாலும், சிற்சில மாற்றங்கள் அதற்கு முன்பே நடந்துவிடுகின்றன..
பூப்படைதல் (Menarche)
சராசரியாக, பெண் குழந்தைகளின் மார்பகங்கள் 10 வயதாகும் போது வளரத்தொடங்கும். இதுவே, பருவமடைதலின் வெளியே தெரியும் முதல் அறிகுறியாகும். பூப்படைதல் 10 முதல் 16 வரை, எப்பொழுது வேண்டுமானாலும் நிகழும்.எனினும் சராசரியாக, 12-13 வயதில் நிகழும்..தாய்மார்களின்ன்ன பூப்படைதல், வழக்கத்திற்கு {12-13 ) மாறாக ,காலங்கடந்து நடைபெற்றிருப்பின், அவர்களது குழந்தைகளுக்கும் அவ்வாறே நடக்கும்.பூப்படையும் பெண் குழந்தைகளின் எடை சராசரியாக, 35 – 38 கிலோகிராம் இருக்கும்; ஒல்லியானவர்களைவிட உடல் பருமனானவர்கள் 1 -2 ஆண்டுகள் முன்னதாகவே பூப்படைவார்கள்.
[பெண் குழந்தைகளின் பூப்படைதல் சராசரியாக, 12-13 வயதாகும்.]
*உடல் வளர்ச்சி*
மார்பக வளர்ச்சி தொடங்கியவுடன், பெண் குழந்தைகளின் உயரம் மிக வேகமாக வளர்கிறது. ஆண்டுக்கு 3 அங்குலங்கள்.(7.5 செ.மீ) ஆனால், பூப்படைந்தவுடன், வளர்ச்சி குறைந்து, 2 1/2 அங்குலம் (6.25 செ.மீ )மட்டுமே வளர்ந்து, 16 வயதில் வளர்ச்சி நின்றுவிடுகிறது. பெண் குழந்தைகளுக்கு பருவமடைதல் இரண்டாண்டுகள் முன்பே ஆரம்பித்து விடுவதால், 12-13 வயதில் சிறிது காலத்திற்கு ஆண்களைவிட பெண்கள் உயரமாக தெரிவார்கள்.
ஆண் குழந்தைகளுக்கு பருவமடைதலின் முதல் அறிகுறி, விரைப்பையின் வளர்ச்சியாகும் .ஆனால் பருவமடைதலின் அறிகுறியாகத் தாய் கவனிப்பது, இரவில் விந்து வெளியேறுதல் ஆகும்… இதற்குப்பிறகு உயரம் கூடுவது ஆண்டுக்கு 4-5 அங்குலங்கள்.(10-12.5 செ.மீ) என வேகமாக அதிகரிக்கும் பிறகு,18 வயது வரை தொடர்ந்து வளர்வார்கள். வேகமாக வளரும் இந்தக் காலக்கட்டத்தில், எடை கூடினாலும் பார்ப்பதற்கு மெலிவாக தெரிவார்கள். மேல்நோக்கிய(உயர) வளர்ச்சி நின்ற பிறகே, உடல் தேறி நன்கு வளர்ந்து, தசை ஏற்றமும், வலிமையும் பெறுவார்கள்.
உயரமும் எடையும் படுவேகமாக அதிகரிக்கும் இந்த நேரத்தில் தான், பெரும்பாலான விடலையர் ஆச்சரியப்படும் அளவு உணவினை உண்பர்., எப்போதும் பசியோடே இருப்பது போலிருக்கும். பல ஆண் விடலையர் தங்களின் தந்தையைவிட அதிகமாகவும், பெண் விடலையர் தாயைவிட அதிகமாகவும் சாப்பிடுவர். இது புரியாமல் சில பெற்றோர்கள் விடலையரின் அகோரப்பசிக்கு, வயிற்றில் பூச்சி அல்லது வேறு நலக்குறை காரணமா? என தவிப்பர். தங்களது குழந்தை குண்டாக மாட்டானா ?என உண்மையாகவே கவலைப்படுவர்.
உங்கள் விடலையரின் வளர்ச்சி மூங்கில் போல மேல் நோக்கி இருந்தால், அவருக்கு எவ்வளவு சாப்பிட விருப்பமோ, அவ்வளவு கொடுக்கவும். ஆனால், உடல் குண்டாகத் தொடங்கியதும், தொந்தி வளர ஆரம்பித்ததும், உணவைக் கட்டுப்படுத்த வேண்டும். பெரும்பாலானவர்கள், இந்த திடீர் வளர்ச்சி குறையும் போது, தாமாகவே சாப்பிடுவதை குறைத்துவிடுவார்கள்.
[பெண் குழந்தைகள் 16 வயதிலும், ஆண் குழந்தைகள் 18 வயதிலும் வளர்வதை நிறுத்திவிடுவர்]
மாத விலக்கு பற்றி அம்மாவுக்கு தெரிய வேண்டியவை
உங்கள் குழந்தைகள் உங்களுடையவை அல்லர்; வாழ்க்கைக் காத்திருப்பின் மகன்களாக, மகள்களாக இருப்பர்.
……….கலீல் சிப்ரான்
பள்ளியை விட்டு வழக்கத்தைவிட முன்பே வீடு திரும்பிய கண்மணி, அழுதபடியே இருந்தாள். அவளது அம்மா, என்ன நடந்தது என கேட்டபோது விசும்பலுடன், “எனக்கு புற்றுநோய் வந்துவிட்டது” என்றாள். அவளது உள்ளாடையில் ரத்தம் படிந்திருப்பதை பள்ளியில் பார்த்திருக்கிறாள். அவள் அப்போதுதான் பூப்படைந்திருக்கிறாள். அவளது அம்மா இது சாதாரண ஒன்றுதான் என சமாதானப்படுத்தி, விளக்கமளித்தும், கண்மணி நடந்ததை நினைத்து மிகவும் வருத்தமடைந்தாள். அம்மாவின் குறைவான விளக்கம் அவளுக்கு போதுமானதாக இல்லை. இது எல்லா பெண்களுக்கும், குறிப்பிட்ட வயதுக்கு பின் நடக்கும் தொல்லை என்று கூறி, துப்புரவு துணியை எப்படி பயன்படுத்துவது ?என்று சொல்லிக் கொடுத்தாள்.
தாய் தன் மகளிடம் அவள் பூப்படைவதற்கு முன்பே அதைப்பற்றி தெரிவித்து இருக்க வேண்டும்!
அனைத்து அம்மாக்களுக்கும் இது தெரிந்தாலும், பலர் இதைச் செய்வதில்லை; ஏனெனில், தன் இளவயது மகளுக்கு, என்ன சொல்வது என்று தெரியாமல், ஏதேனும் தவறாக சொல்லி, அதனால் ஏதாகிலும் நல்லதை விட கெட்டதாகிவிடுமோ என்ற அச்சமே காரணம். கண்மணியின் விசயத்திலும் இதேதான் நடந்தது. இதைவிட நல்ல முறையில் இதை புரிய வைக்க முடியுமா? என்று பார்ப்போம்.
உங்கள் மகளிடம் அவள் பூப்படைவதற்கு முன் என்ன சொல்ல ?
உயரமாக வளர ஆரம்பித்தாலும், இப்போது நீ குழந்தை தான். ஆனால், ஒருநாள் உனக்கு ஒரு மிகச்சிறந்த நிகழ்ச்சி நடக்கும். உனது சிறுநீர் கழிக்கும் பகுதிக்கு மேலுள்ள பிறப்பு உறுப்பு பகுதியில் இருந்துவலியில்லாமல் இரத்தப்போக்கு வரும். இதற்குப் பெயர் மாத விலக்கு. அந்த நாளிலிருந்து நீ குழந்தையாக இருக்கமாட்டாய்; பெரியவளாகிவிட்டாய் !என தெரிந்துகொள்! உன்னைப்போல் எனக்கும் இந்த வயதில் இப்படி நடந்தது. எல்லா பெண்களுக்கும் இந்த வயதில் இப்படி நடக்கும். இது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் நடக்கும் பெருமைப்பட. வேண்டிய நிகழ்வாகும். இது ஆரம்பித்த பிறகு, மாதாமாதம் இது போல் நிகழும். தொலைக்காட்சியில் துப்புரவு பட்டைக்கான விளம்பரம் வருவதை பார்த்திருப்பாய் அல்லவா ? நம்மைப் போன்ற பெண்கள் மாத விலக்கு சமயத்தில், இந்த பட்டைகளை உள்ளாடைக்குள் வைத்துவிட்டால், மற்ற வெளி ஆடைகள் ஈரமாகாமல் இருக்கும் எனச்சொல்லவும்.
இதை எப்போது அவளிடம் சொல்ல ?
எல்லா பெண் குழந்தைகளுக்கும் அவளது 12 வது பிறந்தநாளுக்கு முன்பே பூப்படைதலைப்பற்றி சொல்லிவிட வேண்டும். தற்சமயத்திற்கு பூப்படையும் காலம் இல்லை என்றாலும், அவளது வகுப்புத்தோழியர் சிலர் பூப்படைவார்கள்; அவர்களுக்குள் பேசிக்கொள்வார்கள்; அவை தவறானதாகவும், குழப்பமூட்டுவதாகவும், பயமுறுத்துவதாகவும் இருக்கலாம். சில சமயம், 12வது பிறந்தநாளுக்கு முன் நிகழலாம். உங்கள் மகளின் உயரம் வேகமாக கூடினால், இடுப்பு அகலமாகினால், மார்பகங்கள் வளர்ந்தால், காத்திருக்க வேண்டியதில்லை. உடனடியாக இதைப்பற்றி பேச வேண்டும்.
[ பூப்படைவதைப்பற்றி உங்கள் மகளுக்கு அது நடக்கு முன்சொல்ல வேண்டும்; அதை பெண் முதிர்ச்சி அடைவதின் சிறப்பு அறிகுறி !எனப் புரிய வைக்க வேண்டும்.]
பூப்படைந்ததும் உங்கள் மகளிடம் என்ன சொல்ல ?
அவளை வாயார மகிழ்ச்சியாக வாழ்த்துங்கள். நீங்கள் மட்டுமல்ல, உங்களது பெண் உறவினர் அனைவரும் அவளைப் பாராட்ட வேண்டும். உங்கள் மகள் முன்னதாகவே பூப்படைய நேரிட்டால், அவளை அமைதிப்படுத்த வேண்டி இருக்கும். ஏனெனில், அவளது தோழிகள் இதைப்பற்றி பேசிக் கேள்விப்படாத்தால், அச்சப்பட வாய்ப்புண்டு. இப்படி முன்னதாகவே பூப்படையும் போது, அம்மாக்கள், அத்தைகளிடம் ஒரு தவறான அணுகுமுறை உள்ளது; இவ்வளவு சீக்கிரமாகவே இவள் தொல்லை அனுபவிக்கப்போகிறாள் என பரிதாபத்தை வெளிப்படுத்துவது அவளுக்கு அதிக மனக்கவலையைத்தான் கொடுக்கும். அத்தைமார், பாட்டிமார், பக்கத்து வீட்டினர் யாரும் இந்த மாதிரி பேசக்கூடாது என அம்மாக்கள் எச்சரித்துவிட வேண்டும்; மாறாக, அவள் பெரியவளானதற்கு வாழ்த்த வேண்டும். இதற்குப்பிறகு, மாதவிலக்கு பற்றி மேலும் ஆழமாக கலந்துரையாடல் வேண்டும். இதைப்பேசுவதற்கு தயக்கமாக இருந்தால், பக்குவமான அத்தை அல்லது தோழியை விட்டு புரிய வைப்பது உங்கள் கடமையாகும்.
[ உங்கள் மகள் பூப்படைந்தவுடன் அவளை மனமார வாழ்த்துங்கள்!]
குழந்தைகள் எப்படி உருவாகின்றன?
வளர்ந்த ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளும் போது குழந்தை தாயின் கருப்பையில் உண்டாகிறது. ஆணின் பிறப்புறுப்பு பெண்ணின் பிறப்புறுப்பில் இருக்கும்போது விந்து அவனது விரைப்பையிலிருந்து ஆண்குறி வழியாக பெண்ணின் பிறப்புப்பாதையை அடைகிறது. விந்து மேலே நகர்ந்து கருப்பை அடைந்து முட்டையை சந்தித்து சேருகிறது.
இதன் விளைவாக உண்டாகிறது குழந்தை.
குழந்தை எப்படி பிறக்கிறது ?
குழந்தை கருப்பையிலேயே மெதுவாக வளருகிறது. அப்படி குழந்தை வளரும்போது, கருப்பையும் பெரிதானாலேயே குழந்தைக்கு போதுமான இடமிருக்கும்.அதனால் தான் கருவுற்ற தாயின் வயிறு பெரிதாகிறது. 9 மாதங்கள் கழித்து, குழந்தை வெளியே வர வேண்டிய நேரமாகிவிட்டது. ஒரு நாள் தாய்க்கு விட்டு விட்டு அடிவயிற்று வலி ஆரம்பிக்கும். இதை மகப்பேறு என்னும் பிரசவ வலி என்று சொல்வர்.
கருப்பை என்பது அடியில் திறந்திருக்கும் ஒரு பெரிய பை போன்றதாகும்.ஒவ்வொரு முறையும் தாய்க்கு வலி வரும்போது, கருப்பையின் மேல்பகுதி கொஞ்சமாக சுருங்கி, கருப்பையின் அடிப்பகுதியும், பிறப்புப்பாதையும் விரிந்து கொடுக்கும்.
இறுதியாக, சில மணி நேரங்களுக்கு பின், மேல்பகுதி நிறைய சுருங்கி, அடிப்பகுதி நிறைய விரிந்து, குழந்தை கருப்பையிலிருந்து வெளியே தள்ளப்பட்டு, பிறப்புப்பாதை வழியாக வெளி வருகிறது.
மாதவிலக்கைப்பற்றி அம்மாக்கள் தெரிந்து கொள்ள நினைக்கும் சில விளக்கங்களைப்பற்றி சொல்வோம்.
*மிக முன்னதாக வரும் மாதவிலக்கு*:
கடந்த காலங்களில் இருந்ததை விட இன்றைக்கு மாதவிலக்கு முன்னதாகவே வருகிறது; பெரும்பாலும் 13 வயதிற்குள் நடக்கிறது. 10 வயதுக்கு முன் நடந்தால், மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். இதுவும் தீதற்றதாக இருந்தாலும், அரிதாக சில சுரப்பு கோளாறுகள் இருக்க வாய்ப்புள்ளது.
மிக பின்னதாக வரும் மாதவிலக்கு:
16 வயதடைந்தும் உங்கள் மகள் பருவமடையவில்லை என்றால் மருத்துவரின் ஆலோசனை பெறவும்.14 வயதில், அவள் உயரம் ,மார்பகங்கள் வளர்ந்தும், பருவமடையவில்லை எனில் ஆலோசனை பெறுதல் வேண்டும். காலம் கடந்து மாதவிலக்கு வருவதற்கு பொதுவான காரணம் குடும்ப உடல்வாகு, அதாவது தாய்க்கும், தமக்கையரும் மிக பின்னதாக உ.ம்.15 வயதில் பருவமடைதல் நிகழ்ந்தால், இவளுக்கும் 15 வயதாகும் போது நடக்கும்.ஆனால், வேறு சில காரணங்கள் இருப்பின் அதற்கான சிகிச்சைகளும் உள்ளன:எ-டு தைராய்டு சுரப்பு குறைதல்.
[மாதவிலக்கின் சிக்கல்களை எளிதில் சரி செய்யலாம். உங்கள் மகள் 16 வயதிற்குள் பருவமடையவில்லை எனில், அடிக்கடி உதிரப்போக்கு, பெரும் உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிலக்கு, பிறப்புறுப்பு கசிவு ஆகியவற்றுக்கு மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.]
மிக தள்ளி மாதவிலக்கு வருவது ஏன்?
முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதவிலக்கு ஒழுங்கற்று தாமதித்து, குறைந்த அளவிலும் இருக்கும். இனப்பெருக்க மண்டலம் முதிர்வதற்கு நாளாவதே இதற்கு காரணம். முதிர்ந்த பின் ஒழுங்கான முறையில் மாதாமாதம் ஏற்படும். மாதவிலக்கு மாதாமாதம் நடப்பது
என சொல்வது அது 28-30 நாட்களுக்கு ஒரு முறை தடப்பதாலாகும். ஆனால், இது மாறுபடும்; நல்ல நலமுடன் இருக்கும் பெண்களுக்கும் 3 முதல் 6 வாரங்களுக்கு ஒரு முறை நிகழும். 45 நாட்களுக்கு ஒரு முறை வந்தாலும் அதுவும் இயல்பாக கருதப்படும்; ஓரளவு இயல்பான பிறகு. ஒழுங்கற்றதாகவும், அளவில் மிகவும் குறைந்ததாக உதிரப்போக்கு இருந்தால், மருத்துவரை அணுக வேண்டும்.
அடிக்கடி (அ) பெரும் உதிரப்போக்கு
அடிக்கடி உதிரப்போக்கு ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். மாதவிலக்மின் முதல் நாளுக்கும், இரண்டாவது மாதவிலக்கின் முதல் நாளுக்கும் உள்ள இடைவெளி 3 வாரத்திற்கு குறைவாக இருந்தால் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். உதிரப்போக்கு மிக அதிகமாக போவதாக உணர்ந்தால், அதில் இரத்தக்கட்டி இருந்தால், களைப்போ, உடல்வெளுத்தால் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.
பிறப்புறுப்பு கசிவு:
சில நேரங்களில், பல பெண்பிள்ளைகளுக்கு, பிறப்புறுப்பிலிருந்து லேசான நீர் போன்ற கசிவு வரலாம்; மாதவிலக்குக்கு முன் இது அதிகரிக்கும். இது இயல்பான ஒன்றாகும். ஆனால், கசிவு அளவுக்கதிகமாக இருந்தாலோ, மஞ்சள் நிறத்திலோ, இரத்தம் கலந்தோ, நாற்றம் அடித்தாலோ, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலுடன் இருந்தாலோ, அதிக அரிப்பு ஏற்பட்டாலோ, நோய்த்தொற்று உள்ளது என்றறிந்து சிகிச்சை பெற வேண்டும்.
முடிவுரை
உங்கது மகள் “இதை அறிந்து கொள்வதற்கு மிகவும் சின்னவள்” என்று பாசாங்கு செய்ய வேண்டாம். அப்படி நினைத்தால் அவள் சகமாணவிகள் தரும் விவரம் கேட்டு, தவறாக புரிந்துகொண்டு பயப்படுவாள். அதனால், உண்மைகளை சரியானவர்களிடம் தெரிந்து கொள்வது நல்லது. அவர் வேறு யாருமல்ல – அவளது தாயாரான நீங்கள் தான்.”

